ஸ்ரீ மிருணாளினி மாதாவிடமிருந்து கிறிஸ்துமஸ் 2014 செய்தி

28 நவம்பர், 2014

"கிறிஸ்துவின் ஒளி உங்களுக்குள் பிரகாசிக்கும்படி, பக்தி நெருப்பினால் உங்கள் இதயத்தை எரியூட்டுங்கள்.... சரீரத்திற்கும் சுவாசத்திற்கும் அப்பால், கிறிஸ்துவின் அமைதி மற்றும் ஆனந்தத்தின் சாசுவத ஒளி தான் நீங்கள்."

கிறிஸ்துமஸ் 2014

அன்புக்குரிய பெருமான் இயேசுவில் பிறந்து, ஒவ்வொரு ஆன்மாவிலும் புதிதாக வெளிப்பட காத்திருக்கும் கிறிஸ்து உணர்வுநிலையை நாம் போற்றும் இந்த வேளையில், ஒளி மற்றும் ஆனந்தத்தின் இந்த புனித பருவத்தில் உங்களுக்கு அன்பான வாழ்த்துக்கள். அந்த அருட்பேறு பெற்ற உணர்வுநிலையை நம் சொந்த வாழ்க்கையில் சாத்தியமாக்குவது என்பது இந்த கொந்தளிப்பான உலகின் எப்போதும் மாறி வரும் நிலைமைகள் மற்றும் மதிப்புகளுக்கு மத்தியில் ஒரு தெய்வீக உத்தரவாதமாகிய அக சத்தியம் மற்றும் பாதுகாப்பின் பிடிமானத்தில் மகிழ்ச்சியடைவதாகும். மனித இருப்பின் அனைத்து நிச்சயமற்ற நிலைகளுக்கும் இறைவனின் அருளார்ந்த பதில் கிறிஸ்து போன்ற தெய்வீகமானவர்கள் மூலம் வருகிறது, அவர்கள் நம் சாசுவத பாதுகாவலன் மற்றும் கொடையாளியின் நீடித்த, அழியாத அன்பை நமக்கு நினைவூட்ட அவதாரம் எடுக்கிறார்கள். பெத்லகேம் வயல்களில் மேய்ப்பர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டபடி, பூமிக்கும் வானுலகத்திற்கும், நமது அன்றாட வாழ்க்கைக்கும் தெய்வீக சத்தியத்திற்கும் இடையில் பிரிக்க முடியாத இடைவெளி இல்லை. பணிவுடன் ஏற்கும் திறன் கொண்ட இதயத்திற்கு, இறைவன் எப்போதும் அருகில் இருக்கிறான். மாயையின் நிழல்களுக்குப் பின்னால் ஆன்மாவை ஒளிரச் செய்யும் இறைவனின் இருப்பை கண்டறியவும், நமது மனித மறதிக்கு பின்னால் — வெற்றி மற்றும் எல்லையற்ற மகிழ்ச்சி இருப்பதை கண்டறியவும் அன்றாட கவலைகள் மற்றும் மந்தமான புலனுணர்வுகளுக்கு அப்பால் நாம் நம் பார்வையை உயர்த்திட வேண்டும்.

வாழ்க்கைத் தளத்தின் கொந்தளிப்புகளிலும் தற்காலிக உடல் மீதும் அதிக கவனம் செலுத்தும் ஒரு மனம், நம்மை கவலைப்படவும் பாதிக்கப்படக்கூடியதாகவும் வைக்கிறது. கிறிஸ்துவின் முன்மாதிரி நம் உண்மையான அழியாத ஆன்மாவின் அளவிட முடியாத திறனைக் கண்டறிய நம்மை அழைக்கிறது. குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தர் ஒருமுறை கூறினார், “குழந்தை இயேசுவை அவரது தொட்டிலில் தன் செயலற்றவராக நாம் நினைக்கிறோம்… ஆனால் அந்த சிறிய வடிவத்திற்குள் பிரபஞ்சத்தின் ஒளியாகிய எல்லையற்ற கிறிஸ்து இருந்தார்.” நமக்குள் மறைந்திருப்பது அதே ஒளி, அதே வற்றாத ஆனந்தத்தின் ஆதாரம், மற்றும் இறைவனின் நற் தன்மைகளை பிரதிபலிக்கும் வல்லமை. கிறிஸ்து-அன்பின் அதிர்வுகள் நம் வாழ்க்கையை ஆன்மீகமயமாக்குவதற்கான நமது விருப்பத்தை வலுப்படுத்தும் இந்த புனித வேளையில், அவரது எங்கும் நிறைந்திருக்கும் உதவி மற்றும் நமது பக்தி ஏற்புத்தன்மை இவற்றின் உதவியுடன், இயேசுவின் தெய்வீக குணங்களை நம் உணர்வுநிலையில் ஈர்த்துக் கொள்ள, இறைவன் அளிக்கும் வாய்ப்பாக இது உள்ளது. அவரது பணிவு மற்றும் அனைவர் மீதும் உள்ள கருணை ஆகியவை அளிக்கும் உத்வேகத்தால் நம் உள்ளத்தை நிரப்புவோம், மேலும் அவரது துணிவு மற்றும் இறைவன் மீதான அவரது முழு நம்பிக்கை இவற்றிலிருந்து வலிமையைப் பெறுவோம். நம் மனப்பான்மை, நமது உறவுகள், வாழ்க்கை குறித்த நமது முழு கண்ணோட்டம் இவற்றை தூய்மைப்படுத்தி மாற்றும் கிறிஸ்து உணர்வுநிலை தீச்சுடரைத் தூண்டி விட்டு சிறிய “நான்” என்ற மாயை-திணிக்கப்பட்ட கண்ணோட்டத்திற்கு அப்பால் நம் அன்பையும் தன்னலமற்ற புரிதலையும் விரிவுபடுத்துவோம்.

இந்த பண்டிகைக் காலத்திய செயல்பாடுகளுக்கு மத்தியில் பிரபஞ்ச கிறிஸ்து உணர்வுநிலையை உங்கள் ஆன்மாவின் மௌன பேராலயத்திற்கு அழைக்க நீங்கள் நேரம் ஒதுக்கும்போது கிறிஸ்துமஸின் உன்னத அருளாசிகள் உங்களுக்கு கிடைக்கப் பெறும். ஆழ்ந்த தியானத்தின் சரணாலயத்தில், நீங்கள் “எல்லா புரிதலையும் மிஞ்சும் அமைதியை” உணர்ந்து, இயேசு தனது பணியை நிறைவேற்ற அனைத்து தடைகளையும் எதிர்கொண்டு வெளிப்படுத்திய அனைத்தையும் உள்ளடக்கிய அன்பையும் வலிமையையும் உணர தொடங்கலாம். தியானத்தில் பிறந்த உணர்வுநிலை உங்கள் உள்ளத்தில் ஊடுருவிச் செல்வதால், மாயை உங்களைப் அச்சுறுத்தவோ அல்லது தடுக்கவோ முடியாது என்பதை அவர் உணர்ந்ததைப் போலவே நீங்கள் உணர்வீர்கள். அகங்காரத்தின் சிறிய உறையிலிருந்து, உங்கள் ஆன்மா உள்ளார்ந்த பரந்த தன்மைக்கு, சுதந்திரத்திற்கு வெளிப்படுவதை நீங்கள் காண்பீர்கள் – இறைவனின் எங்கும் வியாபித்திருக்கும் ஒளியுடன் பிரகாசிப்பீர்கள். நீங்கள் அந்த வாழ்க்கையை மாற்றும் உள் விழிப்புணர்வின் பரிசாக இந்த கிறிஸ்துமஸ் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் தெய்வீக அன்பு மற்றும் கிறிஸ்துமஸ் ஆனந்தம் உரித்தாகட்டும்,

ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதா

Copyright © 2014 Self-Realization Fellowship. அனைத்து உரிமைகளும் பிரத்தியேகமானவை.

இதைப் பகிர