குருதேவர்களின் பரம்பரை

Bhagawan Krishna

பகவான் கிருஷ்ணர்

பகவான் கிருஷ்ணர் ஒரு அவதாரமாக (இறைவனின் அவதாரம்) இந்தியா முழுவதும் வணங்கப்படுகிறார்.
கிருஷ்ணரின் உன்னதமான போதனைகள் பகவத் கீதையில் முத்தாய்ப்பாக வைக்கப்பட்டுள்ளன. மிகவும் போற்றப்படும் அவரது இரண்டு தொகுதி விளக்கவுரையில், கீதை யைப் பற்றி, பரமஹம்ஸ யோகானந்தர் இவ்வாறு எழுதியுள்ளார்:

“பகவத் கீதை இந்தியாவின் மிகப் பிரியமான தர்ம சாத்திரமாகும், இது சாத்திரங்களுக்கெல்லாம் பெரிய சாத்திரம். இது… தர்ம சாத்திரங்களின் நம்பகத்தன்மைக்கு ஒரு உச்ச ஆதாரமாக அனைத்து ஆசான்களும் சார்ந்திருக்கும் ஒரு புத்தகம்…..”

“கீதை அற்புதமான நான்கு வேதங்களின் சாரம், 108 உபநிஷத்துகள் மற்றும் இந்து தத்துவத்தின் ஆறு அமைப்புகளின் சாரம் என்று அறிவிக்கப்படும் அளவிற்கு ஒரு ஆன்மீக வழிகாட்டியாக அத்துணை விரிவானாதாக உள்ளது……பிரபஞ்சத்தின் முழு மெய்யறிவும் கீதையில் நிரம்பியுள்ளது. மிக மிக ஆழ்ந்த, அதே சமயம் ஆறுதல்தரும் அழகும் எளிமையும் கொண்ட உட்பொருளை வெளிப்படுத்தும் மொழியில் அமைக்கப்பட்டுள்ள கீதை புரிந்து கொள்ளப்பட்டு, மனிதப் பெரு முயற்சி மற்றும் ஆன்மீக பிரயத்தனங்களின் அனைத்து மட்டங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது –அகன்ற பரப்பெல்லையுடனான மனிதர்கள், அவர்களின் மாறுபட்ட இயல்புகள் மற்றும் தேவைகள் அனைத்தையும் உள்ளடக்கியவாறு. ஒருவர் இறைவனிடம் திரும்பிச் செல்லும் பாதையில் எந்தப் பகுதியில் இருந்தாலும், பயணத்தின், அந்தப் பகுதிக்கு, கீதை ஒளியூட்டுகிறது…..”

“கிருஷ்ணர் கீழை நாடுகளுக்கு யோகத்தின் தெய்வீக முன்மாதிரியாக இருக்கிறார்; மேலை நாடுகளுக்கான இறை-ஐக்கியத்தின் முன்மாதிரியாக கிறிஸ்து இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டார்…. கிருஷ்ணரால் அர்ஜுனனுக்கு போதிக்கப்பட்ட, மற்றும் கீதையின், அத்தியாயங்கள் IV:29 மற்றும் V:27–28 -ல் குறிப்பிடப்பட்டுள்ள கிரியா யோக உத்தி, உன்னத ஆன்மீக விஞ்ஞானமாகிய யோக தியானம் ஆகும். பொருள்முதல்வாத யுகங்களில் மறைந்த இந்த அழிக்க முடியாத யோகம், தற்கால மனிதனுக்காக மகாவதார் பாபாஜியால் உயிர்ப்பிக்கப்பட்டது மற்றும் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் குருமார்களால் கற்பிக்கப்பட்டது.”

JESUS CHRIST

இயேசு கிறிஸ்து

பரமஹம்ஸ யோகானந்தருடைய பணிகளின் இன்றியமையாத இலக்குகளில் ஒன்று, “பகவான் கிருஷ்ணரால் போதிக்கப்பட்ட ஆதி யோகத்திற்கும் இயேசு கிறிஸ்துவினால் போதிக்கப்பட்ட ஆதி கிறிஸ்துவத்திற்கும் உள்ள முழுமையான இணக்கத்தையும் அடிப்படையான ஒற்றுமையையும் வெளிப்படுத்துதல்; மற்றும் சத்தியத்தின் இந்தக் கொள்கைகளே எல்லா உண்மையான சமயங்களுக்கும் பொதுவான விஞ்ஞானப் பூர்வமான அடிப்படை என்பதைக் காண்பித்தல்.”

இயேசு விசுவாசம், அன்பு, மன்னிப்பு ஆகியவை கொண்ட எளிய தத்துவத்தைப் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினார். அவர் அடிக்கடி எல்லாக் காலத்திற்குமான ஒழுக்கநெறிகள் நிறைந்த உவமைகளைக் கூறுவார். ஆனால் அவரது நெருங்கிய சீடர்களுக்கு அவர் ஆழமான உண்மைகளை, பண்டைய யோகத் தத்துவத்தின் ஆழமான பரதத்துவ கோட்பாடுகளுடன் பொருந்தக்கூடிய உண்மைகளைக் கற்பித்தார்.

“ஏன் அவர்களிடம் உவமைகளுடன் பேசுகிறீர்கள்?” என்று அவருடைய சீடர்கள் இயேசுவைக் கேட்டபோது, அவர் பதிலளித்தார், “ஏனென்றால் பரலோக ராஜ்யத்தின் மர்மங்களை அறிய உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது, ஆனால் அவர்களுக்கு அருளப்படவில்லை…. அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும் உணர்ந்து கொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியால் நான் உவமைகளில் பேசுகிறேன் ” (மத்தேயு 13:10, 11, 13 பைபிள்).
இயேசுவின் மூல போதனைகள் பற்றிய முழு புரிதல் – அவர் தனது சீடர்களுக்கு யோக தியானத்தின் இரகசிய உத்திகளை வழங்கினார் என்ற உண்மை உட்பட – நற்செய்திகள் பற்றிய பரமஹம்ஸ யோகானந்தரின் ஆழமான விளக்கவுரையில் வெளிப்படுத்தப்படுகிறது:
The Second Coming of Christ: The Resurrection of the Christ Within You. அந்தப் படைப்பின் முன்னுரையில் யோகானந்தர் பின்வருமாறு எழுதினார்:

“இயேசு கிறிஸ்து இன்று மிகவும் உயிரோடும் உயிர்ப்புடனும் இருக்கிறார். பரம்பொருளில், மற்றும், எப்போதாவது ஒரு உடல் வடிவமும் எடுத்து, அவர் உலகின் மீட்பிற்காக மக்கள் கண்ணுக்குப் புலப்படாமல் பணி செய்து கொண்டிருக்கிறார். இயேசு தம்முடைய அனைத்தையும் அரவணைக்கும் அன்புடன், பரலோகத்தில் தனக்குள்ளே பேரானந்த உணர்வுநிலையை அனுபவிப்பதில் மட்டும் திருப்தியடைவதில்லை. அவர் மனிதகுலத்தின் மீது ஆழ்ந்த அக்கறை கொண்டு, இறைவனுடைய எல்லையற்ற ராஜ்யத்திற்குள் நுழைவதற்கான தெய்வீக சுதந்திரத்தை அடையும் வழிவகைகளை தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு வழங்க விரும்புகிறார். அவர் ஏமாற்றம் அடைந்தார். ஏனெனில் அவரது பெயரில் நிறுவப்பட்ட தேவாலயங்கள் மற்றும் கோவில்கள் பல உள்ளன, அவை பெரும்பாலும் வளமான மற்றும் சக்திவாய்ந்தவையாக உள்ளன, ஆனால் அவர் வலியுறுத்திய இறைக் கூட்டுறவு — உண்மையான தொடர்பு — எங்கே? முதன் முதலாக கோவில்களை மனித ஆன்மாக்களில் நிறுவ வேண்டும் என்று இயேசு விரும்பினார், பின்னர் வெளிப்புறமாக வழிபாட்டுத் தலங்களில் நிறுவப்பட வேண்டும். மாறாக, தேவாலயத்துவத்தில் போதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பரந்த சபைக் கூட்டங்களுடன் கூடிய எண்ணற்ற பெரிய கட்டிடங்கள் இருக்கின்றன, ஆனால் ஒரு சில ஆன்மாக்களே ஆழமான பிரார்த்தனை மற்றும் தியானம் மூலம் உண்மையில் கிறிஸ்துவுடன் தொடர்பில் உள்ளனர்.

“கிறிஸ்துவும், கிருஷ்ணரும் பரிந்துரை செய்த இறை-கூட்டுறவிற்கான மூல போதனைகளை மீண்டும் உயிர்ப்பிப்பதன் மூலம் ஆன்மாக்களின் கோவில்களில் இறைவனை மீண்டும் எழுந்தருளச் செய்வதற்காகவே நான் மகாவதார பாபாஜியால் மேலை நாடுகளுக்கு அனுப்பப்பட்டேன்….

“ பாபாஜி கிறிஸ்துவுடன் என்றும் தொடர்பில் உள்ளவர்; அவர்களிருவரும் சேர்ந்து மீட்பளிக்கும் எண்ண அதிர்வுகளை அனுப்பிய வண்ணம் உள்ளனர். மேலும் இந்த யுகத்திற்கான முக்தியளிக்கும் ஆன்மீக உத்தியையும் திட்டமிட்டுள்ளார்கள்.”

MAHAVATAR BABAJI Spiritual Guru

மகாவதார பாபாஜி

மகாவதார பாபாஜியின் பிறப்பு மற்றும் வாழ்க்கை தொடர்பான வரலாற்றுப் பதிவுகள் எதுவும் இல்லை. பரமஹம்ஸ யோகானந்தர் ஒரு யோகியின் சுயசரிதத்தில், இந்த மரணமற்ற அவதாரம் இந்தியாவின் தொலைதூர இமாலயப் பகுதிகளில் சொல்லொணா ஆண்டுகளாக வசித்து வருகிறார், அருளாசி பெற்ற ஒரு சிலருக்கு அரிதாகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார் என்று எழுதியுள்ளார்.

இழக்கப்பட்ட கிரியா யோகத்தின் விஞ்ஞான தியான உத்தியை இந்த யுகத்தில் உயிர்ப்பித்தவர் மகாவதார் பாபாஜி. தனது சீடர் லாஹிரி மகாசாயருக்கு கிரியா தீட்சை வழங்கிய பாபாஜி, “நான் இந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் உன் மூலமாக இவ்வுலகிற்கு அளிக்கும் கிரியா யோகம், கிருஷ்ணர் பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பு அர்ஜுனனுக்கு அளித்த அதே விஞ்ஞான முறையின் உயிர்ப்பித்தலாகும்; பிறகு அது பதஞ்சலிக்கும் கிறிஸ்துவிற்கும், புனித யோவான், புனித பவுல், மற்றும் வேறு சீடர்களுக்கும் தெரிந்திருந்தது.”
1920-ல் பரமஹம்ஸ யோகானந்தர் அமெரிக்கா புறப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன், மகாவதார பாபாஜி கல்கத்தாவில் உள்ள யோகானந்தரின் வீட்டிற்கு வந்தார். அங்கு அந்த இளம் துறவி, தான் மேற்கொள்ளவிருக்கும் பணி தொடர்பாக தெய்வீக உத்தரவாதத்திற்காக ஆழமாக பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். பாபாஜி அவரிடம், “உன்னுடைய குருவின் கட்டளைப்படி நீ அமெரிக்கா செல்வாய். பயப்படாதே; நீ பாதுகாக்கப்படுவாய். மேலை நாடுகளில் கிரியா யோக முறைகளை பரப்ப நான் உன்னைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.” என்று கூறினார்.

Read more about Mahavatar Babaji: நவ பாரதத்தின் மகாவதார பாபாஜி

மகாவதார பாபாஜியிடமிருந்து ஓர் அருளாசி

Yogavatar Shyamacharan LAHIRI MAHASAYA teacher of Kriya yoga

லாஹிரி மகாசாயர்

லாஹிரி மகாசாயர் செப்டம்பர் 30, 1828 அன்று இந்தியாவில் வங்காளத்தில் உள்ள குர்ணி கிராமத்தில் பிறந்தார். தனது முப்பத்து மூன்றாவது வயதில், ராணிகேத் அருகே இமாலய அடிவாரத்தில் ஒரு நாள் நடந்து கொண்டிருந்தபோது, அவர் தனது குரு மகாவதார பாபாஜியை சந்தித்தார். கடந்த பல பிறவிகளில் ஒன்றாக இருந்த இருவரின் தெய்வீக மறுஇணைப்பு அது; விழிப்புணர்வுக்கான ஸ்பரிசத்தின் அருளாசியில், லாஹிரி மகாசாயர் அவரை விட்டு ஒருபோதும் வெளியேறாத தெய்வீக உணர்தலின் ஆன்மீக ஒளியில் மூழ்கினார்.
மகாவதார பாபாஜி அவருக்கு கிரியா யோக விஞ்ஞானத்தில் தீட்சை அளித்தார், உண்மையாக நாடும் அனைவருக்கும் புனித உத்தியை வழங்குமாறு அறிவுறுத்தினார். இந்தப் பணியை நிறைவேற்றுவதற்காக லாஹிரி மகாசாயர் பனாரஸ்(காசி) நகரில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பினார். இழக்கப்பட்ட பண்டைய கிரியா விஞ்ஞானத்தை சமகாலங்களில் முதலில் கற்பித்தவர் என்ற முறையில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நவீன இந்தியாவில் தொடங்கி இன்று வரை தொடரும் யோகத்தின் மறுமலர்ச்சியில் அவர் ஒரு முக்கிய நபராக போற்றப்படுகிறார்.

பரமஹம்ஸ யோகானந்தர் ஒரு யோகியின் சுயசரிதத்தில் எழுதியுள்ளர்: “மலர்களின் நறுமணத்தை எப்படி அடக்கி விட முடியாதோ அதே போல், லாஹிரி மகாசாயரும், ஒரு லட்சிய இல்லறத்தாராக அமைதியான முறையில் வசித்து வந்த போதிலும், அவருடைய இயல்பான புகழை மறைக்க முடியவில்லை. பாரதத்தின் ஒவ்வொரு பாகத்திலிருந்தும் தேனீக்கள் போல் பக்தர்கள், முக்தியடைந்த மகானிடம் தெய்வீக அமிர்தத்தை நாட ஆரம்பித்தார்கள்…. இணக்கமான சமநிலையில் செயல்பட்ட உயர்ந்த இல்லற குருவின் வாழ்க்கை ஆயிரக்கணக்கான ஆடவர், பெண்டிருக்கு மிக ஊக்கமளிப்பதாக அமைந்தது.”
லாஹிரி மகாசாயர் யோகத்தின், சிறிய ஆத்மனின் இறைவனுடனான ஐக்கியத்தின், மிக உயர்ந்த இலட்சியங்களை வாழ்ந்து காட்டியதனால், அவர் ஒரு யோகவதாரம் அல்லது யோகத்தின் அவதாரம் என்று போற்றப்படுகிறார்.

பரமஹம்ஸ யோகானந்தரின் பெற்றோர் லாஹிரி மகாசாயரின் சீடர்களாக இருந்தனர், அவர் ஒரு கைக்குழந்தையாக இருந்தபோது அவரது தாயார் அவரைத் தனது குருவின் வீட்டிற்கு தூக்கிச் சென்றார். குழந்தைக்கு அருளாசிகள் வழங்கிய லாஹிரி மகாசாயர், “இளம்தாயே, உன் மகன் ஒரு யோகியாவான். ஆன்மீக ஆற்றலால் அவன் அனேக ஆன்மாக்களை இறைவனின் சாம்ராஜ்யத்திற்குக் கொண்டு செல்வான்.” என்று கூறினார்
லாஹிரி மகாசாயர் தனது வாழ்நாளில் எந்த அமைப்பையும் நிறுவவில்லை, ஆனால் இந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகளை உரைத்தார்: “நான் மறைந்த ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர், மேலை நாடுகளில், யோகத்தில் தோன்றும் ஆழ்ந்த ஆர்வம் காரணமாக என் வாழ்க்கை வரலாறு எழுதப்படும். யோகத்தின் செய்தி உலகம் முழுதும் சூழும். அது மனிதனுடைய சகோதரத்துவத்தை நிலைநிறுத்த உதவும்: மனிதகுலம் நேரடியாக உணர்ந்தறியும் ‘ஒரே பிதா’ என்பதன் அடிப்படையில் ஏற்படும் ஒற்றுமையே அது.”

லாஹிரி மகாசயர் 1895 செப்டம்பர் 26, பனாரஸில் (காசி) மகாசமாதி அடைந்தார். ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, மேலை நாடுகளில் யோகத்தில் அதிகரித்த ஆர்வமானது, லாஹிரி மகாசாயரின் வாழ்க்கையைப் பற்றிய அழகான விவரத்தைக் கூறும் ஒரு யோகியின் சுயசரிதத்தை எழுத பரமஹம்ஸ யோகானந்தருக்கு உத்வேகம் அளித்தபோது, அமெரிக்காவில், அவரது கணிப்பு நிறைவேறியது.

Jnanavatar Swami Sri Yukteswar Disciple of Lahiri Mahasaya

சுவாமி ஸ்ரீ யுக்தேஸ்வர்

சுவாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் மே 10, 1855 அன்று இந்தியாவில் வங்காளத்தில் உள்ள செராம்பூரில் பிறந்தார். ஸ்ரீ யுக்தேஸ்வர் லாஹிரி மகாசாயரின் சீடராக இருந்தார், மேலும் ஞான அவதாரம் அல்லது ஞானத்தின் அவதாரம் என்ற ஆன்மீக நிலையை அடைந்தார்.
கீழை நாடுகளின் ஆன்மீகப் பாரம்பரியத்தை மேலை நாடுகளின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துடன் ஆன ஒருங்கிணைப்பு, நவீன உலகின் லௌகீக, உளவியல் சார்ந்த மற்றும் ஆன்மீகரீதியான துன்பங்களைக் குறைக்க செய்யும் என்பதை ஸ்ரீ யுக்தேஸ்வர் உணர்ந்தார். 1894-ல் லாஹிரி மகாசாயரின் குருவான மகாவதார பாபாஜியுடனான பிரசித்தி பெற்ற அவருடைய சந்திப்பின் மூலம் இந்தக் கருத்துக்கள் தெளிவான செயல் திட்டமாகியது.

” சுவாமிஜி, என் வேண்டுகோளின்படி, “பாபாஜி அவரிடம் கூறினார், கிறிஸ்தவ மற்றும் இந்து மத நூல்களுக்கு இடையே உள்ள அடிப்படையான இணக்கம் பற்றி ஒரு சிறு புத்தகம் எழுதக்கூடாதா? இப்பொழுது அவற்றின் அடிப்படை ஒற்றுமை மனிதர்களுடைய பிரிவுகளின் பேதங்களினால் மங்கிவிட்டது. இறைவனின் அருள் பெற்ற புதல்வர்கள் யாவரும் ஒரே விதமான உண்மைகளை எடுத்துக் கூறியிருக்கிறார்கள் என்பதை இணையான குறிப்புகளின் மூலம் எடுத்துக் காட்டுங்கள்.”

ஸ்ரீ யுக்தேஸ்வர் பின்வருமாறு நினைவுகூர்ந்தார்: “அமைதியான இரவுநேரத்தில், பைபிளிலும் சனாதன தர்ம சாத்திரங்களிலும் உள்ள ஒப்புமையைப் பற்றிய பணியில் ஈடுபட்டேன். அருள்பெற்ற மகானாகிய இயேசுவின் சொற்களை மேற்கோள் காட்டி அவருடைய போதனைகளும் வேதங்களின் உண்மைகளுடன் அடிப்படையில் ஒன்றாகவே இருப்பதைக் காண்பித்தேன். என் பரம குருவின் ஆசியினால் எனது புத்தகம் ‘கைவல்ய தரிசனம்’ The Holy Science, மிக குறுகியகாலத்திலேயே நிறைவு பெற்றது.”

அவரிடம் தெரிவித்திருந்தாவது: “சுவாமிஜி, கீழை மற்றும் மேலை நாடுகளுக்கிடையே வரப்போகும் இணக்கமான பரிமாற்றத்தில் நீங்கள் ஆற்ற வேண்டிய பங்கு உள்ளது. சில வருடங்களுக்குப் பிறகு நான் உங்களிடம் அனுப்பும் ஒரு சீடனுக்கு நீங்கள் மேலை நாடுகளில் யோகத்தைப் பரப்புவதற்குப் பயிற்சி அளிக்க வேண்டும். அங்கிருந்து ஆன்மீகத்தை நாடும் அனேக ஆத்மாக்களின் அதிர்வலைகள் வெள்ளம்போல் பெருகி என்னிடம் வருகின்றன. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் எழுச்சி பெறக் காத்திருக்கும் உள்ளார்ந்த சக்தி வாய்ந்த மகான்களை நான் காண்கிறேன்.”

இந்த உரையின் பின்னர், ஸ்ரீ யுக்தேஸ்வர் யோகானந்தரிடம் கூறினார், “என் மகனே, எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் பாபாஜி எனக்கு அனுப்புவதாக வாக்குறுதி அளித்த சீடன் நீதான்.”

ஸ்ரீ யுக்தேஸ்வரின் ஆன்மீகப் பயிற்சி மற்றும் ஒழுக்கத்தின் கீழ், ஸ்ரீ யோகானந்தர் தனது உலகளாவிய பணியை மேலை நாடுகளில் தொடங்கத் தயாராக இருந்தார். ஸ்ரீ யுக்தேஸ்வர், ஆன்மீகப் பொறுப்புகள் மற்றும் ஆசிரம சொத்துக்களுக்கு ஒரே வாரிசாக பரமஹம்ஸ யோகானந்தரின் பெயரைக் கூறினார்.

சுவாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் 1936 மார்ச் 9 அன்று, அமெரிக்காவில் பதினைந்து ஆண்டுகள் கழித்த பின்னர் பரமஹம்ஸரின் இந்திய விஜயத்தின் போது, மகாசமாதி அடைந்தார்.

 Premavatar PARAMAHANSA YOGANANDA founder of YSS/SRF

பரமஹம்ஸ யோகானந்தர்

மேலே விவரித்தபடி, பரமஹம்ஸ யோகானந்தர் கிரியா யோகத்தை உலகம் முழுவதும் பரப்புவதற்கான பணியை மேற்கொள்வதற்காக, அவரது ஆன்மீக பரம்பரையில் உள்ள பரமகுருமார்களான மகாவதார பாபாஜி, லாஹிரி மகாசாயர், சுவாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் ஆகியோர்களால்–தனிப்பட்ட முறையில் ஆசீர்வதிக்கப்பட்டார்.

ஒரு யோகியின் சுயசரிதத்தில்  அவர் எழுதியுள்ளார்: ” மேலை நாட்டில் ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் என்ற நிறுவனத்தை, ‘ஆன்மீகத் தேனுக்காக ஒரு தேன்கூட்டை,’ நிறுவுவது என்பது ஸ்ரீ யுக்தேஸ்வராலும் மகாவதார பாபாஜியினாலும் எனக்கு இடப்பட்ட ஒரு கடமையாகும்.”

அந்த ஆன்மீகத் திட்டத்தை நிறைவேற்றுவதில் அவரது வாழ்நாள் பணிகளைப் பற்றிய சுருக்கமான விளக்கத்தை ப் படிக்கவும்.

Share this on

Share on facebook
Share on twitter
Share on whatsapp