யோகம் என்றால் என்ன, மெய்யாகவே?

A women with swan

நம்மில் பெரும்பாலோர் ஆசைகளின் நிறைவேற்றத்திற்கு நமக்கு வெளியே தேடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். புறச் சாதனைகளால் நாம் விரும்புவதை நமக்கு அளிக்க முடியும் என்று நம்பவைக்க நம்மைக் கட்டுப்படுத்தும் ஓர் உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இருப்பினும் வெளியில் இருக்கும் எதனாலும் “இன்னும் ஏதேனும் வேண்டும்” என்ற அகத்தேயுள்ள ஆழ்ந்த ஏக்கத்தை முழுவதுமாக நிறைவேற்ற முடியாது என்று நமது அனுபவங்கள் மீண்டும் மீண்டும் நமக்குக் காட்டுகின்றன.

ஆயினும், பெரும்பாலான நேரங்களில். எப்போதும் நம்மால் அடைய முடிகின்ற எல்லைக்குச் சற்றே அப்பால் இருப்பதாகத் தோன்றுவதை அடைவதை நோக்கி நாம் கடுமுயற்சி செய்வதைக் காண்கிறோம். நாம் இருப்பில் இருப்பதற்குப் பதிலாக செய்வதில், விழிப்புணர்வில் இருப்பதற்குப் பதிலாக செயலில் சிக்கிக் கொண்டிருக்கிறோம். சிந்தனைகளும் உணர்வுகளும் நிரந்தர இயக்கத்தில் நடனமாடுவதை நிறுத்தும் முழுமையான அமைதி, உலைவின்மை ஆகியவை கொண்ட ஒரு நிலையைக் காட்சிப்படுத்திப் பார்ப்பது நமக்கு கடினமாகும். இருப்பினும் அத்தகைய நிறையமைதி நிலையின் வாயிலாகவே நம்மால் வேறு வகையாகச் சாதிக்கச் சாத்தியமற்ற ஓர் ஆனந்தத்தின் மற்றும் புரிதலின் தளத்தைத் தொட முடியும்.

பைபிளில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது: “அமைதி கொண்டு, நானே கடவுள் என்று உணர்ந்து கொள்ளுங்கள்.” இந்தச் சொற்ப வார்த்தைகளில் யோக அறிவியலின் சூட்சுமம் இருக்கிறது. இந்தப் பழங்கால ஆன்மீக அறிவியல் நாம் மெய்யாகவே என்னவாக இருக்கிறோம் என்று நாம் அறிவதைத் தடுக்கும் சிந்தனைகளின் இயல்பான குழப்பங்களையும் உடலின் அமைதியின்மையையும் அமைதிப்படுத்தும் ஒரு நேரடியான வழியை வழங்குகிறது.

சாதாரணமாக நமது விழிப்புணர்வும் சக்திகளும் வெளிநோக்கி, நமது ஐம்புலன்கள் எனும் வரையறைக்குட்பட்ட கருவிகளின் வாயிலாக உணரப்படும் இந்த உலக விஷயங்களை நோக்கி, செலுத்தப்படுகின்றன. மனிதப் பகுத்தறிவு உடல்சார் புலன்களால் தரவு செய்யப்பட்ட பகுதியளவான மற்றும் பல முறை ஏமாற்றமளிப்பதான தகவல்களைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கும் காரணத்தால், நாம் வாழ்வின் புதிர்களை—நான் யார்? நான் ஏன் இங்கு இருக்கிறேன்? எப்படி நான் பேருண்மையை உணர்ந்தறிவது? போன்ற புதிர்களை—விடுவிக்க வேண்டுமென்றால், நாம் அதிக ஆழ்ந்த மற்றும் அதிக நுட்பமான விழிப்புணர்வு நிலைகளிலிருந்து தரவு செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும்.

யோகம் என்பது சக்தி, உணர்வுநிலை ஆகியவை சாதாரணமாக வெளிநோக்கிப் பாய்வதை எதிர்ப்புறம் திருப்பும் ஓர் எளிய செயல்முறை ஆகும்; அதனால் மனம் இனியும் தவறும்-இயல்புள்ள புலன்களைச் சாராது, பேருண்மையை உண்மையாகவே அனுபவிக்கும் திறனுள்ள, நேரடியாக உணரும் ஓர் ஆற்றல்வாய்ந்த மையமாகிறது.

 

Krishna Meditatingஉணர்ச்சிவசப்படும் காரணங்களை வைத்தோ அல்லது குருட்டு நம்பிக்கையின் வாயிலாகவோ எதையும் சரியென்று எடுத்துக்கொள்ளாமல் யோகத்தின் படிப்படியான வழிமுறைகளைப் பயிற்சி செய்வதன் மூலம், எல்லோருக்கும் உயிரை வழங்கும் மற்றும் நமது சொந்தப் பெரும் சுயத்தின் சாரமாக விளங்கும் எல்லையற்ற பேரறிவுத்திறன், பேராற்றல், பேரானந்தம் ஆகியவற்றுடனான நமது ஐக்கியத்தை நாம் அறிய வருகிறோம்.

கடந்த நூற்றாண்டுகளில், பிரபஞ்சத்தை ஆளும் ஆற்றல்களைப் பற்றிய மனிதகுலத்தின் வரையறைக்குட்பட்ட அறிவின் காரணமாக, பல யோக உயர்நிலை உத்திகள் புரிந்து கொள்ளப்படவோ அல்லது பயிற்சி செய்யப்படவோ இல்லை. ஆனால் இன்று அறிவியல் ஆய்வு நாம் நம்மையும் உலகையும் பார்க்கும் விதத்தை விரைவாக மாற்றிக் கொண்டிருக்கிறது. வாழ்வின் பாரம்பரியப் பொருள்சார் கருத்து, பருப்பொருளும் சக்தியும் அடிப்படையில் ஒன்றே என்ற கண்டுபிடிப்பால் மறைந்து விட்டது: இருக்கும் பருப்பொருள் ஒவ்வொன்றும் சக்தியின் ஒரு வடிவமைப்பாகவோ அல்லது வடிவமாகமோ சுருக்கப்பட முடியும், அது மற்ற வடிவங்களுடன் தொடர்பு கொள்ளவும் இணைத்துக் கொள்ளவும் செய்கிறது. இன்றைய மிகவும் போற்றப்படும் இயற்பியலாளர்களில் சிலர் ஒரு படி மேலே சென்று, உணர்வுநிலையை எல்லா உயிர்களுக்கும் ஆன அடிப்படைக் காரணமாக அடையாளம் காண்கின்றனர். இவ்வாறு தற்கால அறிவியல், ஒற்றுமை பிரபஞ்சத்தை ஊடுறுவுகிறது என்று அறிவிக்கும் பழங்கால யோகத் தத்துவங்களை உறுதி செய்து கொண்டிருக்கிறது.

யோகம் என்ற சொல்லே பிரபஞ்ச உணர்வுநிலையுடன் அல்லது பரம்பொருளுடன் ஆன தனிப்பட்ட உணர்வுநிலையின் அல்லது ஆன்மாவின் “ஐக்கியம்” என்று பொருள்படுகிறது. பலர் யோகத்தை உடற்பயிற்சிகளாக—சமீபத்திய தசாப்தங்களில் பரவலான புகழைப் பெற்றிருக்கும் ஆசனங்கள் அல்லது அங்கநிலைகள் ஆக— மட்டுமே எண்ணிய போதிலும், இவை மனித மனத்தின் மற்றும் ஆன்மாவின் எல்லையற்ற திறன்களை மலரச் செய்யும் இந்த ஆழ்ந்த அறிவியலின் மிகவும் மேலோட்டமான அம்சம் மட்டுமே ஆகும்.

 

Japa Mala for Mantra yog

இந்த இலக்கை நோக்கி வழிநடத்திச் செல்லும் பல்வேறு யோகப் பாதைகள் உள்ளன, ஒவ்வொன்றும் ஒரு முழுமையான அமைப்பின் ஒரு தனித்தன்மைவாய்ந்த துறை ஆகும்.

ஹத யோகம்—உடல்சார்ந்த அங்கநிலைகளின் அல்லது ஆசனங்களின் ஒரு அமைப்பு, அதன் உயர்ந்த நோக்கம் ஒருவருக்கு உடலின் அகநிலைகளின் மீது விழிப்புணர்வையும் கட்டுப்பாட்டையும் வழங்கி அதைத் தியானத்திற்கு தகுதிபெறச் செய்தவாறு, அதைத் தூய்மைப்படுத்துவதாகும்.

கர்ம யோகம்—பலன்களின் மீது பற்றில்லாமல் மற்றவர்களை ஒருவரது பெரிய சுயத்தின் பகுதியாக எண்ணி, அவர்களுக்கு சுயநலமற்ற சேவை செய்வது; மற்றும் இறைவனே செய்பவர் என்ற உணர்வுநிலையுடன் எல்லாச் செயல்களையும் செய்வது.

மந்திர யோகம்—மந்திர உச்சாடனத்தின் வாயிலாக அகத்தே உணர்வுநிலையை மையம் கொள்ளச் செய்தல், அல்லது பரம்பொருளின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தைக் குறித்துக் காட்டும் சில பிரபஞ்ச மூல-வார்த்தை ஒலிகளை உச்சாடனம் செய்தல்.

பக்தி யோகம்—எல்லாவற்றையும் சமர்ப்பணம் செய்யும் பக்தி; அதன் வாயிலாக ஒருவர் தெய்வீகத்தை ஒவ்வோர் உயிரினத்திலும், மற்றும் எல்லாவற்றிலும் காணவும் நேசிக்கவும் கடுமுயற்சி செய்கிறார்; இவ்வாறு ஓர் இடைவிடாத வழிபாட்டைத் தக்கவைக்கிறார்.

ஞான யோகம்—விவேக மார்க்கம், அது ஆன்மீக முக்தியை அடைய பகுத்தாயும் அறிவுத்திறனின் பயன்பாட்டை வலியுறுத்துகிறது.

இராஜ யோகம்—பகவத் கீதையில் அமரத்துவமாக்கப்பட்ட மற்றும் கி. மு. இரண்டாம் நூற்றாண்டில் இந்திய முனிவர் பதஞ்சலியால் முறைப்படி ஒழுங்குபடுத்தப்பட்ட, மாண்புடைய அல்லது மிக உயர்ந்த யோகப் பாதை; அது மற்ற எல்லாப் பாதைகளையும் ஒருங்கிணைக்கிறது.

 

Bhagavad Gita Commentary by Paramahansa Yogananda

இந்தப் பல்வேறு அணுகுமுறைகளைச் சமநிலைப்படுத்தி ஐக்கியமாக்கும் இராஜ யோக அமைப்பின் மையத்தில் இருப்பது, திட்டவட்டமான, அறிவியல்பூர்வமான தியான வழிமுறைகளின் பயிற்சி ஆகும்; அது ஒருவருடைய முயற்சிகளின் ஆரம்பத்திலிருந்தே வற்றாத இறுதி இலக்கின்—பேரின்பமயப் பரம்பொருளுடனான உணர்வுப்பூர்வமான ஐக்கியத்தின்—கணநேரத் தரிசனங்களைக் காண ஒருவரை இயலச் செய்கிறது.

யோகத்தின் இலக்கிற்கான மிக விரைவான மற்றும் மிகவும் ஆற்றல்வாய்ந்த அணுகுமுறை சக்தியுடனும் உணர்வுநிலையுடனும் நேரடியாகச் செயல்தொடர்பு கொள்ளும் தியான வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது. இந்த நேரடி அணுகுமுறைதான் பரமஹம்ஸ யோகானந்தரால் போதிக்கப்பட்ட இராஜ யோக தியானத்தின் குறிப்பிட்ட வடிவமான கிரியா யோகத்தின் தனிப்பண்பாக விளங்குகிறது.

இதைப் பகிர