ஷ்ரத்தா மாதா எழுதிய “தொடங்குங்கள்!”

10 ஜனவரி, 2023

ஷ்ரத்தா மாதா (1895–1984) 1933 ஆம் ஆண்டில் பரமஹம்ஸ யோகானந்தரைச் சந்தித்தார், மேலும் சிறிது காலத்திற்குப் பிறகு செல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் சன்னியாச பரம்பரையில் இணைந்தார். பின்னர் பரமஹம்ஸ யோகானந்தரால் செல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்பின் இயக்குநர்கள் குழுவில் நியமிக்கப்பட்டார் ,அவர் தனது வாழ்நாள் முழுவதும் அந்த பதவியில் பணியாற்றினார். இந்த கட்டுரை முதலில் 1935 ஆம் ஆண்டில் செல்ஃப் — ரியலைசேஷன் ஃபெலோஷிப்பின் இதழுக்காக அவரால் எழுதப்பட்டது, ஆனால், இப்போது புதிய ஆண்டின் தொடக்கத்தில் அல்லது தற்போதைய தருணம் உங்களுக்கு வழங்கும் அரிய வாய்ப்பை நீங்கள் பயன்படுத்த விரும்பும் எந்த நேரத்திலும், அதன் செய்தி, எப்போதும் பொருத்தமானதாக இருக்கும்.

உங்களுக்கு ரகசிய லட்சியம் இருக்கிறதா? இன்று நீங்கள் வாழ்க்கையை மறுபடியும் தொடங்குவதற்கு உங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

வாழ்க்கை அந்த தேர்வை உங்களுக்கு வழங்குகிறது. காலத்தின் பிளாஸ்டிக் களிமண் உங்கள் விருப்பப்படி வடிவமைக்க உங்கள் கைகளில் உள்ளது. பெரும்பாலும் சாத்தியமற்றதாகத் தோன்றும் சாதனை மிகவும் சரியானதாக இருக்கும். உங்களால் முடியாது என்று நீங்கள் நினைத்ததை — தொடங்குங்கள்!

உங்கள் தடையாக இருக்கும் சிந்தனைப் பழக்கங்களாகிய சுய-தளைகளை நீக்கி விடுங்கள். உள்ளுணர்வைக் கேளுங்கள். ஆன்மா என்னும் கிணற்றில் ஆழ்ந்து செல்பவனுக்கு வாழ்க்கை மகிழ்ச்சியானஆச்சரியங்களைத் தருகிறது.

எந்த இலக்கையும் ஒரே நாளில் அடைய முடியாது. இன்றியமையாத ஒரு விஷயம் என்னவென்றால், நீங்கள் இப்போதே தொடங்க வேண்டும்—நாளை அல்ல. தொடங்குங்கள்! இந்த மாய தருணம், வாய்ப்புகள் எனும் பொக்கிஷ குகைகளின் திறவுகோல்.

உங்கள் விவேகம் எனும் நீர்த்தேக்கத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், அதன் ஆதாரம் எல்லையற்றது. சிறியதாக இருந்தாலும் முதல் படி எடுத்து வையுங்கள். வெளிக்கொணரப்படும் உங்கள் ஆற்றல், பனிப்பந்து போல, தன்னை மேலும் சேகரித்துக் கொள்ளும்.

“திறமை, பொறுப்பைக் கையாளுதலின் உச்ச நிலை.” உங்கள் உள்ளார்ந்த திறமை உங்கள் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்ட ஒரு பயனுள்ள விதையாகும். தள்ளிப்போடும் வறண்ட மண்ணில் அதை வாட விட உங்களுக்கு உரிமை இருக்கிறதா? உங்களுக்குள் அது விதைத்ததை நீங்கள் பற்றுறுதியுடன் அறுவடை செய்ய வேண்டும் என்று மட்டுமே வாழ்க்கை கேட்கிறது.

பணிக்குத் தேவையான அனைத்து விஷயங்களும் கைவசம் உள்ளன. விழித்தெழுந்த விழிப்புணர்வு கண்களால் அவற்றை அடையாளம் காணுங்கள்.

பதட்டமான, ஆர்வம் மிக்க முயற்சியுடன் அல்ல, ஆனால் எளிதாகவும் மகிழ்ச்சியுடனும் பணி ஆற்றுங்கள். செயலாற்றுவதை காட்டிலும் இலக்கை அதிகம் நேசிக்காதீர்கள். விழிப்புணர்வு மற்றும் அன்பான கைகளால், தற்சமயம் எனும் மின்னும் இழைகளை சாசுவதத்தின் வடிவத்தில் பின்னுங்கள்.

உங்கள் ஆடை வடிவமைப்பின் மின்னும் இழைகள் ஒரு கவனக்குறைவான தொடுதலால் அல்லது திசைதிருப்பப்பட்ட காற்றினால் சிதைந்துவிட்டால், அழாதீர்கள். புரிதலால் இதயத்தை வளமாக்கி, சுறுசுறுப்பான கரத்தோடு, பிறழாத நிலையான கண்களுடன், மீண்டும் தொடங்குங்கள்! தொடங்குவதை மட்டுமே செய்யுங்கள்! இதில் மட்டுமே மேதைமை உள்ளது.

“நீங்கள் எப்படிப்பட்டவர்களாயிருப்பீர்கள் என்பது இன்னும் வெளிப்படவில்லை” (1 யோவான் 3:2). விதையின் இதயத்தில் மலர் உறங்குகிறது. ஆனால் விதைக்கு அதன் ஆரம்பம் அல்லது முடிவு தெரியுமா? வெதுவெதுப்பையும், ஈரப்பதத்தையும் சேகரித்துக் கொண்டு, விரிவடைந்து வரும் அதன் இதயம் சூரியனை வரவேற்க மகிழ்ச்சியில் வெடிக்கிறது.

வாழ்க்கை உங்களை உற்சாகப்படுத்துகிறது, வேண்டுகிறது, செயல்பட கட்டளையிடுகிறது. இந்த நாளில், உங்களுக்குள் இருக்கும் அதன் உந்துதலை உணர்ந்து கொள்ளுங்கள். உங்கள் வரம்புகளின் ஓட்டை உடைத்து விடுங்கள். உங்கள் முகத்தை ஒளியை நோக்கித் திருப்பி, முன்செல்லுங்கள், உயிர்த்தெழுந்த மனிதகுமாரனே.

இதைப் பகிர