
ஜூன் 16, 2016 அன்று புது தில்லியில் அவேக் இன் பிரீமியர்.
Awake: The Life of Yogananda,CounterPoint Films- இன் விருது பெற்ற பரமஹம்ஸ யோகானந்தரின் வாழ்க்கையைப் பற்றிய ஆவணப் படத்தை இந்தியா உற்சாகமாக ஏற்றுக் கொண்டது.
ஆவணப்படங்கள் பெரிய திரையில் அரிதாகவே காட்டப்படும் ஒரு நாடான இந்தியாவில், நாடு முழுவதும் இருபத்தைந்து முக்கிய நகரங்களில் உள்ள திரையரங்குகளில் நான்கு வாரங்கள் ஓடியபோது, அவேக் — விழித்தெழு கிட்டத்தட்ட 22,000 பார்வையாளர்களை ஈர்த்தது.
பல இந்திய செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகள் இப்படத்திற்கு சிறந்த பாராட்டுகளை தெரிவித்தன. எகனாமிக் டைம்ஸ் இதை “ஓர் எழுச்சியூட்டும், மனத்தை ஈர்க்கும், தகவல் அளிக்கும் ஆவணப்படம்” என்று அழைத்தது. மிட் டே கூறியது, ““அவேக், ஒரு தனித்துவமான அனுபவம், அது முற்றிலும் மூழ்கச்செய்வதும், முரண்பாடாக உன்னதமானதும் ஆகும்.” தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ், தி ஹிந்து போன்ற முன்னணி செய்தித்தாள்களில் திரைப்பட விமர்சனங்கள் மற்றும் அறிக்கைகளுடன், பரமஹம்ஸ யோகானந்தரைப் பற்றிய சிறப்பு அம்சங்களும் இடம் பெற்றிருந்தன.
யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா, மும்பை மற்றும் புது தில்லியில் அவேக் -கின் முதற்காட்சிகளை திரையிட ஏற்பாடு செய்வதற்கு படத்தின் வினியோகஸ்தருடன் சேர்ந்து பணியாற்றியது. YSS-இன் பொதுச் செயலாளர் ஸ்வாமி ஸ்மரணானந்தா கலை, விளையாட்டு, அறிவியல் துறையிலும், அரசாங்கத்திலும் உள்ள ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட இரண்டு நிகழ்வுகளிலும் படத்தை அறிமுகப்படுத்தினார். புகழ்பெற்ற பாரம்பரிய நடன கலைஞரும் நடன வடிவமைப்பாளருமான ராஜா ரெட்டி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி, அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் அனில் ககோட்கர் மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தின் தலைமைச் செயலாளர் திரு. அலோக் ரஞ்சன் ஆகிய புகழ்பெற்றோர் இந்த பட்டியலில் இடம்பெற்றிருந்தனர்.

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா-வின் பொதுச் செயலாளரான ஸ்வாமி ஸ்மரணானந்தா, ஜூன் 16, புது தில்லியில் நடந்த முதற்காட்சியில் அவேக்-கை (விழித்தெழு) அறிமுகப்படுத்தினார்.
படத்தின் முதற்காட்சிகளும் திரையரங்கு வெளியீடுகளும் ஜூன் 21-ஆம் தேதி இரண்டாம் ஆண்டு சர்வதேச யோகா தினத்திற்கு முந்தைய வாரத்தில் நிகழ்வதற்கு திட்டமிடப்பட்டன. இது பண்டைய யோக அறிவியலின் ஒப்பற்ற உலக ஆசிரியர் என்ற முறையில் பரமஹம்ஸருடைய அதிகமாக ஒப்புக்கொள்ளப்பட்ட பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
மூத்த ஒய் எஸ் எஸ் சன்னியாசி ஸ்வாமி ஸ்ரத்தானந்தா, இந்தியாவில் அவேக்-கின் வெற்றிகரமான அறிமுகத்தை இந்த வார்த்தைகளுடன் சுருக்கமாகக் கூறினார்: “குருதேவரின் இந்தப் படத்தின் வெளியீடு, திகைப்பூட்டும் ஆன்மீக ஒளியின் பெரும் பிரகாசத்துடன் தொடங்கியுள்ளது.”
ஜூலை 10 அன்று, ஜார்கண்ட் மாநில ஆளுநர் ஸ்ரீமதி. திரௌபதி மர்மு, ராஞ்சியில் உள்ள ராஜ்பவனில் அவேக் படத்தின் சிறப்புக் காட்சியை நடத்த ஆதரவு அளித்தார். மாநில அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சிக்கு ஆளுநர் அவர்களே தலைமை தாங்கினார். ஸ்வாமி ஸ்மரணானந்தா பரமஹம்ஸ யோகானந்தரைப் பற்றியும் அவேக்-இன் தயாரிப்பு பற்றியும் ஒரு சுருக்கமான அறிமுகத்தை வழங்கினார் .

ஜூன் 21 அன்று வாஷிங்டன், டி,சி.,யில் உள்ள இந்தியத் தூதரகத்தில் சிறப்புத் திரையிடலில் ஸ்வாமி விஸ்வானந்தா அவேக்-கை அறிமுகப்படுத்துகிறார்.
இந்திய தூதரகங்கள் திரையிடல்களுக்கு ஆதரவு அளிக்கின்றன
ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்-உடன் இணைந்து, இந்திய தூதரகங்கள் — வாஷிங்டன், டி.சி., ரோம், லிமா மற்றும் திபிலிசி, ஜார்ஜியா-வில் 2016-ஆம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தை தாங்கள் கடைப்பிடிப்பதன் ஒரு பகுதியாக Awake: The Life of Yogananda வின் சிறப்புத் திரையிடல்களுக்கு ஆதரவு அளித்தன.
வாஷிங்டன், டி,சி.,யில் ஜூன் 21 அன்று நடந்த திரையிடலில் புகழ்பெற்ற அழைப்பாளர்கள் கொண்ட ஒரு சிறப்பு அவையினர் கலந்து கொண்டனர். ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்-பின் மூத்த சன்னியாசி ஸ்வாமி விஸ்வானந்தா, திரைப்படத்தை அறிமுகப்படுத்தினார். “இந்தத் தருணம் மிகவும் மகத்தான ஓர் அருளாசி,” என்று அவர் கூறினார். “பரமஹம்ஸ யோகானந்தர் மேற்கு மற்றும் உலகிற்கு யோகத்தின் மிகச் சிறந்த தூதுவர்களில் ஒருவராக, இங்கு அவரது தாய்நாட்டின் தூதரகத்தில் கௌரவிக்கப்படுகையில், இங்கு இருப்பது ஒரு பெரிய பாக்கியம் மற்றும் கௌரவம்.”
அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர், மாண்புமிகு திரு.அருண் கே.சிங், அவேக் தோன்றும் நானோபயோஃபிசிக்ஸ் துறையில் சர்வதேச அளவில் மதிக்கப்படும் ஹார்வர்ட் பேராசிரியையான அனிதா கோயல், எம்.டி., பி.எச்.டி., ஆகியோர் கலந்துகொண்டனர். படத்திற்குப் பிறகு அவரும் ஸ்வாமி விஸ்வானந்தாவும் ஒரு கேள்வி-பதில் அமர்வை நடத்தினர்

சுவாமி விஸ்வானந்தா அவர்களுடன் அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் திரு. அருண் கே. சிங் (வலது), மற்றும் டாக்டர் அனிதா கோயல் (இடது).
உலகம் முழுவதும் யோகத்தைப் பரப்புவதில் பரமஹம்ஸரின் பங்களிப்பை தூதர் சிங் அங்கீகரித்தார். “நமது பரபரப்பான வாழ்க்கை முறையை சமநிலைப்படுத்த யோகம் ஓர் இன்றியமையாத மற்றும் நேர்மறையான மூலப்பொருளாக நிரூபிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் தனது அறிமுகக் குறிப்புரையின் போது கூறினார். “அது உடலை மட்டுமல்ல, மனதையும் நீட்டிக்கிறது. இது நம் அனைவரையும் இணைந்திருப்பதாகவும், ஒருவருக்கொருவர் இணக்கத்துடன் இருப்பதாகவும் உணர வைக்கிறது. இது நமது எதிர்காலத்தை வரையறுத்து, வடிவமைக்கும் என்று நான் நம்புகிறேன்.”
தூதர் சிங்கின் குறிப்புரையைத் தொடர்ந்து, விருந்தினர்களுக்கு இந்தியப் பிரதமர், மாண்புமிகு ஸ்ரீ நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி.சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோருடைய இரு சிறிய காணொலிக் காட்சி செய்திகள் காட்டப்பட்டன. இதில் அவர்கள், இன்றைய உலகில் யோகத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். சர்வதேச யோகா தினத்தின் பின்னணியில் உந்து சக்தியாக இருக்கும் ஸ்ரீ மோடி, “யோகா, ஆன்மாவைப் பற்றிய புதிய அறிவை அணுக நமக்கு உதவுகிறது,” என்று உறுதிப்படுத்தினார்.
வாஷிங்டன், டி.சி.யில் உள்ள இந்தியத் தூதரகம் இந்த நிகழ்ச்சியின் புகைப்படத் தொகுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேதகு திரு. அனில் வாத்வா, இத்தாலிக்கான இந்தியத் தூதுவர், ஜூன் 20 அன்று நடைபெற்ற திரையிடலில் அவேக்-கை அறிமுகப்படுத்துகிறார். இந்த நிகழ்ச்சிக்கு ரோமில் உள்ள இந்தியத் தூதரகம், எஸ் ஆர் எஃப்-இன் ரோம் மையத்துடன் இணைந்து ஆதரவு அளித்தது. தூதர் வாத்வா, மேற்கத்திய நாடுகளில் யோக போதனைகளைப் பரப்புவதில் பரமஹம்ஸ யோகானந்தருடைய செய்தியின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார், மேலும் இந்த மகத்தான குருவின் பணியைத் தொடர்ந்து ஆற்றி வருவதற்கு எஸ் ஆர் எஃப்-க்கு நன்றி தெரிவித்தார்.
பெரு மற்றும் பொலிவியா-விற்கான இந்தியத் தூதரான மேதகு திரு. சந்தீப் சக்ரவர்த்தி, ஜூன் 17 அன்று, பெரு-வில் உள்ள லிமா-வில் இந்தியத் தூதரகத்தில் அவேக் படத்தின் சிறப்புத் திரையிடலில் கலந்து கொண்டவர்களிடம் உரையாற்றுகிறார். எஸ் ஆர் எஃப்-இன் லிமா தியானக் குழு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய உதவியது. இக் குழுவின் செயலாளர் திருமதி அமெலியா ரோமன் இடதுபுறத்தில் காணப்படுகிறார்.
ஜூன் 21 அன்று செயின்ட் அகஸ்டின், டிரினிடாட்-ல் உள்ள வெஸ்ட் இன்டீஸ் பல்கலைக்கழகத்தில் அவேக் திரையிடப்பட்டது. சான் ஃபெர்னான்டோ, டிரினிடாட் மற்றும் டொபாகோ-வில் உள்ள எஸ் ஆர் எஃப்-இன் தியானக் குழு உறுப்பினர்கள், டிரினிடாட் மற்றும் டொபாகோ-வில் இந்திய உயர் ஆணையத்துடன் இணைந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய உதவினர். இங்கே உயர் ஆணையர், மேதகு திரு. சங்கர் குப்தா, யோகா என்ற தலைப்பில் பார்வையாளர்களிடம் உரையாற்றுவதைக் காணலாம்.
ஜூன் 26 அன்று ஜார்ஜியா-வின் திபிலிசி-யில் நடைபெற்ற அவேக் திரைப்படத்தின் திரையிடலில் கலந்து கொண்ட சில முக்கிய ஜார்ஜியர்கள் மற்றும் இந்தியர்களுடன் ஆர்மீனியா-விற்கான இந்தியத் தூதர் மேதகு யோகேஷ்வர் சங்வான் (வலமிருந்து ஐந்தாவது). ஆர்மீனியா-வின் யெரெவன்-ல் உள்ள இந்தியத் தூதரகத்தால், 2016 சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுவதன் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஆதரவு அளிக்கப்பட்டது.