ஸ்ரீ மிருணாளினி மாதா — குருதேவரின் ஒரு வழித்தடம்

ஶ்ரீ மிருணாளினி மாதா -தலைமைப் பதிப்பாளர்- SRF

ஆகஸ்ட் 3, 2017 அன்று, எங்கள் அன்பிற்குரிய சங்கமாதாவும் தலைவருமான ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதா, நிலையான பேரின்ப சாம்ராஜ்யத்திற்காக மற்றும் பரம்பொருளில் விடுதலைக்காக அமைதியுடன் இந்த உலகத்தை விட்டு நீத்தார். பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளால் நல்மாறுதல் அடைந்த நூறாயிரக்கணக்கான உண்மை தேடுபவர்களுக்கு ஞானம், அன்பு மற்றும் புரிதலின் ஒரு வழிகாட்டும் ஒளியான ஸ்ரீ மிருணாளினி மாதா எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக குருவின் ஆன்மீக மற்றும் மனிதநேயப் பணிகளுக்கு சேவை செய்வதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

பரமஹம்ச யோகானந்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டவர் .

ஸ்ரீ மிருணாளினி மாதா பரமஹம்ஸரின் முக்கிய சீடர்களில் ஒருவராக நினைவு கூரப்படுவார். அவரது காலத்திற்குப் பிறகு யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/செல்ஃப் ரியலைசேஷன் ஃபெல்லோஷிப் பணிகளைத் தொடர்வதற்கு, குருதேவரால் தனிப்பட்ட முறையில் பயிற்சி அளிக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவில் ஒருவராக இருந்தார். மேலும் அவர் 2011 இல் ஒய்எஸ்எஸ்/ எஸ்ஆர்எஃப் இன் நான்காவது தலைவர் ஆனார். 1955 லிருந்து 2010-ல் இறக்கும் வரை சங்கத் தலைவியாக இருந்த ஸ்ரீ தயா மாதாவிற்கு பிறகு, அவர் தலைமைப் பொறுப்பை ஏற்றார். பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளை வெளியிடுவதற்கு பொறுப்பான ஒய்எஸ்எஸ்/எஸ்ஆர்எஃப் வெளியீடுகளின் தலைமை பதிப்பாசிரியராகவும் அவர் பணியாற்றினார் – பரமஹம்ஸராலேயே அதற்குப் பயிற்சி அளிக்கப்பட்டார் மற்றும் அவரது இறுதிக்காலம் வரை அப்பொறுப்பை நிர்வகித்தார். தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பு, மிருணாளினி மாதா எஸ்ஆர்எஃப்-ன் துணைத் தலைவராக 45 ஆண்டுகள் பணியாற்றினார். ஒய்எஸ்எஸ்/எஸ்ஆர்எஃப் சன்னியாச அமைப்புக்கான ஒட்டுமொத்த வழிகாட்டுதலில் ஸ்ரீ தயா மாதாவிற்கு நெருக்கமாக உதவினார் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் சங்கத்தின் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் சேவைகளைப் பொறுப்பேற்று நடத்தினார்.

குருவிடமிருந்து அவர் கிரகித்த ஆன்மிக ஒளி மற்றும் ஞானத்தை பிறருக்கு வழங்குவது

குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தரின் பணி புரிவதற்காக அவர் ஏற்றுக்கொண்ட ஒவ்வொரு பொறுப்பிலும், மிருணாளினி மாதாஜி அவரது போதனைகளின் தெய்வீக ஞானத்தால் வழிநடத்தப்பட்டார் – அவை அவரை முழுமையாக ஊடுருவி இருந்தது – அவரது விசுவாசம் மற்றும் குருவின் மீது உள்ள முழுமையான நம்பிக்கையும். குருவிடமிருந்து அவர் பெற்ற தனிப்பட்ட பயிற்சியின் காரணமாக, அவர் சன்னியாசிகள் மற்றும் இல்லற பக்தர்கள் இருவருக்குமே – ஆன்மீக வாழ்வு பற்றிய குருவின் போதனைகள், அவரது உயர்ந்த நெறிமுறைகள், அதே சமயம் உண்மையாக இறைவனை நாடுபவர்கள் அனைவருக்கும் அவர் அளித்த அன்பான ஊக்கம், இவற்றைப் பற்றி எடுத்துரைப்பதற்கு அவர் மிகவும் தகுதியானவராக விளங்கினார்.

குருதேவருடன் இருந்த காலங்களில் அவருடனான தனது அனுபவங்களை அவர் பகிர்ந்துகொண்ட உரைகள் மற்றும் எழுத்துகளிலிருந்து பலர் ஊக்கம் பெற்றனர். பரமஹம்ஸரின் ஆசிரமங்களில் சன்னியாசிகளுக்கான பயிற்சித் திட்டங்களை ஏற்பாடு செய்வதிலும், ஆசிரம வாழ்க்கையில் நுழைபவர்களுக்கு அவரது லட்சியங்கள் பற்றிய ஒரு முழுமையான அடித்தளம் அளிப்பதிலும் மற்றும் குருவிடமிருந்து தான் பெற்ற பயிற்சியை அவர்களுக்கு வழங்குவதிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

பல வருடங்களுக்கு முன்பு, அவர் இளம் வயதினராக இருந்த பொழுதே, பரமஹம்ஸர் அவரிடம் கூறினார், “என்றாவது ஒரு நாள், நீ பலருக்கு பயிற்சி அளிப்பாய்.” அந்த நேரத்தில் புரிந்து கொள்ளத்தக்க வகையில் அவர் அதிர்ச்சி அடைந்தாலும் (அந்தப் பாதையில் அவரே மிகவும் புதியவர்), ஆண்டுகள் செல்லச் செல்ல ஆயிரக்கணக்கானோர் குருதேவரின் அந்த தொலைநோக்கு தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தால் ஆசீர்வதிக்கப்பட்டனர். சன்னியாசிகள் மற்றும் சாதாரண உறுப்பினர்கள் இருவருக்கும், மிருணாளினி மாதா, ஒருவருக்கு இறைவன் மற்றும் குரு மற்றும் ஆன்மாவின் தெய்வீக ஆற்றலில் நம்பிக்கை இருப்பதுடன், தியானம் மற்றும் தன்னை மாற்றுவதற்கு செய்யும் தினசரி முயற்சிகள்- இவற்றில் பொறுமையுடன் ஈடுபடுவதும் – ஆன்மீக முன்னேற்றத்திற்கு இன்றியமையாதது என்பதை அவர்களிடம் ஊக்குவித்தார். பக்தர்கள் தங்களுக்குள் அந்த வரம்பற்ற ஆற்றலைக் காணவும் மற்றும் அவர்கள் அதை தங்களது சொந்த வாழ்க்கையில் வெளிப்படுத்தவும் பல முறை அவர் அவர்களுக்கு ஊக்கமளித்தார்.

அவர் கூறினார் : “இந்தக் கணத்தில் நீங்கள் இவ்வாறு விளங்குவதற்கு உங்களைத் தவிர வேறு யாரும் காரணமல்ல. உங்களுடைய சொந்த விருப்பத்தின் பேரில் நீங்கள் எதை உருவாக்கினீர்களோ அதில் இறைவன் தலையிடவில்லை. நீங்கள் இப்படி இருக்க வேண்டும் என்று வேறு எந்த மனிதனும் கட்டளையிடவில்லை. உங்களது சரியான அல்லது தவறான செயல்கள், எண்ணங்கள், நோக்கங்கள் மற்றும் ஆசைகளால் தான் நீங்களே உங்களை இன்று இவ்வாறு உருவாக்கியுள்ளீர்கள். நாமே நம் விதியை உருவாக்கி இருந்தால், நம் விதியை மாற்றும் சக்தியும் நம்மிடமே உள்ளது. ஸ்ரீ யுக்தேஸ்வர் கூறியுள்ளார் : “நீங்கள் இப்பொழுது ஆன்மீக முயற்சியை மேற்கொண்டால், எதிர்காலத்தில் எல்லாம் மேம்படும் “. எல்லாவற்றிற்கும் மேலாக நான் உங்கள் மனதில் எதை ஆழப்பதிக்க விரும்புகிறேன் என்றால் அது முழு உணர்வுடனான ஆன்மீக முயற்சி — உங்கள் வாழ்வில் எந்த ஒரு குறையையோ அல்லது வரம்பையோ ஏற்காமல் இருப்பது தான்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் எஸ்ஆர்எஃப் பாதையை கண்டறிதல்

ஸ்ரீ மிருணாளினி மாதா 1931இல் கான்சாஸின் விசிட்டாவில் பிறந்தார். சன்னியாச வாழ்க்கைக்கு முன் மெர்னா பிரவுன் என்று அறியப்பட்ட அவர், தனது இளமைக் காலத்தின் பெரும் பகுதியை தெற்கு கலிபோர்னியாவில் கழித்தார். மற்றவர்களால் ஆழ்ந்த மதஉணர்வும் மற்றும் கூச்ச சுபாவமுள்ள குழந்தை என்று வர்ணிக்கப்பட்ட இளம் மெர்னா தனது 14 வது வயதில் பரமஹம்ஸரை எஸ்ஆர்எஃப்-ன் சான் டியோகோ கோவிலில் முதலில் சந்தித்தார். தனது மூத்த மகள் குருவின் போதனைகளில் ஆர்வம் காட்டிய பின்னர், சான்டியாகோ கோவிலில் பரமஹம்ஸரின் சேவையில் அவரது தாயார் கலந்து கொள்ளத் தொடங்கினார் மற்றும் குருவை பலமுறை தனிப்பட்ட முறையில் சந்தித்தார். பரமஹம்ஸர் மிருணாளினி மாதாவை சந்திப்பதற்கு முன்பே அவரது எதிர்காலம் குறித்து ஆழ்ந்த ஆர்வம் காட்டினார். மேலும் கோவிலுக்கு அவரை அழைத்து வரும்படி அவரது தாயை ஊக்குவித்தார். பல வேண்டுகோளுக்குப் பிறகே, அவரால் மிருணாளினி மாதாவை ஞாயிற்றுக்கிழமை சேவைகளில் ஒன்றிற்கு தன்னுடன் வர இசைய வைக்க முடிந்தது. அவர் வளர்ந்த தேவாலயத்திற்கு விசுவாசமாக இருந்ததால், மிருணாளினி மாதா வேறு மதத்தின் சேவைகளில் கலந்து கொள்ளத் தயங்கினார். ஆனால் பரமஹம்ஸரின் போதனைகள் கிறிஸ்து கற்பித்த அதே தத்துவத்தை அழகாக பிரதிபலிப்பதாக அவரது தாயார் விளக்கிய பிறகு, அவர் எஸ்ஆர்எஃப் கோவிலுக்குச் செல்ல ஒப்புக் கொண்டார். கையில் பைபிள் மற்றும் மனஉறுதியுடன், இளம் மெர்னா 1945 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு நாள் எஸ்ஆர்எஃப் சான்டியாகோ தேவாலயத்தில் நுழைந்தார். அவர் பரமஹம்ஸ யோகானந்தரை முதன்முதலில் பார்த்தவுடன், ‘மிக அபரிதமான அமைதி உணர்வும்’ மற்றும்’ பழங்காலத்திலிருந்தே தெரிந்த ஒன்று’ என்ற உணர்வும் தன்னுள் நிரம்பியது என்று பின்னாளில் இந்நிகழ்வு குறித்து விவரித்தார்,.”

பரமஹம்ஸ யோகானந்தருடன் இருந்த வருடங்கள்

வரும் காலத்தில் தனது பணியில் அவர் முக்கிய பங்கு வகிக்கப் போகிறார் என்று பரமஹம்சர் உடனேயே கண்டுகொண்டார். பல வருடங்கள் கழித்து, மறைவதற்கு சற்று முன், அவர் மிருணாளினி மாதாவிடம் அந்த முதல் சந்திப்பைப் பற்றி கூறினார்: ” உனக்கு தெரியுமா, நீ சான்டியாகோவில் உள்ள அந்த கோவிலுக்குள் வந்த பொழுது, இந்தப் பிறவியில் நான் உன்னை முதன் முதலாக பார்த்த போது, நீ என்னுடன் இருந்த முந்தைய காலத்தின் முழு வரலாற்றையும் பார்த்தேன், எதிர்காலத்தையும் பார்த்தேன் …… அன்று நான் பார்த்ததில் சிறிதளவு மாற்றம் கூட இல்லை.

பரமஹம்சரை சந்தித்த உடனேயே, எஸ்ஆர்எஃப் சன்னியாச சமூகத்தில் ஒரு சன்னியாசியாக தனது வாழ்க்கையை இறைவன் மற்றும் குருவிற்கு அர்பணிப்பதற்கான ஒரு அழைப்பை அவர் உணர்ந்தார். குருதேவர் அவர் தனது இளநிலை பள்ளிக் கல்வியை முதலில் முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பின்னர், தனது பெற்றோரின் அனுமதியுடன், ஜூன் 10, 1946 அன்று, தனது பதினைந்தாவது வயதில், அவர் கலிபோர்னியாவின் என்ஸினிடாஸில் உள்ள எஸ்ஆர்எஃப் ஆசிரமத்திற்கு வசிக்க வந்தார். என்ஸினிடாஸில் பரமஹம்சரின் தனிப்பட்ட வழிகாட்டுதல் மற்றும் ஆசிரம பயிற்சியைப் பெற்றுக்கொண்டே உயர்நிலை பள்ளிக் கல்வியை பூர்த்தி செய்தார். அப்பொழுது அந்த ஆசிரமத்தின் பொறுப்பாளராக இருந்த குருதேவரின் உயர்ந்த சீடரான ஸ்ரீ ஞான மாதா, அவருக்கு அன்பான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் வழிகாட்டியாகவும் மற்றும் ஆன்மீகத் தாயாகவும் விளங்கினார். ( மிருணாளினி மாதாவின் தாயாரும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஆசிரமத்தில் சேர்ந்தார், அவரது சன்னியாச தீட்சைக்கு பிறகு மீரா மாதா என்ற பெயரை ஏற்றார்.) அவர் ஆசிரமத்தில் சேர்ந்து ஒரு வருடமே ஆகியிருந்த போதும், கடந்த பிறவிகளில் இருந்து வந்த இந்த இளம் சீடரின் விசேஷமான ஆன்மீக முதிர்ச்சியை நன்கு அறிந்த பரமஹம்சர், 1947 இல் சன்னியாச தீட்சையை தானே அவருக்கு வழங்கினார். ஆன்மீக மலர்ச்சியின் பண்டைய அடையாளமான தாமரை மலரின் தூய்மையைக் குறிக்கும் ‘மிருணாளினி’ என்ற சன்னியாச நாமத்தை அவருக்காக குரு தேர்ந்தெடுத்தார்.

குருவின் போதனைகளை வெளியிடுவதில் அவரது பங்கு

2004 இல் லாஸ் ஏஞ்சலீஸில் நடந்த எஸ்ஆர்எஃப் உலக மாநாட்டின் போது, பரமஹம்ஸ யோகானந்தரின் நான்கு நற்செய்திகள் பற்றிய விளக்க உரை அடங்கிய ‘தி செகண்ட் கம்மிங் ஆஃப் கிரைஸ்ட்’ புத்தக வெளியீடு.

மிருணாளினி மாதாவின் ஆசிரம வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே, குருதேவர் அவரது பங்கு குறித்த தனது வருங்கால திட்டம் பற்றி மற்ற சீடர்களுடன் உரையாடினார் – குறிப்பாக யோகதா சத்சங்கம்/செல்ஃப்-ரியலைஸேஷன் ஃபெல்லோஷிப் பாடங்கள், படைப்புகள் மற்றும் உரைகள் ஆகிய வெளியீடுகளின் பதிப்பாசிரியராக அவரது எதிர்கால பொறுப்புகள் குறித்து. “அவர் இந்தப் பணிக்காகவே இறைவனால் நியமிக்கப்பட்டவர்” என்று அவர் ராஜரிஷி ஜனகானந்தாவுக்கு 1950 -இல் தன் கையால் எழுதப்பட்ட கடிதத்தில் கூறினார்.” அவருடைய ஆன்மாவை நான் முதலில் பார்த்த பொழுது இறைவன் அதை எனக்கு உணர்த்தினார்”.

ஸ்ரீ தயா மாதா எழுதினார்,” குருதேவர் அவரது (மிருணாளினி மாதாவின்) எதிர்கால பொறுப்பை மற்றும் அதற்காக தான் அவரை தயார் செய்வதையும் எங்கள் அனைவருக்கும் தெளிவுபடுத்தினார். தனது போதனைகளின் ஒவ்வொரு அம்சத்திலும் தனிப்பட்ட முறையில் அவருக்கு உபதேசம் வழங்கினார் மற்றும் அவர் தனது எழுத்துகள் மற்றும் உரைகளைத் தொகுத்து வழங்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் தெரிவித்தார்” .

பின் வந்த ஆண்டுகளிலிருந்து அவரது இறுதிக் காலம் வரை, தினசரி தொடர்புகள் மூலமாக பரமஹம்ஸர் மிருணாளினி மாதாவின் ஆன்மீகப்  பயிற்சியில் மிகுந்த கவனத்துடன் ஈடுபட்டார். அவரது கையெழுத்துப் பிரதிகள் மற்றும் படைப்புகளை எவ்வாறு வெளியிடுவதற்கு ஏற்பத்தயார் செய்வது மற்றும் அவரது மறைவுக்குப் பின் வெளியிடுவது குறித்து அவருக்குத் தனிப்பட்ட முறையில் அறிவுரைகளை வழங்கினார்.

இந்தியாவிற்கு பலமுறை வருகை புரிதல்

தொடர்ந்த ஆண்டுகளில், ஸ்ரீ மிருணாளினி மாதா பரமஹம்ஸ யோகானந்தரின் யோகதா சத்சங்க சொஸைடியின் வளர்ச்சி மற்றும் பணிக்கு வழிகாட்ட, ஸ்ரீ தயா மாதாவிற்கு உதவ இந்தியாவிற்குப் ஆறுமுறை வருகை புரிந்தார். அவர் ஒய்எஸ்எஸ் ஆசிரமங்களில் அதிக நேரம் செலவிட்டார் மற்றும் துணைக்கண்டத்தின் முக்கிய நகரங்களில் அவரது போதனைகள் குறித்து உரையாற்றினார். குரு-சிஷ்ய உறவு உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்த அவரது உரைகள் யோகதா சத்சங்க இதழிலும், புத்தக வடிவிலும் ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளிலும் வெளியிடப்பட்டுள்ளன.

மிருணாளினி மாதா
உறுப்பினர்களுக்காக அவ்வப்பொழுது எழுதியுள்ள அறிவுரை மற்றும் ஊக்கமளிக்கும் கடிதங்கள் இவைகளுடன், ஆழ்ந்த ஞானம், இரக்கம் மற்றும் நகைச்சுவை ஆகியவை அடங்கிய அவரது தனித்துவம், அவருக்கு உலகெங்கிலும் உள்ள ஒய்எஸ்எஸ்/எஸ்ஆர்எஃப் உறுப்பினர்களின் அன்பான மரியாதையையும் ஆழ்ந்த நன்றியையும் பெற்றுத் தந்தது.

1973-எம்எம்-ராஞ்சி 1973-3A
இந்தியாவின் ராஞ்சியில் உள்ள ஒய்எஸ்எஸ் பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கு விருதுகள் வழங்குதல், 1973

தொடர்ந்து எழுச்சியூட்டும் அவரது வாழ்க்கை உதாரணம்

ஒய்எஸ்எஸ்/எஸ்ஆர்எஃப் உறுப்பினர்கள் மற்றும் உலக மக்கள் – மிருணாளினி மாதாவின் பல தசாப்த கால தன்னலமற்ற மற்றும் இறை உணர்வுடன் கூடிய சேவை மூலம் வெளியிடப்பட்ட -இறைவனால் எழுச்சியூட்டப்பட்ட ஞானம் மற்றும் உண்மையின் விலைமதிப்பற்ற செல்வமான பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளினால் — என்றென்றும் ஆசீர்வதிக்கப்படுகின்றனர். ஆண்டுகள் செல்லச் செல்ல, குருதேவரின் விருப்பத்தை இவ்விதம் நிறைவேற்றியதன் மூலம் அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பு , அவரது அக மற்றும் புற வாழ்க்கையின் தெய்வீகச் சாதனைக்கு ஒரு நினைவுச் சின்னமாக என்றும் நிலைத்திருக்கும்.

எப்பொழுதும் இறை உணர்விலேயே ஆழ்ந்திருக்கும் ஸ்ரீ மிருணாளினி மாதா, பக்தர்களுக்கு இந்த அறிவுரையை வழங்கினார்:

“ஒரு சிறு இறை அனுபவம் உண்மையாகவே பெற்ற எந்த ஒரு நபரும் மீண்டும் ஒரு போதும் முன்பு போலவே இருக்கமுடியாது -வரம்புக்குட்பட்ட உலக உணர்வுடன் முன்பு போல திருப்தி அடைய முடியாது. நீங்கள் உலகத்தையோ அல்லது அதன் முழுமையான இன்பங்களையோ அனுபவிப்பதை நிறுத்த மாட்டீர்கள் ; புறத்திலிருந்து உங்களது விழிப்புணர்வு அகத்தே உண்மையை நோக்கித் திரும்பும். உடலின் வடிவங்கள் மற்றும் வரம்புகள், பந்தங்கள் மற்றும் ஆசைகள், விருப்பு வெறுப்புகள், சந்தோஷங்கள் மற்றும் துயரங்களுடன் அடையாளப்படுத்திக் கொள்வதற்குப் பதிலாக, வாழ்க்கையின் அனைத்தையும் இறைவனின் வெளிப்பாடாக நீங்கள் பார்க்கிறீர்கள். நீங்கள் எல்லாவற்றையும் அவனுடைய எல்லையற்ற ஒளி மற்றும் உணர்விலிருந்து தோன்றியதாக உணர்கிறீர்கள். உங்கள் குடும்பத்தின் அன்பையும் தோழமையையும் நீங்கள் அனுபவிக்கிறீர்கள், ஏனென்றால் அந்தக் குடும்பத்தை நேசிக்க அவன் உங்களுக்கு வழங்கிய அவனுடைய அன்பு உங்கள் மூலமாக பாய்வதை உணர்கிறீர்கள். அவர்களிடமிருந்து நீங்கள் பெறும் அன்பில், நீங்கள் ஒரு சுயநலமான, உடல்சார்ந்த, வரம்புக்குட்பட்ட மனித உணர்ச்சியை மட்டுமல்ல எல்லையற்ற தெய்வீக அன்பையும் உணர்கிறீர்கள். நீங்கள் ஒரு ரோஜா அல்லது இறைவன் உருவாக்கிய எண்ணற்ற அழகான விஷயங்களைப் பார்க்கும் போது, அந்த அழகை உருவாக்கிப் பேணுகின்ற படைப்பாளனின் எல்லையற்ற ஒளியையும், சித்தத்தையும் அந்த இதழ்களின் அழகின் பின்னால் காண்கிறீர்கள்.

“நீங்கள் புறத்தே எந்தவிதமான அனுபவங்களைச் சந்திக்க நேர்ந்தாலும் சரி, அல்லது அந்த அனுபவங்களின் மூலம் நீங்கள் என்ன பாடங்களைக் கற்றுக் கொண்டாலும் சரி, உங்களது உணர்வுநிலை எப்பொழுதும் அந்த ஒரு மெய்ப் பொருள் – உங்களை என்றும் கைவிடாத, மாற்றமில்லாத, நித்தியமான – இறைவன் மீதும், அவனுடனான உங்களது உறவின் மீதும் மையமாக நிலைத்திருக்கட்டும்.

2015 இல் லாஸ் ஏஞ்சலீஸில் எஸ்ஆர்எஃப் உலக மாநாட்டின்போது, எஸ்ஆர்எஃப் உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் சத்சங்கம்

அவருடைய அன்பான இருப்பை நாம் தொடர்ந்து உணர்ந்திடுவோம் மற்றும் அவருடைய ஆலோசனை வழிகாட்டுதல்படி நம் சித்தத்தை ‘அந்த ஒரு நித்திய மெய்ப்பொருளான – இறைவன்’ மீது ஆழ்ந்து ஊன்றிட எப்பொழுதும் முயற்சி செய்வோம்.

நமது அன்பிற்குரிய ஸ்ரீ மிருணாளினி மாதாவுக்கு நமது இதயத்தின் அன்பையும் நன்றியையும் தெரிவிக்க எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள். அவருடைய தன்னலமற்ற சேவை, நட்பு மற்றும் விசுவாசம் நிறைந்த வாழ்க்கை, அவர் அறிவுரைப்படி இறைவனது பிரதிபிம்பம் உங்களுள் வெளிப்படுமாறு, உங்கள் வாழ்க்கையை இறைவன் மற்றும் குரு வடிவமைக்க அனுமதிப்பதற்கு ஊக்குவிக்கட்டும் .

ஸ்ரீ மிருணாளினி மாதாவின் வாழ்க்கை பற்றிய உங்களது நினைவுகள் அல்லது சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ள நாங்கள் உங்களை அழைக்கிறோம்.

இதைப் பகிர