ஸ்ரீ ஸ்ரீ சுவாமி சிதானந்த கிரியிடமிருந்து ஒரு புத்தாண்டு செய்தி 2020

31 டிசம்பர், 2019

புத்தாண்டு செய்தி 2020: ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்பின் நூற்றாண்டு நிறைவு விழா

"தெய்வத் தந்தையே, உமது எல்லைகளற்ற வெளிப்பாட்டில் நாங்கள் உம்மை உணரும் வரை, ஒவ்வொரு நாளும் ஆன்மீக உணர்ந்தறிதலின் ஒரு புதிய ஆண்டாக, ஒரு புதிய சுழற்சியாக, இருக்க எங்களை ஆசீர்வதியுங்கள்."

அன்பர்களே,

ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் உலகளாவிய ஆன்மீகக் குடும்பத்தில் உள்ள நமது அன்பு நண்பர்களுக்கு, மனமார்ந்த நட்பு மற்றும் அன்புடன் மகிழ்ச்சியான புத்தாண்டு வாழ்த்துக்கள்! நமது ஆன்மாக்களில் இயல்பாகவே இருக்கும் நம்பிக்கை நிறைந்த உணர்வுநிலையில், மேலே மேற்கோள் காட்டப்பட்ட பரமஹம்ஸரின் சக்தி வாய்ந்த பிரார்த்தனையின் மூலம் உயர்த்தப்பட்டு 2020-க்குள் நுழைவோம்-இந்த வருடத்தின் இந்தச் சிறப்புமிக்க நேரம் வளர்ச்சி, மாற்றம், பரிணாமம், புதுப்பித்தல் ஆகியவற்றுக்கான தெய்வீக வாய்ப்பைப் பிரதிபலிக்கிறது என்பதை அறிவோம்.

கடந்த கிறிஸ்துமஸ் பருவத்தில் அனுப்பப்பட்ட – உலகெங்கிலும் அருகில் மற்றும் தொலைதூரத்தில் இருந்தும்- உங்கள் வாழ்த்து அட்டைகள், பரிசுகள் மற்றும் அன்பு மற்றும் ஆதரவு செய்திகளுக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன். உங்கள் தெய்வீகத் தோழமை என் இதயத்தை எப்படி தொடுகிறது என்பதையும் பரமஹம்ஸரின் ஆசிரமங்களில் பணிபுரியும் சன்னியாசிகளான எங்கள் அனைவருக்கும் எவ்வளவு முக்கியம் என்பதையும் நீங்கள் அறிய மாட்டீர்கள்; எல்லாவற்றிற்கும் மேலாக, நம் குருதேவரின் பேறுபெற்ற போதனைகள் மற்றும் உத்திகளை உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக்குவதற்கான உங்களின் நேர்மை மற்றும் அர்ப்பணிப்பை காண்பது. இறைவன் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக!

கடந்த ஆண்டு யோகதா சத்சங்க சொஸைடக்கும் ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்புக்கும் ஒரு சிறப்பு ஆண்டாக இருந்தது—வரலாற்றில் ஒரு மைல்கல் மற்றும் குருதேவர் பணியின் வெளிப்பாடு—நிறைவுற்ற ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் பாடங்கள் வெளியிடப்பட்டது. மேலும் இந்தப் புதிய ஆண்டு மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கும் – பரமஹம்ஸர் ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்பை நிறுவியதன் நூற்றாண்டு நிறைவு விழா. இறைவனை எவ்வாறு அறிவது மற்றும் தொடர்புகொள்வது என்பது பற்றிய இந்தியாவின் பொக்கிஷமான கடந்த காலத்திலிருந்து மிக உயர்ந்த புனித போதனைகளை மேற்கத்திய நாடுகளுக்கு கொண்டு வருவதற்காக நூறு ஆண்டுகளுக்கு முன்பு, அவர் அமெரிக்காவிற்கு வந்தார். அவர் பாஸ்டனில் கப்பலில் இருந்து இறங்கும் போது தனியாகவும், நண்பனற்றவராகவும் இருந்த போதிலும், இந்தியாவின் காலத்தால் மதிக்கபட்ட உண்மைச் செய்தியை ஆர்வத்துடன் நாடுபவர்களின் பெருகும் கூட்டத்தால் அவர் விரைவில் சூழப்பட்டார். நமது குருதேவர் சென்ற இடமெல்லாம், அவர் ஆத்ம நண்பர்களை உருவாக்கி, பின்பற்றுபவர்களையும் சீடர்களையும் ஈர்த்தார், அவருடைய பணி தற்போதுள்ள உலகளாவிய அமைப்பாக வளர்ந்தது.

நீங்கள் அனைவரும் அந்த வளர்ச்சியின் ஒரு பகுதி. அறியாமை, சுயநலம் மற்றும் இருளில் இருந்து இறைவனின் ஒளி மற்றும் ஆன்மீக உணர்வை நோக்கி திரும்புவதற்கு மக்களையும் தேசங்களையும் ஊக்குவிக்கும், சக்தியையும் வேகத்தையும் ஈர்த்துக்கொள்ளும் உலக போதனையாகிய ஒரு தெய்வீகப் பணியை ஒளிர்விக்க உதவும் பூமியில் சிதறி பிரகாசிக்கும் ஆபரணங்களாக நான் உங்களைப் பார்க்கிறேன். உலகம் முழுவதிலுமிருந்து ஐந்து, பத்து, இருபது, முப்பது ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் போதனைகளை கடைப்பிடித்த பக்தர்களை நான் சந்தித்திருக்கிறேன்.
அத்தகைய மிகுந்த அன்பும் நற்குணமும், அத்தகைய நேர்மறை மனநிலை மற்றும் உள்ளார்ந்த ஞானமும், அவர்களின் கண்கள், முகங்கள் மற்றும் முழு இருப்பிலிருந்தும் வெளிப்படுகிறது! நடைமுறை ஆன்மீகம் நிறைவேற்றக்கூடிய வாக்குறுதி தான் இது.

எனவே, இந்த நூற்றாண்டு நிறைவு வருடம், பரமஹம்ஸர் மற்றும் அவரது குரு பரம்பரை மூலம் நமக்கும் உலகுக்கும் வழங்கப்பட்ட ஆன்ம பரிசுகள் மற்றும் வாய்ப்புகளுக்கான புதுப்பிக்கப்பட்ட உத்வேகம் மற்றும் நன்றியுணர்வுடன் ஒரு அற்புதமான நினைவு கூறும் காலமாக இருக்கும். திட்டமிடப்பட்டுள்ள சிறப்பு நிகழ்வுகளைப் பற்றி அறிய நீங்கள் ஒவ்வொருவரும் எஸ் ஆர் எஃப் வலைதளத்திற்கு வருகை தருவீர்கள் என்று நம்புகிறேன்.

நமது குருதேவருக்கு நாம் பாராட்டுக்களைத் தெரிவிப்பதற்கான மிகச் சிறந்த வழி, அவருடைய போதனைகள் மற்றும் குறிக்கோள்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பதுதான். இந்த புத்தாண்டின் ஆரம்பம் அந்தத தீர்மானத்தை செய்ய சிறந்த நேரம். இறைவனின் பிரதிபிம்பத்தில் உருவாக்கப்பட்ட ஆன்மாக்களான நாம் அப்படி இருக்க விரும்புவதையும் சாதிப்பதையும் தடுக்கும் ஆன்மீகமற்ற பழக்கவழக்கங்களை—குறைந்தது அவற்றில் சிலவற்றையாவது—நம் வாழ்விலிருந்து களைய தீர்மானிப்போம்.

அந்த பிரதிபிம்பத்தை உணர, நாம் தியானம் செய்ய வேண்டும். இப்பொழுதோ அல்லது இன்று மாலை உங்கள் வழக்கமான தியானத்தின் போதோ மௌனத்தில் அமர சிறிது நேரம் ஒதுக்குங்கள். பாடங்களில் கற்பிக்கப்படும் உத்திகளைப் பயிற்சி செய்யுங்கள்; இறைவனின் எந்த அம்சம் அல்லது வடிவம் உங்களுக்கு எழுச்சியூட்டுவதாக இருக்கிறதோ அதனுடன் உண்மையாகப் பேசுங்கள். நீங்கள் அதைச் செய்தால் – கண்களை கூடஸ்தா மையத்தில் வைத்து, இதயத்தை நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புடன் இசைவித்திருந்து – ஆன்மீக உணர்வுநிலை வெளிப்படுவதற்கான உள் உத்திரவாதத்தை நீங்கள் உணர்வீர்கள். சில சமயங்களில் நாம் இறை இருப்பின் உடனடி அறிகுறிகளையும் சான்றுகளையும் பெறாமல் போகலாம், ஏனெனில் நாம் அதிக விசுவாசத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவன் விரும்புகிறான், இது தசையைப் போல பயன்பாட்டில் வலுவடைகிறது. உண்மையில் அவன் அங்கே இருக்கிறானா என்று நாம் ஆச்சரியப்படுகிறோம். ஆனால் இயேசு, “ஒரு காசுக்கு இரண்டு சிட்டுக்குருவிகள் விலைக்கு விற்கப்படுவதில்லையா? ஆனால், உங்கள் தந்தையின் சித்தமில்லாமல், அவற்றில் ஒன்றாகிலும் தரையிலே விழாது” என்று கூறினார். இறைவன் நம்மைப் பற்றி அறிந்திருப்பவன்; ஆனால் நாம் அவனைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்! அது பொறுமையான தியானப் பயிற்சி, கூடவே விசுவாசம் மற்றும் நேர்மறை சிந்தனை ஆகியவற்றின் மூலம் வருகிறது—நமது ஆன்மீக பரிணாம வளர்ச்சியின் அடுத்தபடி என்ற எண்ணத்துடன் எதிர்கொள்ளும் எதையும் எடுத்துக்கொள்வது, எப்போதும் இணக்கம் மற்றும் சரியான மனப்பான்மைக்காக உள்ளார்ந்து பாடுபடுவது: “எம்பிரானே, இந்த அனுபவத்திலிருந்து நான் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? நான் எப்படி எதிர்வினையாற்ற வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? தைரியத்துடனும், என் இதயத்தில் உமது அன்புடனும் இந்தப் பாதையில் செல்லும் திறனை எனக்கு அளித்தருளும்.” இந்த வழியில் நீங்கள் நிச்சயமாக உங்கள் பயணத்தின் முடிவில் அவனைக் காண்பீர்கள்.

எனது தியானங்களில் உங்கள் அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறேன். இறைவனின் அருளாசிகள் உங்களிடம் பாய்வதை உணர்வீர்களாக. இறை அன்பின் பாதுகாப்புக் கவசம் உங்களைச் சூழ்ந்திருப்பதை காட்சிப்படுத்திக் கொள்ளுங்கள். அந்த ஒளியிலும் அன்பிலும் ஆன்மாக்கள் ஒன்றுபட்ட குடும்பமாக, இந்த ஆண்டை குருதேவரின் பணி வரலாற்றில் ஒரு மைல்கல்லாக மட்டுமல்லாமல், நமது சொந்த ஆன்மீக வாழ்வில் ஒரு தனிப்பட்ட மைல்கல்லாகவும் மாற்றுவோம். குருதேவரின் இந்த அழகான வார்த்தைகளை நினைவில் கொள்ளுங்கள்:

“செல்ஃப்-ரியலைசேஷன் பெலோஷிப் [யோகதா சத்சங்க சொசைடி ஆஃப் இந்தியா] இன் ஒரு நோக்கம் இறைவனுடன் தனிப்பட்ட தொடர்புக்கான வழியை தனிநபருக்கு கற்பிப்பதாகும். முயற்சி செய்பவர்கள் அவரைத் தவறவிட முடியாது. உங்கள் இதயத்தில் ஒரு மனப்பூர்வமான உறுதிமொழி எடுத்து, நீங்கள் இனி நேரத்தை வீணாக்காமல் இருக்கவும், அவரைக் கண்டறிய வேண்டும் என்ற எப்போதும் உயிரோட்டமாக இருக்கும் விருப்பத்தை உங்களுக்கு ஆசீர்வதிக்குமாறும் தந்தையிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.... இன்றிலிருந்து, நீங்கள் இறைவனுக்காக மிக உயர்ந்த முயற்சி மேற்கொள்வீர்கள், மேலும் நீங்கள் அவரில் நிலைபெறும் வரை ஒருபோதும் கைவிடமாட்டீர்கள் என்பதும் தான் உங்கள் ஒவ்வொருவருக்குமான எனது பிரார்த்தனை.”

இந்த புத்தாண்டில் இறைவன் உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் அவருடைய அமைதி, அன்பு மற்றும் ஆனந்தம் கிடைக்கப் பெற ஆசீர்வதிப்பாராக.

சுவாமி சிதானந்த கிரி

இதைப் பகிர