சுவாமி சிதானந்த கிரியிடமிருந்து ஒரு புத்தாண்டு செய்தி

31 டிசம்பர், 2018

புத்தாண்டு 2019

"புது வருடம் தொடங்கியவுடன் இதுவரை மூடப்பட்டிருந்த தளைகளின் அனைத்து நுழைவாயில்களும் திறக்கப்பட்டுவிடும். அவைகளின் வழியாகப் பரந்த வெளிகளில் நுழைவேன். ஏனெனில் அங்குதான் என் வாழ்க்கையின் பயனுள்ள எல்லாக் கனவுகளும் நிறைவேற்றப்படும்."

ஒரு புது வருடத்திற்குள் நாம் நுழையும் சமயம், குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தரின் ஆசிரமங்களில் உள்ள நாங்கள் உங்களுக்கும் நம் ஆன்மீக குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும், கிறிஸ்துமஸ் மற்றும் ஆண்டு முழுவதும் உங்கள் தெய்வீகத் தோழமையின் வெளிப்பாடுகளுக்கு இதயப்பூர்வமான பாராட்டுக்களை தெரிவிக்கும் விதமாக, அன்பான எண்ணங்களை அனுப்புகிறோம். உங்கள் இதயத்திற்கு பிடித்தமான தகுதியான நோக்கங்களை நிறைவேற்ற வரும் ஆண்டில் இறைவன் உங்களுக்கு உதவ வேண்டும் என்று எங்கள் புத்தாண்டு தியானங்களில், நாங்கள் சிறப்பு பிரார்த்தனைகளை செய்கிறோம்.

மேலே கொடுக்கப்பட்ட நமது குருவின் அற்புதமான உறுதிமொழியை உங்களுக்குள் ஆழமாக உள்வாங்கிக் கொள்ளுங்கள், மேலும் அவருடைய வார்த்தைகளின் வழியாகப் பாயும் தெய்வீக சக்தியின் ஒருமுனைப்பாட்டுடனான உங்கள் கிரகிப்பு புதிதாகத் துவங்க உங்களுக்கு உதவட்டும். அது உங்கள் விருப்பத்திற்கு சக்தியூட்டட்டும் மற்றும் இறைவனின் உதவியால் நீங்கள் எல்லா தடைகளையும் கடக்க முடியும் என்ற உங்கள் ஆன்மாவின் நம்பிக்கையை வெளிப்படுத்தட்டும். நடந்து முடிந்த கிறிஸ்மஸ் தியானங்களின் போது, நீங்கள் விரும்பும் நபராக மாறுவதற்கான எல்லையற்ற திறனை உங்களுக்குள் புதிதாக உணர்ந்தீர்கள் என்று நம்புகிறேன். இப்போது அந்த உத்வேகத்தின் மீது செயல்பட இது ஒரு சிறந்த நேரம் – உங்கள் போற்றுதலுக்குரிய கனவுகள் மற்றும் ஆன்மீக திறன்களை செயல்படுத்தப்பட்ட உண்மைகளாக மாற்றுவதற்கான உங்கள் உறுதியை புதிய வீரியத்துடன் ஊக்குவித்தல்.

தியானம் அல்லது ஆழ்ந்த பிரார்த்தனையில் செய்யப்படும் புத்தாண்டுத் தீர்மானங்களில் உறுதியான சக்தி உள்ளது, ஏனென்றால் அவை உயர் உணர்வு நிலையிலிருந்து தெய்வீக உதவியால் உயிர்ப்பிக்கப்படுகின்றன. பரமஹம்ஸர், ஒன்று அல்லது சில தகுதியான இலக்குகளில், அல்லது நீங்கள் குறிப்பாக வளர்த்துக் கொள்ள விரும்பும், அமைதி மற்றும் சமநிலை மனப்பான்மை, அல்லது மற்றவர்களிடம் கருணை மற்றும் புரிதல் போன்ற ஆன்மக் குணங்களில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார். வரவிருக்கும் மாதங்களில் உங்கள் தியானங்களின் போது, ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் உத்திகளைப் பயிற்சி செய்வதால் உண்டாகும் அமைதியான ஏற்புத்திறனுடன் உங்கள் அகப் பார்வை மற்றும் உணர்வில் அந்த இலக்கின் சாதனையை காட்சிப் படுத்திப் பாருங்கள்; நீங்கள் அடைய விரும்புவது உங்கள் இருப்பின் ஒரு பகுதியாக மாறிவிட்டது என்ற எளிய, நேரடியான ஒரு சங்கல்பத்தை மீண்டும் மீண்டும் கூறுங்கள். நீங்கள் என்னவாக இருக்க விரும்புகிறீர்களோ, அதை, சிறிய வழிகளில் கூட, வெளிப்படுத்தும் போதெல்லாம், அந்த காட்சிப்படுத்தப்பட்ட திறன் அதிகம் புலப்படத் தொடங்கும். நீங்கள் வெற்றிபெற முடியும் என்ற அமைதியான நம்பிக்கையினால், சுய சந்தேகத்தை மாற்றி, எவ்வளவு அதிகமாக தடைசெய்யும் எண்ணங்களைத் தள்ளிவிடுகிறீர்களோ, அவ்வளவு விரைவாக நீங்கள் முன்னேறுவீர்கள். உங்கள் பழக்கவழக்கங்கள், உங்கள் கூட்டாளிகள் மற்றும் வெளிப்புற சூழல் அல்லது உண்மையான நீங்கள் – உங்கள் ஆன்மா, இவற்றில் எது உங்கள் வாழ்க்கையின் போக்கை தீர்மானிக்கிறது என்பதை அறிந்து, உணர்வு பூர்வமாக வாழ்வதை பயிற்சி செய்யுங்கள். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க உங்களுக்கு சக்தி இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் ஆன்மத்தின் பகுத்தறிதல் மற்றும் சுதந்திர விருப்ப சக்தி மூலம் உங்கள் எண்ணங்களையும் செயல்களையும் தேர்ந்தெடுங்கள்; பின்னர் உங்கள் சுதந்திரப் பயணத்தை எதுவும் தடுக்க முடியாது.

இந்த புத்தாண்டில் செய்ய வேண்டிய மிகச் சிறந்த தீர்மானம், உங்கள் இதயத்தையும் மனதையும் தெய்வீகத்தில் தொடர்ந்து ஆழ்ந்து இருக்கச் செய்வதாகும். இறைவனின் ஆதரவுடனான சர்வ வல்லமையுடன் நீங்கள் எதையும் செய்ய முடியும். அந்த அகத் தொடர்பின் ஒளியில், தேவையற்ற பழக்கவழக்கங்கள் ஒழிக்கப்படலாம்; இறை அன்பின் மாற்றும் விளைவால், உங்கள் மீதான மாயையின் செல்வாக்கு இறுதியில் அழிக்கப்படும். நீங்கள் உங்கள் எண்ணங்கள் மற்றும் செயல்களை, மேலும் இவற்றின் மூலம் உங்கள் விதியையும் ஆள்பவர் ஆகிறீர்கள். குருதேவர் எங்களிடம் கூறுயுள்ளார், “தன்னை வென்றவனாக இருப்பதென்பது – உங்களது எல்லைக்குட்படுத்தப்பட்டுள்ள உணர்வுநிலையை வென்று உங்களுடைய ஆன்மீக ஆற்றல்களை வரையரையின்றி விரிவாக்கி உண்மையிலேயே வெற்றியாளனாக இருப்பதாகும். நீங்கள் எவ்வளவு தொலைவு செல்ல விழைகின்றீர்களோ அவ்வளவு தொலைவு அனைத்து வரையறைகளையும் கடந்து, ஓர் ஒப்புயர்வற்ற வெற்றிகரமான வாழ்க்கையை வாழ முடியும்.” இந்தப் புத்தாண்டில் உங்கள் முயற்சிகள் அந்த உன்னத வெற்றிக்கு உங்களை இன்னும் நெருக்கமாகக் கொண்டு வரட்டும்.

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்,
சுவாமி சிதானந்த கிரி.

இதைப் பகிர