சுவாமி சிதானந்த கிரியிடமிருந்து 2018ம் ஆண்டிற்கான கிறிஸ்துமஸ் செய்தி

20 டிசம்பர், 2018

உங்களுக்கும், பரமஹம்ஸ யோகானந்தரின் ஆன்மீகக் குடும்பத்தினர் மற்றும் உலகெங்கிலும் உள்ள நண்பர்கள் அனைவருக்கும் அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். இந்தப் புனிதப் பருவத்தில், இயேசுவிலும் இறைவனுடன்-ஐக்கியமான அனைத்து ஆன்மாக்களிலும் பிறந்த உலகளாவிய கிறிஸ்து உணர்வுநிலை, உங்கள் சொந்த பக்தியால்-தயாரான உணர்வுநிலையினுள் மலரட்டும். ஆன்மீகக் கிறிஸ்துமஸ் என்பது வெறும் ஒரு வெளிப்புற கொண்டாட்டத்தை விட உயர்ந்தது்; ஒளியும் ஆனந்தமும் விண்ணுலக மண்டலங்களிலிருந்து ஏற்புடைத் தன்மை கொண்ட இதயங்களில் உணரத்தக்கவகையில் பாயும் இந்த நேரம் நம்பிக்கை மற்றும் புதிய தொடக்கங்களின் நேரம் ஆகும். இது ஓர் அற்புதமான வாய்ப்பின் உணர்வைக் கொண்டுவருகிறது–தெய்வீகத்துடன் நம்மை இசைவித்துக் கொள்வதற்கான, நம்முள் இருக்கும் குழந்தை கிறிஸ்துவிற்கு கட்டியம் கூறும் தேவதைகளான வண்மையுளம் கொண்ட நற்குணங்கள், உதவும் குணம், பரிவுக்கரம் நீட்டும் தாராள மனப்பான்மை ஆகியவற்றின் தூண்டுதல்களுக்கு வீரியமூட்டுவதற்கான, ஒரு புதுப்பிக்கப்பட்ட வைராக்கியம் மற்றும் உற்சாகம். அந்த உண்மையான கிறிஸ்துமஸ் உணர்வு அனைத்து மனிதர்களிலும் பூமியில் அமைதிக்கான நம்பிக்கையாக மட்டுமல்லாமல் ஆனால் அனைவருக்குமான நல்லெண்ணத்தின் ஒரு செயலாக்கமுள்ள உணர்வுநிலையாக மீண்டும் தூண்டப்படட்டும்.

ஆசீர்வதிக்கப்பட்ட ஆண்டவர் இயேசுவும் அனைத்துப் பெரிய மகான்களும் பூமியில் அவதரித்தது அடைய முடியாத குறிக்கோளை நம்முன் வைப்பதற்கு அல்ல, ஆனால் நம் ஆன்மாவின் எல்லையற்ற ஆற்றலை நமக்குள் எழுப்புவதற்காக — நமக்குள் உள்ளார்ந்து இருப்பது பிரபஞ்சத்தை தாங்கும் கூடஸ்த சைதன்யம் கிறிஸ்து உணர்வுநிலை என்பதை நமக்குக் காட்டுவதற்காக. இறைவனுடைய கருணையின் ஒரு பரிசாக, அதன் உள்ளுறையும் சக்தியையும் ஒளியையும் கண்டறியும் ஒரு நேரமாக இது இருக்கட்டும். இயேசுவால் எடுத்துக்காட்டப்பட்ட கிறிஸ்துப் பொதுமையில் வாழ்வதன் மூலம் உங்கள் திறக்கும் மனம் மற்றும் இதயத்தின் எல்லைகளை விரிவாக்குங்கள். அவர் மத அல்லது சமூக எல்லைகளைப் பொருட்படுத்தாமல் அனைவரிலும் மகா தெய்வீகத்தைக் கண்டார். அவர் தனது இரக்க சுபாவத்தினால் தவறு செய்தவர்களைக் கூட அணுகி உதவினார் மற்றும் அவரது எதிரிகளாக இருந்தவர்களையும் மன்னித்தார். இறைவனின் குழந்தைகள் அனைவரையும் உள்ளடக்கிய அவரது இதயத்தில் பகைமைக்கு இடமில்லை. மேலும் நீங்களும் கூட உங்கள் அக்கறையின் வட்டத்தை விரிவுபடுத்தலாம் – நாளுக்கு நாள் அமைதி, நல்லிணக்கம் மற்றும் புரிதல் என்ற சொர்க்கத்தை உள்ளேயும் வெளியேயும் உருவாக்குவதன் மூலம். இத்தகைய கிறிஸ்துமஸைத் தொடங்குங்கள். மற்றவர்களைச் சென்றடைவதற்கு இது ஒரு விஷேசமான நேரமாக இருக்கட்டும் – பரிசுப் பொருள்களுடன் மட்டும் அல்ல, ஆனால் ஒரு தயாள குணம் கொண்ட இதயத்தின் பரிசுகளுடன்: உங்கள் நேரம் மற்றும் கவனத்தின் பரிசுகள், மன்னிப்பு மற்றும் புரிதலின் பரிசுகள். எங்கள் குரு சொன்னது போல், “நீங்கள் எந்தவித சுயநல நோக்கமுமின்றி வேறொருவருக்காக ஏதாவது செய்யும்போதெல்லாம், நீங்கள் கிறிஸ்து உணர்வுநிலைக் கோளத்திற்குள் நுழைகிறீர்கள்.”

நமது சொந்தத் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு அப்பால் நம் உணர்வுநிலையை விரிவுபடுத்துவதற்கான ஆழமான உந்துதல், இயல்பாகவே இறைவனின் எல்லையற்ற அன்பால் நிரம்பி வழியும் ஓர் இதயத்திலிருந்து வருகிறது. இயேசுவின் வாழ்க்கையில் ஊடுருவிய கிறிஸ்து-அன்பு அந்த வற்றாத பேராதாரத்திலிருந்து வந்தது. அதனால்தான் பரமஹம்ஸர் இந்தப் புனித காலத்தில் நீண்ட நேரமும் ஆழமாகவும் தியானம் செய்ய நேரம் ஒதுக்குங்கள் என்று வலியுறுத்தினார். உங்களுடைய ஆன்மாவினுள் உள்ள சுவர் இல்லாத கோவிலின் புனித அமைதியில், இறைவன் உங்களுக்கு ஆனந்தம், அமைதி மற்றும் எல்லையற்ற அன்பாக வருவான்; மற்றும் அவனது அனைத்தையும் உள்ளடக்கிய உணர்வுநிலையின் ஸ்பரிசத்தில், அவனுடனும் மற்ற ஆன்மாக்களுடனும் ஆன உங்கள் நித்திய பிணைப்பை வெளிப்படுத்தியவாறு, பிரிவின் தடைகள் கரைந்து போவதை நீங்கள் உணர்வீர்கள். அந்த அக விழிப்புணர்வால் சிறிதளவு ஞான ஒளிபெற்ற ஒவ்வொரு ஆன்மாவும் கூட மிகவும் இணக்கமான ஓர் உலகிற்கு தானாகவே பங்களிக்கின்றன. நமது குருதேவரின் சொந்த வார்த்தைகளில் அவருடைய அன்பான ஆசீர்வாதத்தைப் பெறுங்கள்: “நீங்கள் மிகவும் மகிழ்ச்சியான கிறிஸ்துமஸைக் கொண்டாடுவீர்களாக, மேலும் உங்களுக்காக எவராலும் நினைத்துப்பார்க்க முடியாத மிகப்பெரிய பரிசை நீங்கள் பெறுவீர்களாக – உங்கள் இதயத்தில் கிறிஸ்து உணர்வின் புரிதல். கிறிஸ்துமஸ் தினத்திலும் புதிய ஆண்டு முழுவதும் ஒவ்வொரு நாளிலும் அவருடைய இருப்பை நீங்கள் உணர்வீர்களாக. பேரொளியின் அற்புதப் பரிசைப் பெற உங்கள் இதயத்தைத் திறவுங்கள்.”

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரிய அனைவருக்கும் ஆனந்தமயமான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்,

சுவாமி சிதானந்த கிரி

தலைவர் மற்றும் ஆன்மீக முதல்வர், யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ ஸெல்ப்-ரியலைசேஷன் பெலோஷிப்

இதைப் பகிர