உக்ரைன் போர் பற்றி சுவாமி சிதானந்த கிரியிடமிருந்து ஒரு செய்தி

3 மார்ச், 2022

ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ சுவாமி சிதானந்த கிரி, இந்த செய்தியை பரமஹம்ஸ யோகானந்தரின் பக்தர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார் :

“உக்ரைன் போர் குறித்து உலகளவில் மிகுந்த கவலையை ஏற்படுத்தும் இந்த நேரத்தில், தங்கள் உயிர், குடும்பங்கள் மற்றும் நல்வாழ்வு ஆபத்திற்கு உட்பட்டிருக்கும் அனைவருக்காகவும்—மேலும் உலகளாவிய நல்லிணக்கம் மற்றும் அமைதிக்காகவும், ஸெல்ஃப் ரியலைஸேஷன் ஃபெலோஷிப் மற்றும் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா-வின் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களை, தொடர்ந்து ஆழ்ந்து பிரார்த்திக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். மனிதகுலம் ஒரு குடும்பம், ஒரு தேசத்திற்கு எதிரான ஆக்கிரமிப்பு போர் நடவடிக்கைகள் இறுதியில் நம் அனைவரையும் பாதிக்கின்றன. இறைவனின் ஒளியானது–நமது உலகளாவிய குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களின் ஆன்மாக்கள், மனசாட்சி மற்றும் நல்லெண்ணத்தின் மூலம் செயல்பட்டு-அப்பாவிகளைச் சுற்றி ஒரு சக்திவாய்ந்த பாதுகாப்பு கவசத்தையும், இந்த வன்முறை மற்றும் அழிவில் வெடித்துள்ள மனித இயல்பின் இருண்ட உந்துதல்களில் ஈடுபடும் அறியாமைக்கு ஒரு குணப்படுத்தும் எதிர்சக்தியையும், உருவாக்குமாக என்ற ஒரு சிறப்புப் பிரார்த்தனையில், என்னுடனும் பரமஹம்ஸ யோகானந்தரின் ஆசிரமங்களில் உள்ள சன்னியாசிகளுடனும், இணையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

“ஒருமுகப்படுத்தப்பட்ட பிரார்த்தனைகள், அன்பு, மற்றும் தியானத்தில் இறைத் தொடர்பின் மூலம் கிடைக்கப் பெறும் இறைவனுடன் இசைவித்திருக்கும் எண்ணங்கள் மற்றும் ஆற்றல்கள் ஆகியவை, தீங்குச் சூழலில் இருப்பவர்களுக்கு பாதுகாப்பு, துணிவு மற்றும் அக வலிமையையும் – மேலும் தேசங்களின் தலைவர்களுக்கு ஞானம் மற்றும் சரியான புரிதலையும் கொண்டு வர உதவும். உலக விவகாரங்களில் தற்போதைய ஆபத்தான நேரத்தில் இந்த சக்திவாய்ந்த தலையீட்டு செயல்பாட்டைப் பயன்படுத்துவதில் நாம் ஒன்றிணைவோம் – தற்போதைய மோதலில் அவதிப்படும் அனைவருக்காகவும், மேலும் நீடித்த அமைதி மற்றும் நல்லிணக்கத்தை கொண்டு வருவதற்கு ஒரே நிரந்தர வழியான, உலகளாவிய ஆன்மீகக் கோட்பாடுகள் மற்றும் தெய்வீக வாழ்க்கை முறைகளுக்கு உலகளாவிய குடும்பத்தின் தொடர்ச்சியான விழிப்புணர்வுக்காகவும் ஒன்றிணைவோம்.”

பரமஹம்ஸ யோகானந்தர், தனிப்பட்ட மற்றும் கூட்டு தியானங்களின் முடிவில் செய்வதற்கான குணமளிக்கும் உத்தியைக் கற்பித்தார். ஒய்.எஸ்.எஸ்/எஸ்.ஆர்.எஃப் தலைவர் சுவாமி சிதானந்தாஜியுடனான இந்த நடைமுறையில் ஒரு சிறிய காணொளி வழியாக, கலந்து கொள்ளுமாறு நாங்கள் உங்களை அழைக்கிறோம், இதில் அவர் உலகிற்கு குணப்படுத்துதல் மற்றும் அமைதியைக் கொண்டுவருவதற்கான பிரார்த்தனையின் வியக்கத்தக்க சக்தியைப் பற்றிப் பேசுகிறார்.

மனிதகுலத்தின் பரிணாம வளர்ச்சிக்கான பரமஹம்ஸரின் தொலைநோக்கு ஞானம்

மனித குலம் தொடர்ந்து அதிக புரிதல், ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பை நோக்கி பரிணமித்து வரும் இந்த கட்டத்தில், உலக ஒற்றுமைக்கான அடித்தளத்தை உருவாக்க நாம் அனைவரும் எடுக்கக்கூடிய ஆன்மீக நடவடிக்கைகள் குறித்து பரமஹம்ஸ யோகானந்தரின் தொலைநோக்கு ஞானத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.

பரமஹம்ஸ-யோகானந்தர்-தூர-பார்வை-மனிதநேயம்-ஞானம்

இரண்டாம் உலகப் போர் காலத்தில் வழங்கப்பட்ட பரமஹம்ஸ யோகானந்தரின் உரைகள் மற்றும் எழுத்துக்களிலிருந்து:

இந்தப் போரிலிருந்து மக்கள் தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டினால் ஏற்படும் பெரும் சேத விளைவுகளை அறிந்து கொள்வர்….இது முடிந்த பின்னர், உலக அழிவைக் குறித்து எந்த அளவு அச்சம் இருக்குமென்றால், எந்த தேசமாவது ஒரு போரைத் துவங்க முயற்சி செய்தால், உலகத்தின் ஏனைய நாடுகள் அந்த நாட்டை தடுத்து விடும். நான் வர இருக்கும் காலத்தில் நடக்க இருப்பதைப் பற்றி கூறிக் கொண்டிருக்கிறேன்.

உலகில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் இறைவனுடன் தொடர்பு கொள்ளக் கற்பிக்கப்பட்டால் (வெறுமனே அறிவுப்பூர்வமாக அவனை அறிவது மட்டுமல்ல) பின் அமைதி ஆட்சி செலுத்த முடியும் என நான் நம்புகிறேன்; அதற்கு முன்பு அல்ல. தியானத்தின் விடாமுயற்சியின் வாயிலாக அவனுடனான தொடர்பின் மூலம் நீங்கள் இறைவனை உணர்ந்தறிகிற பொழுது, மனித இனம் முழுவதையும் தழுவிக் கொள்ள உங்கள் இதயம் தயாராக்கப்படுகிறது.

போர்கள் குறைய வேண்டுமாயின் உலகம் மேலும் மேலும் ஆன்மீகத்திற்கு மாற வேண்டும்….அன்பு, உலகளாவிய சகோதரத்துவம், அமைதி, ஆனந்தம், பகிர்வு – இவை மட்டுமே உலகிற்கு அமைதியைக் கொண்டு வர முடியும்.

உலகை உங்களது சொந்த நாடாக நேசிப்பீர்கள் எனவும், உங்களது குடும்பத்தை நீங்கள் நேசிப்பது போல் உங்களது நாட்டை நீங்கள் நேசிப்பீர்கள் எனவும் உறுதி கொள்ளுங்கள். ஞானம் என்னும் அழிக்க முடியாத அஸ்திவாரத்தின் மீது ஒரு உலக குடும்பத்தை நிறுவுவதற்கு இந்த புரிதலின் வாயிலாக நீங்கள் உதவிபுரிவீர்கள்.

அவன் மீது தியானம் செய்ய ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள். இறைவனுடன் நீங்கள் தொடர்பு கொள்கிற பொழுது ஒவ்வொருவரையும் உங்கள் சொந்தமாக உணர்வீர்கள். எவரும், அவர் என்னுடையவர் அல்ல என்பதாக என்னை உணர வைக்க முடியாது. அனைவரும் இறைவனின் குழந்தைகள், மேலும் அவன் என் தெய்வத் தந்தை.

மகான்கள் தான் முன்மாதிரிகள். அவர்கள், தங்கள் சரீரங்கள் வரையரைக்குட்பட்டதாய் இருந்தாலும், தாங்கள் எல்லையற்ற பெருங்கடலின் ஒரு பகுதி; அனைத்து தனிப்பட்ட வடிவங்களும் பிரபஞ்ச கடலின் அலைகள் என்பதை அகத்துள் உணர்ந்தனர்; இந்த உலகில் நாம் ஒரு சிறிய குடும்பத்திற்குள் நம்மைச் சுருக்கிக் கொண்டுள்ளோம். அண்டை வீட்டாரை நேசித்தால், நாம் விரிவடைகிறோம். நம் தேசத்தை நேசித்தால், நாம் மேலும் விரிவடைகிறோம். நாம் எல்லா நாடுகளையும் நேசிக்கும்போது, மேலும் மேலும் விரிவடைந்துவிடுகிறோம். மறுமையில், அல்லது இங்கு உடலில் இருக்கும்போதே ஆழ்ந்த தியானம் மூலம், இறைவனுடன் ஒன்றி இருக்கும் போது, பெருங்கடல் தான் அலை என்றும், அலையே பெருங்கடல் என்றும் உண்மையாக உணர்ந்து கொள்கிறோம்.

இந்த வாழ்க்கையின் நிழல்களுக்கு சற்றுக் கீழே இறைவனின் அற்புதப் பேரொளி உள்ளது. இந்தப் பிரபஞ்சம் அவனுடைய சான்னித்தியத்தின் பரந்தகன்ற ஆலயமாகும். நீங்கள் தியானம் செய்யும் பொழுது எல்லா இடங்களிலும் அவனுக்கான வாயில்கள் திறப்பதைக் காண்பீர்கள். நீங்கள் அவனுடன் தொடர்பு கொள்ளும் பொழுது அந்த பேரானந்தத்தையும் பேரமைதியையும் உலகின் ஒட்டுமொத்த நாசங்களாலும் கூட குலைக்க முடியாது.

பயிற்சிக்கான உறுதிமொழி: “வாழ்விலும் சாவிலும், நோயிலும் பஞ்சத்திலும், கொள்ளை நோயிலும் அல்லது ஏழ்மையிலும் என்றென்றும் உன்னையே பற்றியிருப்பேனாக. குழந்தைப் பருவம், இளமை, முதுமை ஆகிய மாறுதல்கள் மற்றும் உலகத்தின் பெரும் மாற்றங்கள் ஆகியவற்றால் தீண்டப்பட முடியாத அழிவற்ற மெய்ப்பொருள் நான் என்பதை நான் அறிய எனக்கு உதவி புரிவாய்.

எங்கள் வலைத்தளத்தில் கூடுதல் தகவல் வளங்கள்

“இந்த சவாலான கால கட்டங்களுக்குத் தேவையான ஆன்மீக ஒளி” என்ற வலைப்பக்கத்தில், அச்சம் மற்றும் எதிர்மறையை சமாளிப்பதற்கான,
பரமஹம்ஸ யோகானந்தர், ஸ்வாமி சிதானந்தாஜி மற்றும் கடந்த கால ஒய் எஸ் எஸ்/ எஸ் ஆர் எஃப் தலைவர்கள் வழங்கிய நடைமுறை ஆதாரங்களையும், மேலும் உலக நிலைமை குறித்து ஒரு நம்பிக்கையான கண்ணோட்டத்தை உங்களுக்குள் உருவாக்கிக் கொள்வது எப்படி என்பதையும் நீங்கள் காண்பீர்கள். பரமஹம்ஸ யோகானந்தரால் தொடங்கப்பட்ட ஒரு கூட்டு ஆன்மீக முயற்சியான ஒய்.எஸ்.எஸ்/எஸ்.ஆர். எஃப் உலகளாவிய பிரார்த்தனைக் குழுவில் பங்கேற்பதையும் கருத்தில் கொள்ளுங்கள் .

“இந்த சவாலான கால கட்டங்களுக்குத் தேவையான ஆன்மீக ஒளி”

உலகளாவிய பிரார்த்தனைக் குழு

பிரார்த்தனைகள் & சங்கல்பங்கள்

இதைப் பகிர