பரமஹம்ஸ யோகானந்தர்

எழுதியவர்: ஸ்ரீ ஸ்ரீ தயா மாதா

 ஃபைன்டிங் தி ஜாய் விதின் யு: பெர்சனல் கவுன்ஸல் ஃபார் காட்-சென்டர்ட் லிவிங் (உங்கள் அகத்தே பேரானந்தத்தை காணல்: இறை-மைய வாழ்விற்கான தனிப்பட்ட அறிவுரை) எனும் அவரது நூலில் இருந்து

வருடங்கள் உருண்டோடும் போது, மனம் புதிய அனுபவங்களைச் சேகரிக்கிறது, அதேசமயம் காலம் பொதுவாக, நீண்ட காலத்திற்கு முந்தைய நினைவுகளை மந்தமாக்குகிறது. ஆனால் ஆன்மாவைத் தொடும் நிகழ்வுகள் ஒருபோதும் மங்குவதில்லை; அவை நமது இருப்பின் ஓர் என்றும்-உயிர்த் துடிப்புள்ள, எழுச்சி வாய்ந்த அங்கமாக மாறுகின்றன. எனது குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தருடன் என் சந்திப்பு அத்தகைய ஒன்று.

நான் 17 வயது நிரம்பிய இளம் பெண்ணாக இருந்தேன், மற்றும் வாழ்க்கையானது எங்கும் இட்டுச் செல்லாத ஒரு நீளமான வெற்றுப் பாதையாக எனக்கு தோன்றியது. நான் இறைவனை நாடுவதற்கும் மற்றும் அவனுக்கு சேவை செய்வதற்கும் என்னை ஏதுவாக்கும் ஓர் செயல் நோக்கமிக்க வாழ்க்கைக்கு என் காலடிகளை அவன் வழிநடத்தக் கோரும் ஓர் இடைவிடாத பிரார்த்தனை என் உணர்வு நிலையினுள், சுழன்று கொண்டிருந்தது.

அந்த ஏக்கத்திற்கான விடை, 1931ல் சால்ட் லேக் நகரிலுள்ள பிரம்மாண்டமான கூட்டம் நிறைந்த அரங்கில் நான் நுழைந்து, மேடையில் நான் இதற்கு முன்னால் ஒருபோதும் கண்டிராத அளவில் இறைவனைப்பற்றி அத்துணை அதிகார உரிமையுடன் பரமஹம்ஸர் பேசிக் கொண்டிருந்ததைக் கண்ட போது, ஓர் உடனடி அனுபூதியாக வந்தது. நான் முற்றிலுமாக அசைவற்றுப் போனேன் — என் சுவாசம், எண்ணங்கள், காலம் யாவும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக தோன்றின. இறை அருள் ஆசிகள் என் மேல் பொழிந்து கொண்டிருந்ததைப் பற்றிய ஓர் அன்பான நன்றி மிக்க புரிதல், அதனுடன் என்னுள் எழுந்து கொண்டிருந்த ஓர் ஆழ்ந்த திட நம்பிக்கைப் பற்றிய ஓர் விழிப்புணர்வைக் கொணர்ந்தது: “இந்த மனிதர், நான் இறைவனை எப்போதும் நேசிக்க ஏங்கியது போல், அவனை நேசிக்கிறார். இவர் இறைவனை  அறிந்தவர். இவரை நான் பின்பற்றுவேன்.”

மாண்பு, நேர்மை ஆகிய லட்சியங்களை உறுதியாகக் கடைப்பிடித்தல்

ஓர் ஆன்மீக ஆசான் எவ்வாறு இருக்க வேண்டுமென்ற முன்கூட்டி கற்பனை செய்யப்பட்ட லட்சிய கருத்துருவை நான் வைத்திருந்தேன். நீங்கள் கூறலாம் என் மனக்கண்ணில் நான் அத்தகைய மனிதரை அரியணையில் அமர்த்துமளவு ஓர் உயர் பீடத்தை வடிவமைத்திருப்பேன் என்று. பய பக்தியுடன் என் குருதேவரை மானசீகமாக அங்கு இருத்தினேன்; அவருடைய முன்னிலையில் இருக்கும் பாக்கியம் பெற்ற அத்துணை வருடங்களில் ஒருமுறை கூட அவர் குணத்திலோ அல்லது செயலிலோ அந்த மாபெரும் உயரத்திலிருந்து ஒரு முறை கூட இறங்கி வந்ததில்லை.

நம் காலத்தில் நேர்மை, மாண்பு மற்றும் லட்சியத்தைப் பின்பற்றுதல் போன்றவைகள் சுயநலம் எனும் பேரலையின் அடியில் மறைந்து விட்டன போல் தோன்றினாலும் குருதேவர், சமரசம் செய்து கொள்ளாமல் சாசுவத ஆன்மீகப் பண்புகளின்படி வாழ்ந்து அவற்றை என்றும் சீடர்கள் கண் முன் வைத்திருந்தார். 1931ல் நிதி ஆதாரங்கள் அவசரமாகத் தேவைப்பட்ட காலத்தை பற்றி நினைவு கூறகிறேன். இந்தக் காலகட்டத்தில், குருவும் சீடர்களும் சூப்பையும் ரொட்டியையும் மட்டுமே உண்டு வாழ்ந்திருந்தனர், அல்லது முழு பட்டினியாகவும் இருந்தனர். அன்னை இல்லம், (மதர் சென்டர்) வாஷிங்டன் சொத்திற்கு அடமான கடன் தொகை பாக்கி இருந்தது. பரமஹம்ஸர் அடமான உரிமையாளரின் இல்லத்திற்குச் சென்று கடன் தொகையைக் கட்டுவதற்கு சிறிது கால நீடிப்பு கேட்டார். புரிந்துகொள்ளும் தன்மை கொண்ட அந்தப் பெண்மணி இரக்கத்துடன் காலக்கெடுவை நீடித்தார். அப்படியிருந்தும், உரிய நேரத்தில் தேவையான நிதியை சேகரிப்பது சாத்தியமற்றதாக தோன்றியது.

பிறகு ஒரு நாள் ஒரு வியாபார முன்னெடுப்பு ஆலோசகர் குருதேவரின் வகுப்புகளுக்கு வந்து, அவரது போதனைகளில் ஆர்வம் உடையவரானார். இந்த மனிதர் இந்த போதனைகளில் அவற்றின் ஆன்மீகப் பயனை மட்டுமின்றி இலாபம் ஈட்டும் சாத்தியத்தையும் கண்டார். “உங்கள் நிறுவனத்தை விளம்பரப்படுத்தும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள என்னை அனுமதியுங்கள், ஒரு வருடத்திற்குள் உங்களை உலகறியச் செய்கிறேன். உங்களுக்கு பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இருப்பார்கள், நீங்கள் டாலர்களில் புரளலாம்” என்று பரமஹம்ஸருக்கு அவர் வாக்களித்தார்.

புனித போதனைகளை வணிக மயமாக்கும் திட்டத்தை அவர் சுருக்கமாக விளக்கினார். குருதேவர் அமைதியாக கேட்டுக் கொண்டார், நிச்சயமாக அவ்வாறு செய்வது அவரது நிதிசார்ந்த கவலைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு, அவர் இன்னும் எதிர்கொள்ள வேண்டிய சில நெருக்கடிகளையும் அது தடுத்துவிடும் என்று பொருள் பட்டது. ஆனால் குருதேவர் ஒரு கணம் கூட தாமதியாமல் அந்த மனிதருக்கு நன்றி கூறி அவருக்கு பதில் அளித்தார், “ஒருபோதும் இல்லை! நான் என்றும் மதத்தை வியாபாரமாக்க மாட்டேன். சில அற்ப டாலர்களுக்காக, என் தேவை எதுவாக இருந்தாலும், இந்த பணியை அல்லது என் லட்சியங்களை ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டேன்.”

இரண்டு மாதங்களுக்குப் பிறகு கான்சாஸ் நகரில் சொற்பொழிவு ஆற்றும் போது, பல பிறவிகளின் சீடரான மேன்மைமிக்க ராஜரிஷி ஜனகானந்தரை சந்தித்தார். ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் -ல் ஒரு முக்கிய பங்கை ஆற்றுவதற்கு விதிக்கப்பட்டவர் இவர். இந்த மகாத்மா, குருதேவரை தன் சொந்த தெய்வீக ஆசானாகவும் மற்றும் குருதேவரின் போதனைகளை தன் தினசரி வாழ்க்கையின் வாழும் வழியாகவும் ஏற்றுக்கொண்டவாறு, அடமானத் தொகை முழுவதையும் அடைக்கும் நிதிகளை தந்தார். மவுண்ட் வாஷிங்டனில் கீழே டெம்பிள் ஆஃப் லீவ்ஸ் அருகே, ஒரு சொக்கப்பனைக் கொளுத்தி, அதில் அடமானக் காகிதங்கள் தீச்சுடர்களில் எரிய விடப்பட்ட போது மகிழ்ச்சி ஆரவாரம் பெரியதாக இருந்தது. பெரிதும் நடைமுறைச் சிந்தனை உடையவராய் இருந்ததால், குருதேவர் தணலில் உருளைக்கிழங்குகளை வறுப்பதற்கு அச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டார். பக்தர்கள் குருதேவருடன் அப்பெரும் நெருப்பை சுற்றித் திரண்டனர். மேலும் அவ்வறுபட்ட உருளைக்கிழங்குகளை சுவைத்தனர். அதேசமயம் அடமான கடிதங்கள் தொடர்ந்து நெருப்பில் அனைத்தும் முடியும் வரை கருகி கொண்டிருந்தன!

தெய்வீக அன்னை பிரசன்னத்தின் உத்திரவாதம்

இன்னும் சில சம்பவங்களும் குருதேவரது தெய்வீக வலிமையின் பிற அம்சங்களும் என் நினைவில் நீங்கா இடம் பெற்றுள்ளன. அனேக சீடர்களுக்கு உணவளித்து, உறைவிடம் அளித்து மற்றும் ஆதரவு அளித்து வளர்ந்துவரும் நிறுவனத்தின் சுமையை உணர்ந்தும், இடைவிடாத இறைத் தொடர்பு எனும் தன் உயர் ஏக்கத்திற்கு எதிரான கவனச்சிதறல்களில் இருந்து விடுதலை பெற வேண்டுமென்ற விருப்பத்துடனும் அரிஜோனாவிலுள்ள பாலைவனத்தில் புகலிடம் நாடினார். அங்கு அவர் தனிமையில் அமர்ந்து தனது அன்புக்குரிய தெய்வத் திருவன்னையிடம் நிறுவனப் பொறுப்புகளின் சுமைகள் மற்றும் கவனமாற்றக் கடமைகளில் இருந்து விடுதலை கோரி தியானித்துக் கொண்டும் பிரார்த்தனை செய்து கொண்டும் இருந்தார். ஒரு நாள் இரவு அவர் தியானம் செய்து கொண்டிருந்த பொழுது – “அவளது மறுமொழிக்கான என் ஏக்கத்தினால் இதயமே வெடித்து விடும் போலிருந்தது”, அவர் கூறினார் — அவள் தரிசனம் தந்து பின்வரும் இதமளிக்கும் வார்த்தைகளைப் பேசினாள்:

வாழ்வின் நடனமோ அல்லது சாவின் நடனமோ,
என்னிடமிருந்தே வருகின்றன என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைவாய்.
நீ என்னையே பெற்றிருப்பதை விட வேறென்ன அதிகமாக வேண்டும்?

வாழ்வின் நடுவிலோ அல்லது சாவின் நடுவிலோ தன்னுடன் என்றும் தான் போற்றும் தெய்வ அன்னை இருக்கிறாள் என்ற இந்த உத்தரவாதத்தினால் ஆனந்தத்தில் திக்குமுக்காடி, அவர் தன் இதயத்தில் அமைதியுடன் அனைத்தையும் அர்ப்பணிக்கும் அன்புடன் தெய்வ அன்னை அவர் தோள்கள் மீது சுமத்தியிருந்த பணியை மீண்டும் ஏற்றுக்கொள்ள ஆசிரமம் திரும்பினார்.

இறையனுபூதி பெற்றுள்ள ஒருவரிடம் இயல்பான வெளிப்பாடாக அமையும் மாபெரும் ஆன்மீக சக்திகளை குருதேவர் பெற்றிருந்தார். பரமஹம்ஸர் இச்சக்திகள் யாவும் வெறுமனே உயர் விதிகளின் செயல்முறைகளே என்று விளக்கினார். அவரது பணியின் ஆரம்ப நாட்களில் அவர் சில சமயங்களில் வெளிப்படையாக, சந்தேகிக்கும் சமூகத்தின் நம்பிக்கையை ஊக்குவிக்க அவர் விதிமுறைகளை மெய்ப்பித்துக் காட்டினார். அவர் உடனடியாக குணப்படுத்திய பலரில் நானும் ஒருத்தி.

பிந்தைய வருடங்களில் குருதேவர் கூறினார், “இறைவன் எனக்களித்த சக்திகளை வெளிப்படுத்தும் பட்சத்தில், என்னால் ஆயிரக்கணக்கானோரை ஈர்க்க முடியும். ஆனால் இறைவனுக்கான பாதை ஒரு கோமாளி வித்தை அல்ல. நான் என் சக்திகளை இறைவனிடமே மீண்டும் ஒப்படைத்துவிட்டேன். அவன் ஆணையிட்டாலன்றி நான் ஒருபோதும் அவற்றைப் பயன்படுத்துவது இல்லை. என் பணியானது மனித ஆன்மாவில் இறைவனுக்கான அன்பை விழிப்புறச் செய்வது. நான் ஒரு கூட்டத்தை விட ஓர் (இறைவனை உண்மையாக நாடும்) ஆன்மாவிற்கு முன்னுரிமை அளிக்கிறேன். நான் அத்தகைய ஆன்மாக்களின் கூட்டத்தை நேசிக்கிறேன்.” குருதேவர் மக்களின் திரள்களில் இருந்து பின்வாங்கி, எண்ணிக்கை-சார்ந்த வளர்ச்சிக்குப் பதிலாக தரம்-சார்ந்த வளர்ச்சியில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். கூட்டங்களின் மத்தியில், அவரது போதனைகளின் உயர் லட்சியங்கள் மற்றும் ஆன்மீக இலக்குகளுக்கு, மறுமொழி அளித்த அந்த “ஆன்மாக்களை”த் தேடினார்.

சேவை ஞானம் மற்றும் தெய்வீக அன்பு

ஒரு பேட்டியின் போது ஒரு பத்திரிக்கையாளர் என்னிடம் கேட்டார், “பரமஹம்ஸ யோகானந்தர் ஒரு  பக்தி யோகியா, ஞான யோகியா,, அல்லது கர்மயோகியா,எதை நீங்கள் குறிப்பிடுவீர்கள்?” நான் பதில் அளித்தேன், “அவர் பல வகைப்பட்டவர். அமெரிக்க மக்களின் இதயங்களையும் மனங்களையும் ஊடுருவ, அத்தகைய ஒரு தன்மை, உயர்நிலை மற்றும் புரிதலுள்ள மனிதர் தேவைப்பட்டது. அமெரிக்க வாழ்க்கைக்கும் இந்திய வாழ்க்கைக்கும் இடையேயுள்ள இடைவெளியை நிரப்ப அவருக்கு அது வல்லமை அளித்தது; அவரது போதனைகள் மேலை நாடுகளுக்கும் கீழை நாடுகளுக்கும் பயன்படும்படியான ஓர் உலகளாவியப் பண்பை வெளிப்படுத்துகிறது.”

ஒரு கர்ம யோகியாக பரமஹம்ஸர் இறைவனுக்காகவும் மனித இனத்தின் உயர்விற்காகவும் உலகில் அரிதாகவே காணப்படும் அர்ப்பணிப்புடன் உழைத்தார். பிறருக்கு சேவை செய்யவோ அல்லது உதவி செய்யவோ அவருக்கு வாய்ப்பு கிட்டிய போதெல்லாம் அவர் அதை நழுவ விட்டதை நாங்கள் ஒருபோதும் பார்க்கவேயில்லை. துயருறுபவர்களுக்காக அவர் கண்ணீர் சிந்தினார், அனைத்துத் துயரத்திற்கும் அடிப்படைக் காரணமான அறியாமையை ஒழிக்க அவர் அயராமல் பாடுபட்டார்.

ஒரு ஞானி, என்ற முறையில் அவரது ஞானம், அவரது நூல்கள், சொற்பொழிவுகள் மற்றும் தனிப்பட்ட அறிவுரைகள் பல தொகுதிகளாகப் பொழிந்தன. அவரதுஒரு யோகியின் சுயசரிதம் யோகத்தின் மீதான ஓர் அதிகாரபூர்வ உரை நூலாக அங்கீகரிக்கப்பட்டு, பல கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பல்வேறு துறைகளில் போதிப்பதற்கும், ஆய்விற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் பரமஹம்ஸர் ஒரு கோட்பாட்டுவாதி என்று பொருளல்ல. அவரைப் பொருத்தவரை அனுபூதி அற்ற கோட்பாட்டறிவு தேன் இல்லாத தேன் கூட்டிற்கு சமமாக பயனற்றதாகும். அவர் சமயத்திலிருந்து கொள்கை பிடிவாதம் மற்றும் கோட்பாடு சார்ந்த ஆய்வு எனும் திரைகளைக் கிழித்து உண்மையின் சாரத்தை வெளிப்படுத்தினார்: மனித இனத்திற்கு இறைவனைப் பற்றிய புரிதலை மட்டுமின்றி அவனை உணர்ந்தறியும் பாதைக்கான அந்த இன்றியமையாத அடிப்படை கொள்கைகள்.

தனது சீடர்களுக்கு, பரமஹம்ஸ யோகானந்தர், எல்லாவற்றிற்கும் மேலாக,  பிரேமாவதாரம், ஒப்பற்ற தெய்வீக அன்பின் அவதாரம், ஓர் ஒப்பற்ற பக்தர் . என்று அறியப்பட்டார். அவரது பண்பில் மிக உயர்ந்து விளங்குவது இறைவனுக்கான அவருடைய பேரளவிலான அன்புதான்; அவனை அவர் தெய்வ அன்னையாகப் போற்றி வழிபட்டார். இதுதான், இயேசு கூறிய, முதல் கட்டளை: “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்மாவோடும், உன் முழு மனதோடும், உன் முழு பலத்தோடும் அன்புகூறுவாயாக.” பரமஹம்ஸர் அத்தகைய அன்பையே, அவரது அமெரிக்க ஆரம்ப நாட்களில் காணப்பட்டது போல் மக்கள் திரள்களுக்கு முன்பு பேசும் போதோ அல்லது வளர்ந்து கொண்டிருக்கும் அவரது ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்/ யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவின் உலகளாவிய தேவைகளை நிர்வகிக்கும் போதோ அல்லது தன்னிடம் ஆன்மீக பயிற்சிக்காக வந்தவர்களை வழி நடத்தும்போதோ வெளிப்படுத்திக் காட்டினார்.

ஆன்மீக ஒழுங்குமுறை தேவைப்படும்போது பரமஹம்ஸர் மிகவும் கண்டிப்பாக இருக்கக் கூடியவர், ஆனால் எப்பொழுதும் எல்லையற்ற கருணை இருந்தது; மற்றும் பொறுமை, அது தேவைப்பட்ட போது மிக அதிகமாக இருந்தது. காழ்ப்புணர்ச்சி மிகுந்த சிலரால் செய்யப்பட்ட குருதேவரின் பணியின் மீதான தாக்குதல் மீது நாங்கள் வெகுண்டு எழுந்த போது, அவர் கூறிய வார்த்தைகள் நன்கு நினைவில் உள்ளன: “ஒரு போதும் மற்ற ஆசான்கள் மற்றும் சங்கங்களுக்கு எதிராக கனிவற்ற வார்த்தை பேசாதீர்கள். மற்றவர்கள் தலையை வெட்டி நாம் உயரமானவர்கள் போல காட்டிக் கொள்ள வேண்டாம். இந்த உலகில் யாவருக்கும் போதுமான அளவு இடம் உள்ளது, மற்றும் நாம் கனிவின்மைக்கும் வெறுப்பிற்கும், நல்லெண்ணம் மற்றும் அன்பின் மூலம் மறுமொழி கூற வேண்டும்.”

வரும் உலகத்திற்கு ஓர் “உலகளாவிய பிரார்த்தனையை” தந்தருளினார்: “அன்பான இறைவா, உனது அன்பு என் பக்தி எனும் திருக்கோவிலில் என்றென்றும் ஒளிரட்டும் மற்றும் நான் உந்தன் அன்பினை எல்லா இதயங்களிலும் விழித்தெழச் செய்ய வல்லமை பெறுவேனாக.” இப் பிரார்த்தனையின் கருத்தே அவரது வாழ்வின் மையமாக இருந்தது.

“என் இடத்தை அன்பால் மட்டுமே நிரப்ப முடியும்”

குருதேவரது வாழ்க்கையின் இறுதியில் அமெரிக்காவிற்கான இந்திய தூதுவர் டாக்டர். பினய் ஆர். சென் அவர்களை (அடுத்த நாள் காலை அவர் குருதேவரைக் காண்பதற்காக நமது ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்பிற்கு வருகை புரிவதாக இருந்தது) வரவேற்பதற்கு முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார். குருதேவர் சீடர்களை ஆசிரம சமையல் அறைக்கு அழைத்து கூறினார், “இன்று நாம் தூதுவருக்காக கறிகளையும் இந்திய இனிப்பு வகைகளையும் தயார் செய்வோம்.” நாங்கள் நாள் முழுவதும் சமைத்தோம்.குருதேவர் உயர் ஆனந்த நிலையில் இருந்தார்.

அன்று மாலை வெகு நேரம் கழித்து, அவர் என்னை அழைத்து கூறினார், “நாம் நடைப் பயிற்சி செய்வோம், வா.” ஆசிரமம் ஒரு பெரிய மூன்று மாடிக் கட்டிடம். மூன்றாவது மாடிக் கூடம் வழியே நாங்கள் நடந்த பொழுது அவர் தனது குரு ஸ்ரீ யுக்தேஸ்வரரின் புகைப்படத்திற்கு முன் சற்று நின்றார். அந்த படத்தையே இமைகள் கொட்டாமல் நீண்ட நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு மிக அமைதியாக என் பக்கம் திரும்பி அவர் கூறினார், “உனக்குத் தெரியுமா நான் இந்த பூமியை விட்டுச் செல்வதற்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ளன என்று?” என் கண்களில் கண்ணீர் வெள்ளமாகப் பெருக்கெடுத்தது. உள்ளுணர்வுப் பூர்வமாக, அவர் கூறியது நடக்கப் போகிறது என்று எனக்குப் பட்டது. அவர் தனது உடலை நீப்பதைப்பற்றி என்னிடம் பேசியதற்கு சற்று நேரம் முன்பு தான், நான் அவரிடம் அழுதவாறே கேட்டிருந்தேன், “குருதேவா, நீங்கள்தான் எங்கள் இதயங்கள் மற்றும் உங்கள் சங்கம் எனும் மோதிரத்தில் உள்ள வைரம். உங்களைப் பிரிந்து நாங்கள் எவ்வாறு தொடர்ந்து செயலாற்ற முடியும்?” அவரது கண்கள் தெய்வீக பேரன்பின் மென்மையான குளங்களைப் போல் ஒளிர்ந்தவாறு, அத்துணை அன்பு மற்றும் கருணையுடன் அவர் பதிலளித்தார்: “நான் சென்றவுடன் அன்பால் மட்டுமே என் இடத்தை நிரப்ப முடியும். இறைவனைத் தவிர மற்ற எதையும் அறியாதவாறு இறைவனுக்கான அன்பினால் உன்மத்தமாகி இரு; மற்றும் அந்த அன்பினை அனைவருக்கும் அளித்திடு.”

இறுதிநாளில், லாஸ்ஏஞ்சலீஸ் நகரின் வணிக மையப்பகுதியில் தூதுவருக்காக அளிக்கும் பெருவிருந்தில் பேச வேண்டியிருந்தது. அவருக்குச் சேவை செய்யும் நாங்கள் அதிகாலையிலேயே எழுந்து அவரது அறைக்கு, நாங்கள் ஏதாவது உதவி அவருக்கு தேவைப்பட்டால் செய்வதற்காக சென்றோம். நாங்கள் அறையினுள் நுழைந்த போது, அவர் அடிக்கடி தியானம் செய்து பெரும்பாலும் பரவசத்தில் இருக்கும் நாற்காலியில் மிகவும் அமைதியாக அமர்ந்திருந்தார். நாங்கள் பேசாமல் மௌனம் காக்க வேண்டுமென்றால், அவர்தம் விரலை உதடுகளில், “நான் மௌனத்தில் இருக்கிறேன்” என்று பொருள்படுமாறு வைப்பார். அன்றும் அதை அவர் செய்த உடனேயே, அவருடைய ஆன்மா பின்வாங்கிச் செல்வதை, அவர் படிப்படியாக உடலுடன் ஆன்மாவைப் பிணைக்கும் ஒவ்வொரு மறைமுகமான தளைகளையும் துண்டித்து கொண்டிருப்பதை, கண்டேன். துக்கம் என் இதயத்தை நிரப்பியது, ஆனால் அத்துடன் வலிமையும் கூட நிரம்பியது, ஏனெனில் என்ன நிகழ்ந்தாலும் சரி, அவருக்கான என் பக்தியின் வாயிலாக என் குருதேவர் என் இதயத்தை விட்டு அகல மாட்டார் என்றறிந்தேன்.

பகல் முழுவதும் அவர் அந்த உள்முகப்பட்ட நிலையிலேயே தொடர்ந்திருந்தார். மாலையில் நாங்கள் அவருடன் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெரிய ஹோட்டலுக்குச் சென்றோம். சற்று முன்னதாகவே வந்ததால், குருதேவர் மாடியில் ஒரு சிறு அறையில் அமைதியாக தியானம் செய்து கொண்டு காத்திருந்தார். சீடர்களாகிய நாங்கள் அவரைச் சுற்றி தரையில் அமர்ந்திருந்தோம். சிறிது நேரம் கழித்து அவர் எங்கள் ஒவ்வொருவரையும் வரிசையாக உற்றுப் பார்த்தார். அவர் என்னைப் பார்த்தபோது, “என் அன்பான குருதேவர் எனக்கு விடைபெறும்தரிசனம் அளித்துக் கொண்டிருக்கிறார்” என்று எண்ணியதை நினைவு கூறுகிறேன். பிறகு அவர் கீழே விருந்து கூடத்துக்குச் சென்றார்.

அங்கு, நகர, மாநில மற்றும் இந்திய அரசாங்க அதிகாரிகளை உள்ளடக்கி பெரிய அவையோர் கூட்டம் இருந்தது. நான் சொற்பொழிவாளர்கள் மேஜையில் இருந்து சிறிது தூரத்தில் அமர்ந்திருந்தேன். ஆனால் என் மனமும் பார்வையும் என் குருதேவரின் அருள் மிக்க திருமுகத்திலிருந்து ஒரு கணமும் விலகவில்லை. இறுதியாக அவர் பேசும் முறை வந்தது. குருதேவர்தான், தூதுவர் சென் ஏற்புரையை வழங்குவதற்கு முன் இறுதியாக பேசக் கூடியவராக இருந்தார். குருதேவர் அவர் நாற்காலியில் இருந்து எழுந்த போது, என் இதயம் ஒரு கணம் துடிக்க மறந்தது, நான் நினைத்தேன், “ஓ, இதுதான் அந்த இறுதித் தருணம்!”

அவர் இறைவனுக்கான அத்துணை பேரன்புடன் பேச ஆரம்பித்ததும் முழு அவையே திரண்டு ஒரு நபர் போலானது, எவரும் அசையவில்லை. அங்குள்ள அனைவர் மீதும் தன் இதயத்திலிருந்தெழுந்த பிரம்மாண்டமான அன்பின் சக்தியைப் பொழிந்து கொண்டிருந்ததால் அவர்கள் சிலையாக அசைவற்றுப் போயினர். அன்றிரவு பலருடைய வாழ்க்கைகள் மாற்றப்பட்டன; அந்தத் தெய்வீக அனுபவத்தால் பின்னாளில் ஆசிரமத்தில் துறவிகளாகச் சேர்ந்த சிலர் மற்றும் சங்க உறுப்பினர்களாகச் சேர்ந்த பலரது வாழ்க்கைகளும் அவற்றில் அடங்கும். அவரது இறுதி வார்த்தைகள் அவர் மிகவும் நேசித்த இந்தியாவைப்பற்றி இருந்தன:

“எங்கே கங்கையும் கானகங்களும் இமாலயக் குகைகளும் மனிதர்களும் இறைவனைக் கனவு காண்கின்றனரோ — அந்த பூமியைத் தொட்டது என் தேகம்; நான் புனிதனானேன்.”

அவர் இந்த வார்த்தைகளை உச்சரிக்கும் போதே,  கூடஸ்த மையத்தை நோக்கி தன் பார்வையை உயர்த்தினார், அவரது தேகம் தரையில் சரிந்து விழுந்தது. ஒரே கணத்தில் நாங்கள் இரண்டு சிஷ்யைகள் — எங்கள் கால்கள் தரையில் பட்ட மாதிரியே தெரியவில்லை — அவர் பக்கத்தில் (தயா மாதா, ஆனந்தமாதா) இருந்தோம். அவர்  சமாதி , நிலைக்கு சென்றிருக்கலாம் என்று எண்ணிக்கொண்டு நாங்கள் மென்மையாக அவர் காதில் ஓம் ஐ இசைத்தோம். (பல வருடங்களாக, அவர் எங்களிடம் கூறியிருந்தார், பரவச நிலைக்கு அவர் சென்று சில மணி நேரம் கழித்ததும் உணர்வு நிலைக்குத் திரும்பவில்லையென்றால், அவரது வலது காதில் ‘ஓம்’ ஐ இசைப்பதன் மூலம் அவரை வெளிக்கொணர முடியும் என்று)

நான் இசைத்துக் கொண்டிருக்கும் போது, ஓர் அற்புதமான அனுபவம் நிகழ்ந்தது. நான் அதை எவ்வாறு உங்களுக்கு விவரிப்பேன் என்று எனக்குத் தெரியவில்லை. நான் என் அருளாசிமிக்க குருதேவர் பக்கம் மண்டியிட்ட போது, அவரது ஆன்மா தேகத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்; பிறகு, ஒரு மிகப்பெரிய சக்தி என்னுள் நுழைந்து. “மிகப்பெரிய” என்று நான் கூறுகிறேன், ஏனென்றால் அது அன்பு, அமைதி மற்றும் புரிதலின் ஒரு திணறடிக்கும் பேரின்பமய சக்தி. “என்ன இது?” என்று நான் சிந்தித்ததை நினைவு கூறுகிறேன். எனது உணர்வுநிலை, நான் எந்த துக்கத்தையும் உணராத அளவிற்கு உயர்த்தப்பட்டது. என்னால் கண்ணீர் விட முடியவில்லை. அன்றிலிருந்து இது நாள் வரை அவ்வாறுதான் இருந்துவருகிறது, ஏனெனில் எனக்கு சந்தேகத்திற்கிடமின்றி தெரியும், குருதேவர் உண்மையில் என்னுடன் இருக்கிறார் என்று.

இறப்பிற்கு அவர் மேல் எந்த உரிமையும் இல்லை

யாரோ ஒருவர் என்னிடம் கேட்டார், “நம் குருதேவர் தன் தேகத்தை விட்டதிலிருந்து என்றாவது உங்கள் முன் தோன்றினாரா?” ஆமாம், அவர் தோன்றியுள்ளார். நான் இதைப்பற்றி அதிகம் என் கதையை தொடர்ந்து பேசுகையில் கூறுவேன். ஆயிரக்கணக்கானோர் கடைசித் தடவையாக அவரது பூத உடலைத் தரிசிக்க வந்தனர். அவரது தோல் பொன் போன்று, பொன்னொளியால் நீராட்டப்பட்டது போல், விளங்கியது. மிக இனிமையான அதி கனிவான புன்னகை, எல்லோருக்கும் ஆசி வழங்குவது போல் அவர் உதடுகளில் தவழ்ந்தது. குருதேவர் தேகத்தை நீத்த இருபத்தியொரு நாட்களுக்குப் பிறகும் அவரது உருவம் ஒரு பூரணப் பாதுகாக்கப்பட்ட நிலையிலேயே இருந்தது. சிதைவின் மிகச்சிறிய அறிகுறி கூட தென்படவில்லை. உள்ளதை உள்ளபடியே கூறும் மேல்நாட்டு உலகத்திலும் கூட, பத்திரிகைகள் இந்த அற்புத நிகழ்வைப் பற்றி தலைப்புப் பகுதிகளிலும், அறிக்கைகளிலும் புகழ்ந்து தள்ளின. அவரது உடலைக் கவனித்த சவக்கிடங்கு அலுவலர்களும் “பரமஹம்ஸ யோகானந்தருடைய விஷயம் எங்கள் அனுபவங்களில் ஈடு இணையற்றது” என்று அறிக்கை விடுத்தனர்.

இதற்குப்பிறகு, சிறிது காலத்திற்குள்ளேயே குருதேவரது பணியின் முழுத்தலைமைப் பொறுப்பும் என் தோள்களில் விழுந்தன.

ஓர் உயரிய ஆசான் உலகை விட்டுச் செல்லும் போது, குருவினால் துவங்கப்பட்ட பணி எவ்வாறு வழிநடத்தப்பட வேண்டும் என்பது பற்றி வெவ்வேறு கருத்துக்கள் எழுவது இயற்கையே. நான் தலைவியான மறுநாள் குருவின் பணியை பற்றிய விவாதத்தின் போது ஐயங்கள் எழுந்தன. பணியின் வழிகாட்டுதல் இல்லறத்தாரின் கைகளிலா அல்லது உலகைத்துறந்த சந்நியாசியின் கைகளிலா, எவர் கையில் இருக்க வேண்டும்? குருதேவர் எங்களிடம் கூறியிருந்தார். அப்பொறுப்பு அவரைப் போல் ஒருமுனைப்புடன் இருக்கும் துறவிகள்பால் இருக்க வேண்டுமென்று, ஆனால் அந்த உத்தரவு, சில உறுப்பினர்களால் எதிர்க்கப்பட்டது. உண்மை, குருவின் அன்பு எல்லா பக்தர்கள் மேலும் ஒரே மாதிரியாகவே உள்ளது. நானும் ஒரு வித்தியாசத்தையும் உணரவில்லை, ஏன் வெளித் தோற்றங்களால் பிணைக்கப்பட வேண்டும்? ஒரு பக்தர், இறைவனை நேசிப்பதால் பக்தர் ஆகிறார், அவர் ஒரு காவித்துணி அணிவதால் அல்ல. ஆனால் என் மனம் சஞ்சலமுற்றது.

அன்றிரவு, குருதேவரிடம் ஆழ்ந்து தியானம் செய்து கொண்டும் பிரார்த்தனை செய்து கொண்டும் அவரது பதிலை நாடினேன். மிகவும் நேரமாகி விட்டிருந்தது, ஆனால் நான் இன்னமும் தியானம் செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது திடீரென என் உடல் படுக்கையிலிருந்து எழுந்து, கூடத்தைக் கடந்து குருதேவருடைய அறைக்குள் நுழைவதை கண்டேன். நான் அவ்வாறு செய்த போது என் கண்ணின் ஓரம் வழியாக குருதேவரது சாதர் (சால்வை) ஒரு லேசானக் காற்றினால் படபடத்துக் கொண்டிருந்தது போல கண்டேன். நான் திரும்பி பார்த்தேன், அங்கு குருதேவர் நின்று கொண்டிருந்தார். எத்துணை ஆனந்தத்துடன் நான் ஓடிச்சென்று அவர் முன் அவரது பாதத்துளியை எடுப்பதற்காக அவரது திருப்பாதங்களை என்னருகே நன்றாகப் பற்றிக்கொண்டு வணங்கினேன், “குருதேவா, குருதேவா,” நான் கதறினேன் “நீங்கள் இறக்கவில்லை, நீங்கள் சென்றுவிடவில்லை! மரணத்திற்கு உங்கள் மேல் எந்த உரிமையும் கிடையாது.” எத்துணை இனிமையாக அவர் குனிந்து என்னை நெற்றியில் தொட்டார். அவர் அவ்வாறு செய்தவுடன் அந்தக்கணமே மறுநாள் காலைக் கூட்டத்தில் நான் கூறவேண்டிய பதிலை அறிந்தேன். குருதேவர் என்னை ஆசீர்வதித்தார், நான் மீண்டும் என் படுக்கையின் மேல் அமர்ந்திருப்பதைக் கண்டேன்.

மறுநாள் காலை, நான் சொஸைடி இயக்குனர்களைச் சந்தித்து குருதேவர் எனக்கு தெரிவித்த பதிலை கூறினேன்; அவரது பணி ஒன்றுபட்டது. அத்துடன் அன்றிலிருந்து வளர்ந்து வளர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது. இறைவனின் ஆசீர்வாதம் அத்தகையது.

என்றும்-வாழும் குருதேவர்

பரமஹம்ச யோகானந்தர் தான் ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்/ யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவின் குருதேவர் மற்றும் ஒப்புயர்வற்ற தலைவராக இருப்பார். அவரால் தொடங்கப்பட்ட பணியை தொடர்ந்து செய்யும் நாங்கள் அனைவரும் அவரது சீடர்களாக மட்டுமே பணிவுடன் சேவை செய்கிறோம். எங்கள் ஒரே விருப்பம், இப்பாதைக்கு வரும் அனைவரது கவனத்தையும் பக்தியையும் இறைவன் பாலும் மற்றும் இறைவனிடம் அவர்களை அறிமுகம் செய்து வைக்க கூடிய எங்கள் தெய்வீக குருதேவர் பாலும் திருப்ப வேண்டும் என்பது தான். இறுதியான அர்த்தத்தில், இறைவன் மட்டுமே குருவாகிறான் என்று எங்களுக்கு குருதேவர் சுருக்கமாக எப்பொழுதும் நினைவுபடுத்துவதுண்டு. இறைவனது கருவி என்ற முறையில், குருதேவருடைய ஒரு விருப்பம், எங்களை, நம் ஆன்மாக்கள் நாடுவதை, எவரிடமிருந்தும் பெற முடியாதவற்றை, நாம் பெறக்கூடிய தெய்வீகப் பேராதாரத்திற்கு ஈர்ப்பதுதான். குருதேவருக்கு விசுவாசமாக இருப்பது இறைவனுக்கு விசுவாசமாக இருப்பதற் கொப்பாகும். குருவிற்கும் அவரது பணிக்கும் சேவை புரிவது இறைவனுக்கு சேவை செய்வது போலாகும். ஏனெனில் இறைவனுக்குத்தான் நாம் நமது முதல் விசுவாசத்தை தருகிறோம். குரு என்பவர் இறைவனால் நியமிக்கப்பட்ட ஆன்மீகத் தகவல் தடம். அவரது அருளாசிகள் மற்றும் மகிழ்ச்சியூட்டும் போதனைகள் மூலம் நாம் மீண்டும் இறைவனிடம் செல்லும் நமது பாதையைக் காண்கிறோம்.

குருதேவர் இந்த பூமியை விட்டுச் சென்ற பிறகு குரு — சிஷ்ய உறவினைப் புரிந்துகொள்வது பக்தர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்று நான் எண்ணுவது வழக்கம். நான் இந்தச் சந்தேகத்தை ஒருபோதும் குருதேவரிடம் எழுப்பியதில்லை, ஆனால் அவர் பெரும்பாலும் எங்களது சொல்லாத எண்ணங்களுக்குப் பதிலளிப்பார். அவர் காலடியில் ஒரு நாள் மாலை நான் அமர்ந்திருக்கும் போது அவர் கூறினார்: “நான் அருகில் இருப்பதாக நினைப்பவர்களுக்கு நான் அருகில் இருப்பேன். இந்த தேகம் ஒன்றுமில்லை. நீ இந்த பெளதீக உருவத்துடன் பற்றுக் கொண்டால், நீ என்னுடைய எல்லையற்ற வடிவத்தில் என்னைப் பார்க்க முடியாது. ஆனால் நீ என்னை இத்தேகத்திற்கு அப்பால் சென்று நான் எவ்வாறு உண்மையில் உள்ளேனோ அவ்வாறு பார்த்தால், பிறகு நான் எப்பொழுதுமே உன்னுடன் இருப்பதை நீ அறிவாய்.”

நான் அந்தக் கூற்றின் உண்மையை, சில காலம் கடக்கும் வரை முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. ஒரு நாள் மாலை நான் தியானம் செய்து கொண்டிருக்கும் போது இந்த எண்ணம் எழுந்தது: இயேசு கிறிஸ்துவை சுற்றி, பூமியில் அவரது சில வருட கால போதனையின்போது திரண்ட சீடர்களை நினைத்து பார். சிலர் அவரை உண்மையாக உயர்வாக மதித்தார்கள்; சிலர் சுயநலமின்றி அவருக்கு சேவை செய்தனர். ஆனால் இந்தக் கூட்டங்களின் மத்தியிலிருந்து எத்தனை சீடர்கள் அவரை உண்மையாக புரிந்து கொண்டு இறுதிவரை பின்பற்றினார்கள்? அவருடைய கடுமையான சோதனைக் காலத்தின் போது, அவர் இறக்கும் தருணத்தில் எத்தனை பக்தர்கள் அவருடன் நின்று அவரை ஆதரித்தார்கள்? இயேசுவை அறிந்திருந்தும், அவரைப் பின்பற்றும் வாய்ப்பு கிடைத்த பலர் அவரது வாழ்நாளின் போது அவரைக் கைவிட்டார்கள். இருப்பினும், இயேசு கிறிஸ்து பூமியை விட்டு நீங்கிய ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பணிவான, இனிமையான, எளிமையான, மனிதர் வந்தார், அவர் தனது அழகிய வாழ்க்கை அத்துடன் கிறிஸ்துவிடம் பூரண இசைவித்தல் மற்றும் தொடர்பு மூலம், இயேசு போதித்திருந்த ஒவ்வொன்றையும் மெய்ப்பித்து காட்டி அதன் மூலம் இறைவனைக் கண்டார். அந்தப் பணிவான சிறிய உருவம் உள்ள மனிதர்தான் குருதேவர் மிகவும் நேசித்த அசிசியின் புனித பிரான்சிஸ். எந்த ஆன்மீக விதிமுறை மூலம் புனித அசிசி பூமியில் தனக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்திருந்த தன் குருவிடம் பூரணமாக இசைந்திருக்க முடிந்ததோ அதே விதிமுறை இன்றும் பலனளிக்கும் என்று நான் உணர்ந்தேன்.

இறைவனால் நியமிக்கப்பட்ட ஓர் உண்மையான குரு என்றும் வாழ்கிறார். அவருக்கு தன் சொந்த சீடர்களைத் தெரியும் மேலும் அவர் சீடர் உள்ள தளத்தில் பிறவி எடுத்தோ அல்லது எடுக்காமலோ அவர்களுக்கு உதவுகிறார். பக்தி மற்றும் ஆழ்ந்த குருவால் அளிக்கப்பட்ட தியானத்தின் வாயிலாக குருதேவருடன் இசைந்திருக்க கடும் முயற்சி செய்யும் அனைவரும் அவரது வழிகாட்டுதல், அருளாசிகள் பற்றிய உத்திரவாதத்தை இன்றும் அல்லது எதிர்காலத்தில் எந்த நேரத்திலும் அவர் பெளதீக உருவத்தில் நம்முடன் இருந்தபோது உள்ளவாறே, மிகவும் அதிகமாக உணர்வார்கள். இது, பரமஹம்ஸ யோகானந்தருடைய மறைவிற்கு பின் வந்த மற்றும், பூமியில் குருதேவர் வாழ்ந்த காலத்தில் இந்த அருட்பேறு பெற்றவரை அறியும் வாய்ப்பில்லாமல் போனது பற்றி அழுது புலம்பிய பக்தர்களுக்கு மிகப் பெரும் ஆறுதலாக இருக்கக்கூடும்: நீங்கள் தியானத்தில் மௌனமாக அமரும் பொழுது அவரை உங்களால் அறிய முடியும். உங்கள் பக்தியுடனும் பிரார்த்தனையுடனும் மிக ஆழமாகச் செல்லுங்கள், அப்போது நீங்கள் அவரது புனிதமான பிரசன்னத்தை உணர்வீர்கள். அவருக்குப் பதிலாக அவர் பணியைத் தொடர்ந்து செய்ய எஞ்சி விடப்பட்டுள்ள நாங்கள் இதை உணர்ந்து அனுபவம் பெறாவிட்டால் நாங்கள் அவரது பணிக்கு சேவை செய்ய கையறு நிலையில் உள்ளவர்கள் ஆவோம். அவரது அருளாசிகளையும் வழிகாட்டுதல்களையும் நாங்கள் உணர்வதாலும் மற்றும் உடல் வடிவில் எங்கள் அருகில் இருந்தது போல் இன்றும் எங்கள் அருகில் உள்ளதை நாங்கள் அறிவதாலும், எங்களுக்கு ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்பின் செய்தியைப் பரப்புவதில் எங்கள் பங்கை ஆற்றுவதற்கான வலிமை, தீர்மானம், உற்சாகம், பக்தி மற்றும் திட நம்பிக்கையை நாங்கள் பெற்றிருக்கிறோம். பரமஹம்ஸருடைய வாழ்க்கையும் பணியும் வரலாற்றுப் பாதையில் தாக்கத்தை ஏற்படுத்த ஏற்கனவே அதிகம் செய்துள்ளன, மேலும் இது அந்த தாக்கத்தின் ஒரு தொடக்கம் மட்டும் தான் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர், மனித இனத்தின் பாதைக்கு ஒளியூட்டுவதற்காக இப்பூமியில் பேருண்மையின் ஒளி அவதாரங்களாக வாழ்ந்த தெய்வீக ஆன்மாக்களது கூட்டுக் குழுவை சேர்ந்தவர். இந்த உலகம் விரைவிலோ அல்லது காலம் தாழ்த்தியோ அந்த ஒளியை நோக்கித் திரும்பியே ஆகவேண்டும், ஏனெனில் மனிதன் தனது சொந்த அறியாமையின் கரங்களால் அழிய வேண்டும் என்பது இறைவனின் விருப்பமல்ல. மனித இனம் தன் கண்களைத் திறந்து, விடியலைக் காண்பதற்காக மட்டுமே காத்திருக்கும் ஒரு மேம்பட்ட, நாளைய தினம் உள்ளது. தெய்வீகப் பேரொளியை பிரதிபலித்துள்ள பரமஹம்ஸ யோகானந்தரும் மற்றவர்களும் அந்தப் புதுநாளின் ஒளி ஏந்துபவர்கள் ஆவர்.

இப்பொழுதே வரவழையுங்கள்:  ஃபைன்டிங் தி ஜாய் விதின் யு

இதைப் பகிர