பரமஹம்ஸ யோகானந்தரைப் பற்றி டாக்டர் எம்.டபிள்யூ லூயிஸ்

img1_mw_லூயிஸ்

யோகானந்தர் மற்றும் டாக்டர் எம்.டபிள்யூ லூயிஸின் முதல் சந்திப்பு

டாக்டர் மின்னோட் டபிள்யூ. லூயிஸ், ஒரு பாஸ்டன் நகரப் பல் மருத்துவர், 1920ல் அமெரிக்காவில் குருதேவரின் வருகைக்கு ஒரு குறுகிய காலத்திற்குப் பிறகு பரமஹம்ஸரைச் சந்தித்தார் மற்றும் கிரியா யோகத்தில் புனிதத் தீட்சையை அவரிடமிருந்து பெற்ற முதல் அமெரிக்க சீடர் ஆனார். ஒரு துணைத் தலைவராகவும் ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் -இன் மிகவும் பிரியமான சுவாமியாகவும் சேவை செய்த பல ஆண்டுகளின் போது, அவர் பரமஹம்ஸருடன் ஆன தனது முதல் சந்திப்பின் கதையை அடிக்கடி பகிர்ந்தார். பின்வரும் விவரணம் பல ஆண்டுகளாகக் கொடுக்கப்பட்ட டாக்டரின் சொற்பொழிவுகளிலிருந்து தொகுக்கப்பட்ட விவரங்களைக் கொண்டது:

1920-இன் பிற்பகுதியில் பரமஹம்ஸ யோகானந்தர் அமெரிக்கா வந்தடைந்த குறுகிய காலத்திலேயே, இளம் சுவாமி பாஸ்டன் பகுதியில் உள்ள ஒரு யூனிடேரியன் தேவாலயத்தில் சொற்பொழிவாற்ற அழைக்கப்பட்டார்; அங்கே டாக்டர் லூயிஸின் நீண்டநாள் நண்பர் திருமதி அலிஸ் ஹஸி கூட்டத்தில் ஒரு உறுப்பினராக இருந்தார். டாக்டர் லூயிஸுக்கு ஆன்மீகத்தில் இருந்த ஆர்வத்தைப் பற்றி திருமதி ஹஸிக்கு (அவருக்கு பின்னாளில் பரமஹம்ஸ யோகானந்தர் சகோதரி யோகமாதா என்ற பெயரை அளித்தார்) தெரியும், மற்றும் அவருக்கு ஆலோசனை வழங்கினார், “நீங்கள் சுவாமி யோகானந்தரைச் சந்திக்க வேண்டும்.”

கிறிஸ்துமஸ் ஈவ் விழா அன்று யூனிடி இல்லத்தில் சந்திக்க ஒரு முன்-அனுமதி பெறப்பட்டது; அங்கே குருநாதருக்கு ஓர் அறை இருந்தது. இதற்காக டாக்டர் வீட்டைவிட்டுக் கிளம்பிய போது ஒரு குறுகிய நேரத்திற்காகவே தான் வெளியே செல்வதாக நினைத்தார். தான் விரைவாகத் திரும்பி வந்து கிறிஸ்துமஸ் மரத்தை அழகுபடுத்துவதாக தன் மனைவி மில்ட்ரெட்டிடம் கூறினார். யூனிடி இல்லத்திற்குப் போகும் வழியில் மத போதகர்களாக வேடமிடும் புரளிவித்தைக்காரர்களால் ஏமாற்றப்படுவதற்கு அல்லது தவறாக வழிநடத்தப்படுவதற்கு எதிரான பெற்றோரின் எச்சரிக்கையை நினைவு கூர்ந்தார்; அவருடைய மனநிலை ஐயம் நிறைந்ததாக இருந்தது. பரமஹம்ஸர் டாக்டர் லூயிஸை அன்போடு வரவேற்றார். இளம் பல்மருத்துவரின் மனத்தில் பல ஆன்மீகக் கேள்விகள் இருந்தன, மற்றும் பரமஹம்ஸர் அவருக்கு மனநிறைவான பதில்களை அளித்தார். பல ஆண்டுகளுக்குப் பின்னர் டாக்டர் இந்த நிகழ்வைப் பற்றிக் கூறினார், “நான் ‘மிசோரிக்காரன்’ மற்றும் எனக்குக் காட்ட வேண்டியிருந்தது. அதைவிட மோசமானது, நான் நியூ இங்கிலாந்துக்காரன், மற்றும் எனக்குத் தெரிந்திருக்க வேண்டுமே!” 1920ல் அந்த கிறிஸ்துமஸ் ஈவ் சந்திப்பில் அவர் பரமஹம்ஸரிடம் கூறினார்: “பைபிள் எங்களுக்குக் கூறுகிறது: ‘கண்தான் உடலுக்கு விளக்கு; கண் ஒன்றாக (நலமாக) இருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும்.’ இதை எனக்கு விளக்க முடியுமா?” “அப்படித்தான் நான் நினைக்கிறேன்,” குருதேவர் பதிலளித்தார். டாக்டர் இன்னும் ஐயத்துடனேயே இருந்தார். “நான் பல நபர்களைக் கேட்டிருக்கிறேன்,” அவர் சொன்னார், “ஆனால் ஒருவருக்குமே தெரிந்திருப்பதாகத் தோன்றவில்லை.” “குருடனால் குருடனை வழிநடத்திச் செல்ல முடியுமா?” பரமஹம்ஸர் மறுமொழியளித்தார். “இருவரும் தவறு எனும் அதே குழியில் போய் விழுவார்கள்.” “இந்த விஷயங்களை எனக்குக் காட்ட முடியுமா?” “அப்படித்தான் நான் நினைக்கிறேன்,” குருதேவர் மீண்டும் வலியுறுத்திக் கூறினார். “அப்படியானால், இறைவனின் பொருட்டு, எனக்குக் காட்ட வேண்டுகிறேன்!” குருதேவர் டாக்டரை தரையில் புலித்தோலின் மீது சப்பணமிட்டு அமரும்படிக் கேட்டுக்கொண்டார், மற்றும் அவருக்கு எதிரில் அமர்ந்தார். டாக்டரின் கண்களை நேரடியாகப் பார்த்தவாறு, பரமஹம்ஸர் கேட்டார்: “நான் உன்னை நேசிப்பதைப் போல நீ எப்போதும் என்னை நேசிப்பாயா?” டாக்டர் சம்மதம் என்று பதிலளித்தார். பின் குருதேவர் கூறினார், “உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன மற்றும் நான் உன் வாழ்வின் பொறுப்பை ஏற்கிறேன்.” “இந்த வார்த்தைகளுடன்,” டாக்டர் பின்னால் விவரித்தார், “ஒரு மிகப்பெரிய சுமை என் தோள்களிலிருந்து தூக்கப்படுவதை நான் உணர்ந்தேன். அது ஓர் உண்மை. நான் ஒரு பெரிய ஆறுதலை உணர்ந்தேன்—கர்மவினை மற்றும் மாயை எனும் மலைகளிலிருந்து நான் விடுபட்டிருந்ததைப் போல. ஒரு பெரிய சுமை தூக்கப்பட்டது, மற்றும் அச்சுமை அன்றிலிருந்து என்றென்றைக்குமாக தூக்கப்பட்டது. பல சோதனைகள் நடந்திருந்தன—அவை ஏராளமானவை—ஆனால் அச்சுமை ஒருபோதும் திரும்பி வரவேயில்லை.” கதையைத் தொடர்ந்தவாறு, டாக்டர் லூயிஸ் கூறினார்: “குருதேவர் பின்னர் தன் நெற்றியை என் நெற்றியின் மீது படும்படியாக வைத்தார். அவர் என்னை மேலே கண்களை உயர்த்தி புருவமத்தியில் பார்க்கும்படி கூறினார், நான் அவ்வாறே செய்தேன். மேலும் அங்கே நான் ஆன்மீகக் கண்ணின் அபாரமான ஒளியைத் தரிசித்தேன். குருதேவர் எதையும் பார்க்கும்படி என்னிடம் குறிப்பாகக் கூறவில்லை. அவர் ஆலோசனையின் வாயிலாக என்னிடம் எந்தவிதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. நான் பார்த்தது ஓர் இயல்பான வழியில் வந்தது. “நான் முற்றிலும் உணர்வுப்பூர்வமாக, முற்றிலும் கவனத்துடன் இருந்தேன், மற்றும் நான் ஆன்மீகக்கண்ணைப் பார்த்தேன் ஏனெனில் குருதேவர் என் மன அலைகளை அசைவற்று இருக்கச் செய்து என் சொந்த ஆன்ம உள்ளுணர்வு இதை எனக்குக் காட்ட வழிவகுத்தார். நான் மிகப்பெரிய பொன்னொளியில் மேலும் பார்த்த போது, முழுமையான ஆன்மீகக்கண், என்னகத்தேயுள்ள கிறிஸ்து உணர்வுநிலையை குறித்துக்காட்டும் அல்லது வெளிப்படுத்தும் அதன் உள்பக்க கருநீல மையத்துடனும் இறுதியாக மையத்தில், பேரண்டப் பேருணர்வுநிலையின் சிற்றுருவமாக விளங்கும் சிறு மின்னும் (வெள்ளி) நட்சத்திரத்துடனும், உருவானது. [சொற்களஞ்சியத்தில் பாருங்கள்: “ஆன்மீகக்கண்.”] “நிச்சயமாக, நம் ஒவ்வொருவருள்ளும் இருக்கும் அக மெய்ம்மையை எனக்குக் காட்டக் கூடிய ஒருவரைக் கண்டு கொண்டதால் நான் உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கிவிட்டேன். அவர் ஒரு சாதாரண மனிதர் அல்ல, ஆனால் அத்தகைய ஆன்மீக விஷயங்களைப் பற்றி அறிந்திருப்பதாக உரிமை கொண்டாடும் மிகச் சாதாரணமானவர்களிலிருந்து மிகவும் வேறுபட்ட ஒருவர் என்று நான் தெளிவாக உணர்ந்தேன். “நாங்கள் சில நிமிட நேரம் பேசினோம் மற்றும் அப்போது அவர் மீண்டும் ஒரு முறை தன் நெற்றியை என் நெற்றியில் படும்படி வைத்து அழுத்தினார்; மற்றும் அப்போது நான் ஆயிரம்-கதிர்கள் (இதழ்கள்) கொண்ட தாமரையின் [மூளையின் மேற்பகுதியில் உள்ள மிக உயர்ந்த ஆன்மீக மையம்] மாபெரும் ஒளியைப் பார்த்தேன்—அதன் பலப்பல வெள்ளி இலைக் கதிர்களுடன், காண முடிகின்ற பொருட்களில் உச்சபட்ச நேர்த்தியான பொருள். ஆயிரம்-கதிர்கள் கொண்ட தாமரையின் அடிப்பகுதியில், அடர்த்தியான ஒளியில் எல்லை வரைகோடுகள் தீட்டப்பட்ட மூளையின் அடிப்பாகத்தில் உள்ள பெரிய தமனிகளின் சுவர்களை என்னால் காண முடிந்தது. மேலும் இதோ, இதோ, நான் பார்த்த போது, தமனிகளுக்கு உள்ளே சிறு ஒளித் துகள்கள், என் கண் முன்னே அவை கடந்து செல்லும் போது, சுவர்களைத் தாக்கியவாறு குதித்து ஓடிக் கொண்டிருந்தன. இவையே இரத்த நுண் அணுவுடலிகள் ஆகும்; அவை ஒவ்வொன்றும் இறைவனின் ஒளி நாடகத்தில் தம் கடமையை ஆற்றிய போது தமது சூட்சும ஒளியின் சிறு பொறிகளை வெளிப்படுத்தின. “இந்த அற்புதமான விஷயங்களைப் பார்த்தபின், அத்தகைய முக்தியடைந்த மனிதரைச் சந்தித்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருந்தேன். மேலும் குருதேவர் கூறியதை நான் நினைவு கூறுகிறேன். ‘உன்னை ஒழுங்குபடுத்த என்னை அனுமதித்து, நான் வகுக்கும் வழியை தவறாமல் பின்பற்றினால், இவை எப்போதும் உன்னுடன் இருக்கும்.’ நான் அதை செய்ய ஆர்வத்துடன் பெரு முயற்சி செய்தேன், மற்றும் குருதேவரின் வார்த்தைகள் சத்தியம் என்று என்னால் சாட்சியமளிக்க முடியும்.” பரமஹம்ஸர் கூறினார்: “நீங்கள் என்னை ஒருபோதும் தவிர்க்க மாட்டீர்கள் என்று நீங்கள் உறுதியளிக்க வேண்டும்.” டாக்டர் உறுதியளித்தார். குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையிலான இந்த உடன்படிக்கை பற்றி டாக்டர் பின்னாளில் சொன்னார், “பல சமயங்களில் இது மிகவும் கடினமாக இருந்தது, ஏனென்றால் ஒரு குருவின் ஒழுங்குமுறை எளிதானது அல்ல; ஆனால் அது எப்போதும் உங்களுடைய உயர்ந்த நன்மைக்கானது, பேரொளியின் உறைவிடத்திற்கு உங்களை வழிகாட்டவல்லது. ” ஆன்மீகக் கண்ணின் ஒளியை எப்படிப் பார்ப்பது என்று டாக்டர் லூயிஸுக்குக் காட்டிய பிறகு, மற்றும் அவருக்கு மற்ற ஆன்மீக அறிவுரைகளை வழங்கிய பிறகு, மற்ற அமெரிக்கர்கள் இந்த போதனைகளில் ஆர்வமாக இருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா என்று பரமஹம்ஸர் அவரிடம் கேட்டார். “ஆம், நான் நினைக்கிறேன்,” டாக்டர் பதிலளித்தார். “அப்படியானால்,” குருதேவர் கூறினார், “நான் உங்களுக்குக் கற்பித்ததை நீங்கள் பயிற்சி செய்த பிறகு, தியானத்தின் இந்த உத்திகள் உங்களைக் கவர்ந்தால், மற்றும் உங்களுக்குப் பயனளிக்கும் என்றால், அவற்றைப் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள உதவுவீர்களா?” ” நிச்சயமாக நான் செய்வேன்,” டாக்டர் கூறினார். பரமஹம்ஸருடனான சந்திப்பு முடிந்து டாக்டர் வீடு திரும்பியபோது 1920ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று காலை இரண்டு மணி. நீண்ட நேரமாக கணவர் திரும்பி வராததை எண்ணி திருமதி லூயிஸ் பீதியடைந்தார்; ஆனால், அவருடைய முகத்தைப் பார்த்ததும் பரமஹம்ஸருடனான தன் கணவரின் சந்திப்பு ஒரு நிலைமாற்றும் அனுபவமாக இருந்திருந்தது என்று உணர்ந்தார். அடிக்கடி பின்னர், இந்த தெய்வீக விழிப்புணர்வைப் பற்றி கூறும்போது, டாக்டர் சொல்வார், “இது எனது முதல் உண்மையான கிறிஸ்துமஸ்!” தனது குருவுடனான அந்த ஆரம்ப சந்திப்பு அவர் மீது ஏற்படுத்திய அபிப்ராயத்தை விவரித்து பின்வருமாறு எழுதினார்: “நாங்கள் புலித் தோல் கம்பளத்தின் மீது ஒன்றாக அமர்ந்து இறைவனின் இருப்பை அனுபவித்துக் கொண்டிருந்த சமயத்தில், நான் அவரது முகத்தைப் பார்த்தபோது, உயர்ந்த திறனைப் பற்றிய எந்த உணர்வு நிலையையும் நான் காணவில்லை. அவர் அதை நன்றாக வெளிப்படுத்தியிருக்கலாம்; ஏனெனில் அத்தகைய பெரிய அமைதி மற்றும் அனுபூதியின் மூலம், மற்றொருவர் தெய்வீக உணர்வுநிலையை உணருவதற்கு ஒருவர் உதவமுடியும் என்பது அற்பசாதனை அல்ல. ஆனால் அதற்கு பதிலாக அவரிடம் பணிவு, அன்பு ஆகியவற்றின் மற்றும் இறைவனின் குழந்தைகளில் மற்றொன்று, தன்னைப் போலவே நம் எல்லோருக்கும் பொதுவான தெய்வத் தந்தையான இறைவனின் இருப்பையும் பேரின்பத்தையும் அனுபவிக்க முடிந்தது என்று உச்சபட்ச மனநிறைவின் ஒரு வெளிப்பாடு இருந்தது. இத்தகைய பணிவு எனக்கு ஓர் ஆழமான உத்வேகமாக இருந்துள்ளது மற்றும் எப்போதும் இருக்கும். என் மனதிற்கு, இது ஒரு உண்மையான மகத்துவத்தின் பண்பு.” பல வருடங்களுக்குப் பிறகு, என்சினிடாஸில் உள்ள ஸெல்ஃப்-ரியலைசேஷன் மையத்தின் அர்ப்பணிப்பின் போது இந்த சம்பவத்தைப் பற்றிச் சொல்லி, டாக்டர் கூறினார்: “அதனால்தான் நண்பர்களே, நான் ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்பில் ஆர்வமாக இருந்து வருகிறேன், அதனால்தான் நான் உதவ முயற்சி செய்து வருகிறேன்; ஏனென்றால் பரமஹம்ஸ யோகானந்தரிடம் இருந்து ஏதோ ஒரு நன்மை, ஏதோ ஒரு பெரிய நன்மை வரும் என்று எனக்கு தெரியும். அமெரிக்கா எனக்கு நிறைய கொடுத்துள்ளது, மற்றும் அதற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்; ஆனால் அமெரிக்கா எனக்குக் கொடுக்காத ஒரு விஷயம் இருக்கிறது, அதுதான் நான் இந்தியாவில் இருந்து பெற்ற ஆன்ம அனுபூதி மற்றும் புரிதல்; அவை பரமஹம்ஸ யோகானந்தரிடமிருந்து என்னிடம் வந்தன.

இதைப் பகிர

Collections

More

Author

More

Language

More