குரு பூர்ணிமா 2014 அன்று ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதாவிடமிருந்து ஒரு செய்தி

22 ஆகஸ்ட், 2014

அன்பர்களே,
இந்த புனித நாளில் இந்தியா முழுவதும், பக்தர்கள் குருவுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள் – அந்த தெய்வீக பிரதிநிதியை நம்பிக்கையுடனும் பக்தியுடனும் பின்பற்றுபவர்களுக்கு அவர் இறைவனின் சாசுவத அருளாசிகள் பாயும் தூய ஊடகமாக உள்ளார் . நமது அன்புக்குரிய குருதேவர் ஸ்ரீ பரமஹமஸ யோகானந்தரின் காலடியில் நாம் நம் ஆன்மாக்களின் அன்பையும் விசுவாசத்தையும் சர்ப்பிக்கும்போது, உங்கள் வாழ்க்கையில் அவர் ஏற்படுத்தும் மாற்றத்தை நினைவுகூர்ந்து உங்கள் இதயங்கள் மீண்டும் நன்றியுடன் நிறைந்திருக்கட்டும்.​​ ஒரு உண்மையான குரு மாயையின் புயல்களிலிருந்து நம்மை பாதுகாக்கும் மிகப்பெரிய அடைக்கலமாகவும், இறைவனின் மாறாத இருப்பின் பாதுகாப்பான புகலிடத்திற்கு நம்மைக் அழைத்துச் செல்ல நாம் நம்பக்கூடிய வழிகாட்டியாகவும் இருக்கிறார்.
வாழ்க்கை இடைவிடாத மற்றும் பெரும்பாலும் குழப்பமான பலவிதமான அனுபவங்கள், தகவல்கள் மற்றும் செய்ய வேண்டிய தேர்வுகள் மூலம் நம்மைத் தாக்குகிறது. சூழ்நிலைகளாலும், நமது சொந்த மனித இயல்பாலும் திணிக்கப்பட்ட வரம்புகளுக்கு உட்பட்டு, நம்மை நாமே அழியக்கூடிய மனிதர்களாகக் கருதுவதால், சில சமயங்களில் நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சக்திகளின் தயவில் நம்மை காண்கிறோம். ஆனால், மாயை என்ற மறைக்கும் திரையை தன்னுடைய குறையற்ற பார்வையால் ஊடுருவிச் செல்லும் குருவானவர், நம்மை, இறைவனின் எல்லா குணங்களையும் வெளிப்படுத்தும் திறன் கொண்ட, இறைவனின் ஒளியால் பிரகாசிக்கும் அழியாத ஆன்மாக்களாக நாம் உண்மையில் இருப்பதைப் போலவே பார்க்கிறார். குருவின் மூலம், இறைவனே நம்மை அற்ப அகந்தையின் எல்லைகளிலிருந்து வெளிவரவும், ஆன்மாவின் பரந்த கண்ணோட்டத்தில் வாழவும் உதவுகிறான். குருதேவர் விளக்கியது போல், ” சீடனுக்குள் உறங்கும் இறைவனை எழுப்பும் விழித்தெழுந்த இறைவன் தான் குரு. நமக்குள் தெய்வீக பிம்பத்தைத் எழுப்புவதற்கு தேவையான அனைத்தையும் அவர் நமக்குத் தருகிறார்: அமைதியற்ற மனதைத் தாண்டி நம்மைத் தாங்கும் எல்லையற்ற உணர்வுநிலையை அணுகுவதற்கான வழிமுறைகள்; இந்த உலகின் மாறிவரும் மதிப்புகளுக்கு மத்தியில் ஆன்ம அனுபூதிக்கு வழி காட்டும் ஆன்மீக வாழ்க்கைக்கான காலத்தால் அழியாத உண்மைகள்; மற்றும் அவரது நிபந்தனையற்ற அன்பு. அவர் ஒரு அன்பு சீடருக்கு எழுதினார், “நான் உனக்கான எனது பணியை ஒருபோதும் கைவிட மாட்டேன்… நான் உன்னை மன்னிப்பது மட்டுமல்லாமல், எத்தனை முறை விழுந்தாலும் உன்னை உயர்த்துவேன்.” கர்மவினை மற்றும் வேரூன்றிய பழக்கவழக்கங்களின் தாக்கத்தை விட மிகவும் சக்தி வாய்ந்தது அவரது உதவி மற்றும் அருளாசிகளின் சக்தி, மேலும் அவரது உதவியுடன், அனைத்து தடைகளையும் கடக்க முடியும். அவரைப் பொறுத்தவரை, நமக்கு தெய்வீக விழிப்புணர்வைக் ஏற்படுத்த எந்த முயற்சியும் தியாகமும் அவருக்கு மிகப் பெரியது அல்ல.
குரு நம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார், அவருடைய வழிகாட்டுதலை உள்வாங்கி பிரயோகிக்க விருப்பமாக வெளிப்படுத்தும் அவர் மீதான நமது விசுவாசமே, அவருடைய ஆன்மீக அருளைப் பெறுவதற்கு நம் மனம் மற்றும் இதயத்தின் வாயில்களைத் திறக்கிறது. அகங்காரத்தின் எதிர்ப்பை வெல்ல உங்கள் சுதந்திர விருப்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் உணர்வுநிலையை மாற்றவும் தூய்மையாக்கவும் அவரை அனுமதிப்பீர்கள். அவரை உங்கள் ஆன்மாவின் நிலையான தோழனாக மாற்ற நீங்கள் தினமும் முயற்சிக்கும்போது அவரது அன்பான ஆதரவு குறித்த விழிப்புணர்வு உங்களுக்குள் சீராக வளரும். நீங்கள் அவருடைய எழுத்துக்களைப் படிக்கும்போது, நீங்கள் ஒருபோதும் தனியாக இல்லை என்பதை உங்களுக்கு நினைவூட்டிபடி, உங்கள் மனசாட்சியில் அவரது உயிருள்ள குரலாகவும், அருளாசி வழங்கும் கரத்தின் ஆறுதலான தொடுதலாகவும் மாறும் வரை அவரது வார்த்தைகள் உங்கள் உணர்வுநிலையில் ஆழமாக மூழ்கட்டும். நீங்கள் தியானிக்கும்போது, உங்கள் பக்தியின் மூலம் அவரை உங்கள் ஆன்மாவின் சலனமற்ற நிலைக்குள் அழைக்கவும். அந்த புனித மெளனத்தில், பிரிவு என்ற மாயையிலிருந்து இறைவனின் எல்லையற்ற அன்பு மற்றும் ஆனந்தத்துடன் அனைத்தையும் பூர்த்தி செய்யும் ஒருமைக்கு உங்களை உயர்த்த அவர் காத்திருக்கிறார். ஜெய் குரு!

இறைவன் மற்றும் குருதேவரின் அன்பு மற்றும் தொடர்ச்சியான அருளாசிகளுடன்,
ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதா

Copyright © 2014 Self-Realization Fellowship. அனைத்து உரிமைகளும் பிரத்தியேகமானவை

இதைப் பகிர