யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா சொல்லகராதி

அர்ஜுனன்‌. பகவத்‌ கீதையின்‌ அழிவற்ற செய்தியைப் பகவான்‌ கிருஷ்ணன்‌ போதித்த மேன்மையான சீடர்‌. இந்துக்களின்‌ தலைசிறந்த இதிகாசமான மகாபாரதத்தில்‌ ஐந்து பாண்டவ அரசகுமாரர்களில்‌ முக்கியமான ஒருவர்‌.

ஆசிரமம்‌. ஓர்‌ ஆன்மீக மடம்‌, பெரும்பாலும்‌ சன்னியாசிகள்‌ வசிக்கும்‌  மடாலயம்‌.

சூட்சும தேகம்‌. மனிதனின்‌ ஒளியாலான சூட்சும தேகம்‌, பிராணா அல்லது உயிர்மின்மங்களால்‌ ஆனது; காரண சரீரம்‌, சூட்சும சரீரம்‌ மற்றும்‌ ஸ்தூல சரீரம்‌ என ஒன்றன்பின்‌ ஒன்றாக ஆன்மாவை மூடியுள்ள மூன்று உறைகளில்‌ இரண்டாவது. மின்சாரம்‌ ஒரு மின்விளக்கை ஒளியூட்டுவது போன்று, சூட்சும சரீரத்தின்‌ சக்திகள்‌ ஸ்தூல சரீரத்திற்கு உயிரூட்டுகின்றன. சூட்சும சரீரம்‌ பத்தொன்பது மூலப்பொருட்களால்‌ ஆனது; அறிவாற்றல்‌, அகந்தை, உணர்ச்சி, மனம்‌ (புலன்‌-உணர்வுநிலை); ஞானேந்திரியங்கள்‌ ஐந்து (பார்த்தல்‌, கேட்டல்‌, நுகர்தல்‌, சுவைத்தல்‌, மற்றும்‌ தொடுதல்‌ ஆகியவற்றின்‌ தேக உறுப்புகளுக்குள்‌ உள்ள புலன்‌ சக்திகள்); கன்மேந்திரியங்கள்‌ ஐந்து (இனவிருத்தி, கழிவு வெளியேற்றம்‌, பேச்சு, இயக்கம்‌ ஆகியவற்றின்‌ தேக உறுப்புகளுக்குள்‌ உள்ள செயலாற்றும்‌ சக்தி மற்றும்‌ தேக ஆற்றலின்‌ உபயோகம்); இரத்த ஓட்டம்‌, வளர்சிதை மாற்றம்‌, உட்கிரகித்தல்‌, உருவாக்குதல்‌, மற்றும்‌ கழிவு வெளியேற்றம்‌ ஆகிய பணிகளைச்‌ செய்யும்‌ உயிர்ச் சக்தியின்‌ ஐந்து உறுப்புகள்‌.

ஓம். அனைத்துப்‌ பொருட்களையும்‌ படைத்து, பராமரிக்கும்‌ இறைத்‌ தத்துவத்தின்‌ அம்சத்தைக்‌ குறிக்கும்‌ சமஸ்கிருத மூலச்‌ சொல்‌ அல்லது பீஜ ஒலி; பிரபஞ்ச அலையதிர்வு. வேதங்களின்‌ ஓங்காரம்‌, திபெத்தியர்களின்‌ ஹும்‌ என்ற புனிதச்‌ சொல்லாகவும்‌; முஸ்லீம்களின்‌ ஆமின்‌, எகிப்தியர்‌, கிரேக்கர்‌, ரோமானியர்‌, யூதர்‌ மற்றும்‌ கிறிஸ்துவர்களின்‌ ஆமென்‌ என்ற புனிதச்‌ சொல்லாகவும்‌ ஆயிற்று. படைக்கப்பட்ட எல்லாப்‌ பொருட்களும்‌ ஓம்‌ அல்லது ஆமென்‌, வார்த்தை அல்லது பரிசுத்த ஆவியாகிய பிரபஞ்ச அலையதிர்வு சக்தியிலிருந்து தோன்றுகின்றன என்று உலகத்தின்‌ தலைசிறந்த மதங்கள்‌ எடுத்துக்‌ கூறுகின்றன. “ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது…. சகலமும்‌ அவர்‌ மூலமாய்‌ உண்டாயிற்று (வார்த்தை அல்லது ஓம்); உண்டானதொன்றும்‌ அவராலேயல்லாமல்‌ உண்டாகவில்லை” (யோவான்‌ 1:1.13 பைபிள்‌).

ஹீப்ரு மொழியில்‌ ஆமென்‌ என்பதன்‌ பொருள் நிச்சயம்‌, விசுவாசம்‌ என்பதாகும்‌. “உண்மையும்‌ சத்தியமும்‌ உள்ள சாட்சியும்‌, தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென்‌ என்பவர்‌ சொல்லுவதாவது” (வெளிப்படுத்தின விஷேசம்‌ 3 : 14, பைபிள்‌). இயங்கிக்‌ கொண்டிருக்கும்‌ ஒரு மோட்டாரின்‌ அதிர்வினால்‌, உண்டாக்கப்படும்‌ ஓசையைப்‌ போன்று, எங்கும்‌ நிறைந்துள்ள ஓங்கார நாதம்‌, அதிர்வுறும்‌ சக்தியினால்‌ படைப்பிலுள்ள சகல ஜீவராசிகளையும்‌, ஒவ்வோர் அணுவையும்‌, தாங்கி நிற்கின்ற “பிரபஞ்ச மோட்டார்‌” இயங்கிக்‌ கொண்டிருப்பதற்கு விசுவாசமாக சாட்சியம்‌ அளிக்கின்றது. யோகதா சத்சங்கப்‌ பாடங்களில்‌, பரமஹம்ஸ யோகானந்தர்‌, தியான உத்திகளைக் கற்றுத்‌ தருகிறார்‌. இதைப்‌ பயிற்சி செய்வது, ஓம்‌ அல்லது பரிசுத்த ஆவியாக‌ இறைவனின்‌ நேரடி அனுபவத்தைத் தருகிறது. கண்ணுக்குப்‌ புலப்படாத இறை சக்தியுடனான அந்த ஆனந்தமயமான தொடர்பு (பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளன் ‌– யோவான்‌ 14:26, பைபிள்‌) தான்‌, பிரார்த்தனையின்‌ உண்மையான விஞ்ஞான ரீதியான அடிப்படை.

அவதாரம்‌. தெய்வீகப்‌ பிறவி; சமஸ்கிருதச்‌ சொல்லான அவதார்‌ என்பதிலிருந்து; அதன்‌ மூலச்‌ சொற்கள்‌ அவ, “கீழே” மற்றும்‌ த்ரி, “செல்லுதல்‌.” பரம்பொருளுடன்‌ ஐக்கியமாகி, பின்பு மனித குலத்திற்கு உதவுவதற்காக பூவுலகத்திற்குத்‌ திரும்பி வரும்‌ ஒருவர்‌ அவதாரம்‌ என அழைக்கப்படுகிறார்‌.

அவித்யை “ஞானம்-இன்மை,” அஞ்ஞானம் எனப் பொருள்படும். மனிதனில் வெளிப்பட்ட மாயை, பிரபஞ்ச ஏமாற்றம். முக்கியமாக, அவித்யை, தனது தெய்வீகத்‌ தன்மையையும்‌ மற்றும்‌ ஒரே ஒரு நிஜத்தன்மையான மெய்ப்பொருளையும்‌ பற்றிய மனிதனது அறிவின்மை.

பாபாஜி பார்க்க மகாவதார பாபாஜி.

பகவத்‌ கீதை.  “பகவானின்‌ கீதம்.”‌ மகாபாரத இதிகாசத்தின்‌ ஆறாவது நூலிலிருக்கும் (பீஷ்ம பருவம்‌) பதினெட்டு அத்தியாயங்களைக்‌ கொண்ட ஒரு புராதன இந்திய சாத்திரம்‌. குருக்ஷேத்திரத்தில்‌ நிகழ்ந்த சரித்திரப்‌ பெருமை வாய்ந்த போருக்கு முந்தைய தினம்‌, அவதாரமாகிய கிருஷ்ண பகவானுக்கும்‌, அவரது சீடரான அர்ஜுனனுக்கும்‌ இடையே உரையாடல்‌ வடிவத்தில்‌ அளிக்கப்பட்டுள்ள கீதை, யோக விஞ்ஞானத்தைப் (இறைவனுடன்‌ ஒன்றிணைதல்‌) பற்றிய ஓர்‌ ஆழ்ந்த ஆராய்ச்சி நூலாகும்‌; மற்றும்‌ தினசரி வாழ்க்கையில்‌ சந்தோஷத்தையும்‌ வெற்றியையும்‌ பெறுவதற்கான காலத்தை விஞ்சிய அறநெறி நூலாகும்‌. இக்கீதை, உருவகக்‌ கதையாக இருப்பதுடன்‌ கூட சரித்திரமும்‌ ஆகும்‌. மனிதனுடைய நல்ல மற்றும்‌ தீய சுபாவங்களுக்கு இடையிலான அகப்போரைப்‌ பற்றிய ஆன்மீகத்‌ திறனாய்வாகும்‌. சந்தர்ப்பத்தைப்‌ பொறுத்து, கிருஷ்ணன்‌ குருவையும்‌, ஆத்மனையும்‌ அல்லது இறைவனையும்‌ குறிக்கின்றான்‌. அர்ஜுனன்‌, பேரார்வமுள்ள பக்தனைக்‌ குறிக்கின்றான்‌. இந்த உலகப்‌ பொதுமறையைப்‌ பற்றி மகாத்மா காந்தி எழுதியுள்ளார்‌. “கீதையின்‌ மீது தியானம்‌ செய்வோர்‌ புத்துணர்ச்சியூட்டும்‌ ஆனந்தத்தையும்‌, புதிய கருத்துகளையும்‌ அதிலிருந்து தினசரி பெறுவர்‌. கீதையினால்‌ விடுவிக்கப்பட முடியாத ஆன்மீகச்‌ சிக்கல்‌ ஒன்று கூட இல்லை.”

பகவான்‌ கிருஷ்ணன்‌. கிறிஸ்துவ சகாப்தத்தின்‌ யுகங்களுக்கு முன்பு இந்தியாவில்‌ வாழ்ந்த ஓர்‌ அவதாரம்‌. இந்து சாத்திரங்களில்‌ கிருஷ்ண என்பதற்குக்‌ கொடுக்கப்பட்ட பல பொருட்களில்‌ ஒன்று “எல்லாமறிந்த பரம்பொருள் ‌” என்பதாகும்‌. இவ்வாறு கிருஷ்ணன்‌, கிறிஸ்து என்பதைப்‌ போல அவதாரத்தின்‌ தெய்வீக முக்கியத்துவத்தை — இறைவனுடன்‌ அவருடைய ஒன்றிய தன்மையைக்‌ குறிக்கும்‌ ஆன்மீகப் பட்டப்பெயர்‌ ஆகும்‌. பகவான்‌ என்னும்‌ பட்டப்பெயர் “ஆண்டவன்‌” எனப்‌ பொருள்படும்‌. பகவத்‌ கீதையில்‌ பதிவு செய்யப்பட்டுள்ள உபதேசத்தை அவர்‌ அளித்த சமயத்தில்‌, பகவான்‌ கிருஷ்ணன்‌ வட இந்தியாவில்‌ ஒரு ராஜ்யத்தின்‌ அரசனாக இருந்தார்‌. அவரது ஆரம்பகால வாழ்க்கையில்‌, கிருஷ்ணன்‌ தனது தோழர்களை தன்‌ புல்லாங்குழலின்‌ இசையால்‌ மயக்கும்‌ மாட்டிடையனாக வாழ்ந்தார்‌. கிருஷ்ணன்‌ என்ற இந்த பாகத்தில்‌, தவறாக வழிநடத்தப்பட்ட எல்லா எண்ணங்களையும்‌ எல்லாமறிந்த இறைவனிடம்‌ திரும்புவதற்கு வழிகாட்டும்‌ தியானமென்னும்‌ புல்லாங்குழலை இசைக்கின்ற ஆன்மாவை, கிருஷ்ணன்‌ என உருவகமாக குறிப்பிடுவதாக பெரும்பாலும்‌ கருதப்படுகிறார்‌.

பக்தி யோகம்‌ அனைத்தையும்‌ சரணடையச்‌ செய்யும்‌ அன்புதான்‌ இறைத்‌ தொடர்பிற்கும்‌ இறைவனுடன்‌ ஒன்றுதலுக்கும்‌ பிரதானமான மார்க்கம்‌ என வலியுறுத்தும்‌ இறைவனை அடைவதற்கான ஆன்மீக அணுகுமுறை. பார்க்க யோகம்‌.

பிரம்மா-விஷ்ணு-சிவன்‌. படைப்பில்‌ உள்ளார்ந்துள்ள இறைவனுடைய முன்று அம்சங்கள்‌. இவர்கள்‌ பிரபஞ்ச இயற்கையின்‌ செயல்களாகிய ஆக்கல்‌, காத்தல் மற்றும்‌ அழித்தல்‌ ஆகியவற்றை வழிநடத்தும்‌ கூடஸ்த சைதன்யத்தின் ‌(கிறிஸ்து அறிவுத்திறன்) (தத்) ‌ அந்த மும்மைப்‌ பணியை அடையாளமாகக்‌ குறிக்கின்றனர்‌. பார்க்க மும்மை.

பிரம்மன் (பிரஹ்மா). தனி முதல்‌ பரம்பொருள்‌. பிரம்மன் சில சமயங்களில் சமஸ்கிருதத்தில் பிரஹ்ம (முடிவில் ஒரு குறில் ‘அ ’ உடன்) என்று மொழிபெயர்க்கப்படுகிறது ; ஆனால் பரம்பொருள் அல்லது பிதாவாகிய கடவுள் என்றே பொருள்படுகிறது: பிரம்மா-விஷ்ணு-சிவன் எனும் மும்மையின் “பிரம்மா-படைப்பவன்”-ஐப் பற்றிய தனிப்பட்ட எல்லைக்குட்பட்ட கருத்தை அல்ல, (இது முடிவில் நெடில் ‘ஆ’ உடன் வழங்கப்படுகிறது, பிரம்மா). பார்க்க பிரம்மா-விஷ்ணு-சிவன்

சுவாசம்‌ “பரமஹம்ஸ யோகானந்தர்‌ எழுதியுள்ளார்‌, “எண்ணற்ற பிரபஞ்ச ஓட்டங்கள்‌ சுவாசத்தின்‌ ரூபத்தில்‌ மனிதனுக்குள்‌ உட்புகுந்து அவனுடைய மனத்தில்‌ சஞ்சலத்தைத்‌ தூண்டுகின்றன. இவ்வாறாக சுவாசம்‌, மனிதனை புலன்கள் ‌ உணரக்கூடிய விரைந்து மறைந்திடும் உலகங்களுடன்‌ இணைக்கிறது. நிரந்தரமற்ற துக்கங்களிலிருந்து தப்பித்துக்‌ கொள்வதற்கும்‌ மெய்ப்பொருளின்‌ ஆனந்தமயமான ராஜ்யத்திற்குள்‌ நுழைவதற்கும்‌, விஞ்ஞான ரீதியான தியானத்தின்‌ மூலம்‌ யோகி, சுவாசத்தை சாந்தப்படுத்துவதற்குக் கற்றுக்‌ கொள்கிறான்‌.”  

இதைப் பகிர