நினைவு அஞ்சலி – சுவாமி ஹிதேஷானந்த கிரி (1953-2021)

13 மே, 2021

குருதேவரின் யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியாவின் மூத்த சன்னியாசி சீடர்களில் ஒருவரான நமது மதிப்பிற்குரிய சுவாமி ஹிதேஷானந்த கிரி, மே 11, 2021 அன்று அமைதியாகக் காலமானார் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம். கோவிட் தொற்றின் முதல் அறிகுறியிலேயே அவர் உள்ளூர் ராஞ்சி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதித்ததில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. பல நாட்கள் அவருக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சுவாமி ஹிதேஷானந்தாவின் உடல் நிலை படிப்படியாக மோசமடைந்து, இறுதியில் அவர் இறைவனடி சேர்ந்தார்.

கோவர்தன் பிரசாத் என்ற பெயரிடப்பட்ட சுவாமி ஹிதேஷானந்தா பீகார் மாநிலத்தில் உள்ள சாப்ரா மாவட்டத்தைச் சேர்ந்தவர். இளமைப் பருவத்தில் வேலை மற்றும் உயர்கல்வி பெற புது தில்லிக்கு இடம் பெயர்ந்தார். கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் மூலம் – பகலில் பல்வேறு வேலைகளில் பணியாற்றுவது மற்றும் இரவில் வகுப்புகளுக்குச் செல்வது – இவ்விதம் கோவர்தன் பிரசாத் கல்லூரிக்கல்வி கற்று ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அவர் அடுத்ததாக தில்லி மேம்பாட்டு ஆணையத்தில் (டிடிஏ) அரசாங்கப் பணியை ஏற்றுக்கொண்டார், அதன் மூலம் அவர் பெற்ற பொருளாதார வசதி காரணமாக அவரது இரு சகோதரர்களையும் டெல்லிக்கு அழைத்து வரவும் மேலும் அவர்களது கல்வி தொடர்வதற்கும் அவரால் உதவ முடிந்தது .

அவரது அயராத உழைப்பு மற்றும் தளராத ஈடுபாடும், தேவையில் இருக்கும் மற்றவர்களுக்கு எப்போதும் உதவ வேண்டும் என்ற அவரது உயர்ந்த பண்பும் இணைந்து, அவர் வாழ்க்கையில் சந்தித்த அனைவரின் இதயங்களையும் தொட்டது மற்றும் அவரை ஒரு சிறந்த முன்மாதிரியாக எடுத்துக்காட்டியது.

டிடிஏ வின் ஊழியராக இருந்த பொழுதே, கோவர்தன் பிரசாத் பரமஹம்ஸ யோகானந்தரின் ஒய்எஸ்எஸ் போதனைகளின் ஆன்மீக சாதனையில் ஈடுபட்டிருந்தார். அவற்றைக் கடைப்பிடித்ததன் மூலம் அவர் கடின உழைப்பாளி, நேர்மையானவர் மற்றும் தூய்மையானவர் என்ற நற்பெயரைப் பெற்றார். அவரது ஒளிரும் பண்பும், உயர்ந்த கொள்கைகளும் அவரது சக ஊழியர்கள் பலருக்கு நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது- அவர்களில் சிலர் அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றி, இறுதியில் தீவிரமான மற்றும் அர்ப்பணிப்புள்ள சீடர்களாக மாறினர்.

சுவாமி ஹிதேஷானந்த கிரி 1986-ல் யோகதா சத்சங்க சன்னியாச பரம்பரையில் பிரவேசார்த்தியாக சேர்ந்தார். அவர் 1995 இல் ராஞ்சி ஆசிரமத்தில் தனது பிரமச்சரிய தீட்சையும், 2004 இல் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள எஸ் ஆர் எஃப் சர்வதேச தலைமையகத்தில் சன்னியாச தீட்சையும் பெற்றார்.

ஒய்எஸ்எஸ் சன்னியாசி சீடராக பல தசாப்தங்களாக சேவை செய்த சுவாமி ஹிதேஷானந்தா குருதேவரின்
ராஞ்சி, தட்சிணேஸ்வர், துவாரஹத் மற்றும் நொய்டா ஆசிரமங்களில் பல்வேறு பொறுப்புகள் ஏற்று பணியாற்றினார். ராஞ்சியில் அழகான ஸ்மிருதி மந்திர் மற்றும் தியான மந்திர் கட்டிடங்கள் கட்டியதில் அவரது பணி குறிப்பிடத்தக்கது. அவரது வாழ்க்கையின் பிற்பகுதியில், ஸ்வாமிஜி ஆசிரமத்தின் கடிதத் தொடர்புத் துறையில் பணியாற்றினார், அங்கு குருதேவரின் போதனைகளைப் பற்றிய அவரது ஆழமான புரிதல், ஆன்மீக ஆலோசனையை நாடும் எண்ணற்ற பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பக்தர்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளுக்கு எழுத்துப்பூர்வ பதில்களுக்கு பதிலாக தொலைபேசி ஆலோசனை வழங்கப்படுவதால், சுவாமி ஹிதேஷானந்தா எந்த நேரத்திலும் அழைப்புகளை ஏற்கத் தயாராக இருந்தார். அவரது அறிவுரை, நடைமுறைத் தன்மைக்கு ஏற்பவும் மற்றும் எப்பொழுதும் அவரது குருவின் போதனைகளைச் சார்ந்தும் அதற்கு இசைவாகவும் இருந்தது.

சுவாமி ஹிதேஷானந்தாவின் வாழ்நாள் முழுவதும் றைவன் மற்றும் குருதேவருக்கான அவரது
அர்ப்பணிப்பு மற்றும் முழு ஈடுபாட்டுடனான சேவை மூலம் நாம் தொடர்ந்து ஈர்க்கப்படுவோம். அனைத்து ஒய் எஸ் எஸ் சன்னியாசிகள், தொண்டர்கள் மற்றும் பக்தர்கள் அவரை இழந்து வருந்தும் அதே வேளையில், சுவாமி ஹிதேஷானந்தாவின் ஆன்மா இப்போது அனைத்து உடல் வரம்புகளிலிருந்தும் விடுபட்டு, தெய்வீக அன்னை மற்றும் நம் உயரிய குருமார்களின் ஒளி மற்றும் அன்பில் மூழ்கியுள்ளது என்பதை அறிவதில் நாம் ஆறுதல் அடைகிறோம்.

நமது தியானத்தின் போது, ஸ்வாமி ஹிதேஷானந்தா தனது எங்கும் நிறைந்த வீடு நோக்கி ஆன்மீக பயணத்தைத் தொடரும்போது, நம் இதயங்களைத் திறந்து, அன்பையும் பிரார்த்தனைகளையும் அவருக்கு அனுப்புவோம்.

இதைப் பகிர