கிரியா யோக விதைகளை உலகமெங்கும் பயிரிடுதல்

கிரியா சாதகர்களுக்கு ஏற்பட்ட உயர்-உணர்வுநிலை அனுபவங்களில் சிறு துளிகள்

1920ல் தற்போதைய யுகத்திற்கான கிரியா யோகத்தை உயித்தெழச் செய்த தலைசிறந்த குருதேவர் மகாவதார் பாபாஜி பரமஹம்ஸ யோகானந்தரை கல்கத்தாவில் உள்ள 4, கார்ப்பர் ரோடு வீட்டில் சந்தித்தார். பாபாஜி இளம் துறவியிடம் கூறினார்: “மேற்கத்திய நாடுகளில் கிரியா யோகப் போதனையைப் பரப்ப நான் தேர்ந்தெடுத்திருப்பது உன்னைத்தான். நீண்ட காலத்திற்கு முன் நான் உனது குரு யுக்தேஸ்வரை ஒரு கும்ப மேளாவில் சந்தித்தேன்; அப்போது நான் உன்னைப் பயிற்சிக்காக அனுப்புவேன் என்று அவரிடம் கூறினேன்.”

கிரியா யோகத்தின் வாயிலாக பரவசப் பேரண்ட உணர்வுநிலைகளுள் தான் நுழைய இயலச் செய்த சுவாமி ஸ்ரீ யுக்தேஸ்வரிடம் பெற்ற பயிற்சியை விவரித்தவாறு, பரமஹம்ஸ யோகானந்தர் எழுதினார்: “ஸ்ரீ யுக்தேஸ்வர், அருளாசிகள் நிறைந்த அனுபவத்தை விருப்பப்படி வரவழைப்பது எப்படி மற்றும் அதை மற்றவர்களுக்கு, அவர்களுடைய உள்ளுணர்வுப் பாதைகள் மேம்பட்டிருக்கும் போது, கடத்துவதும் எப்படி என்று எனக்குக் கற்பித்தார்.”

இந்தத் தெய்வீக உணர்வுநிலை, அருளாசி ஆகியவற்றின் கடத்தல்—அது ஆரம்பத்தில் சீடரின் ஏற்கும் தன்மை, முன்னேற்றம் ஆகியவற்றைச் சார்ந்து அதிக அல்லது குறைந்த விகித அளவில் அனுபவிக்கப்படுகிறது—கிரியா யோகத்தை பரப்புதலில் ஓர் இன்றியமையாக் கூறு ஆகும். பாபாஜி அறிவுறுத்தியதைப் போல, ஒரு சீடனுக்கும் ஓர் உண்மையான, தெய்வீகத்தால் ஆணையிடப்பட்ட குருவிற்கும் இடையேயுள்ள புனித உறவின் சந்தர்ப்பத்தில், கிரியா வெறுமனே ஒரு தத்துவார்த்த போதனையாக அல்லாது, ஆனால் ஓர் ஆன்மீக அறிமுகமாக (தீட்சையாக) வழங்கப்படுகிறது.

ஒரு யோகியின் சுயசரிதம் நூலின் முடிவில் பரமஹம்ஸர் எழுதினார்: “தெய்வத்தந்தையின் மகன்களாக தமது நிலையை மீண்டும் ஏற்படுத்திக் கொள்ள முறையான முயற்சியைச் செய்திருக்கும் போது மனிதர்களுக்குக் காத்திருக்கும் அமைதியும் தாராளமும் நிறைந்த உலகை உருவாக்க கிரியா யோகிகள், வெறும் டஜன் கணக்கில் அல்ல, இலட்சக்கணக்காக தேவைப்படுகின்றனர்… .மனிதகுலத் துன்பம் முழுவதையும் வெற்றிகொள்வதற்கான ஒரு திட்டவட்டமான, ஆன்ம-அனுபூதிக்கான அறிவியல் உத்தி உள்ளது என்று எல்லா மனிதர்களுக்கும் தெரிய வரட்டும்!” எவர்களுடைய வாழ்க்கைகள் இந்தப் புனித ஆன்ம அறிவியலை பரமஹம்ஸ யோகானந்தர் உலக அளவில் பரப்பியதால் மேம்பட்டிருக்கின்றனவோ, ஒய் எஸ் எஸ்/ எஸ் ஆர் எஃப் -ல் உள்ள அவருடைய அந்த ஆயிரக்கணக்கானோரில் சிலரிடமிருந்து கிடைத்த சுருக்கமான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

டாக்டர் எம். டபிள்யூ. லூயிஸ்

டாக்டர் மின்னோட் டபிள்யூ. லூயிஸ், ஒரு பாஸ்டன் நகரப் பல் மருத்துவர், 1920ல் அமெரிக்காவில் குருதேவரின் வருகைக்கு ஒரு குறுகிய காலத்திற்குப் பிறகு பரமஹம்ஸரைச் சந்தித்தார் மற்றும் கிரியா யோகத்தில் புனிதத் தீட்சையை அவரிடமிருந்து பெற்ற முதல் அமெரிக்க சீடர் ஆனார். ஒரு துணைத் தலைவராகவும் ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் -ன் மிகவும் பிரியமான சுவாமியாகவும் சேவை செய்த பல ஆண்டுகளின் போது, அவர் பரமஹம்ஸருடன் ஆன தனது முதல் சந்திப்பின் கதையை அடிக்கடி பகிர்ந்தார். பின்வரும் விவரணம் பல ஆண்டுகளாகக் கொடுக்கப்பட்ட டாக்டரின் சொற்பொழிவுகளிலிருந்து தொகுக்கப்பட்ட விவரங்களைக் கொண்டது.

1920 ன் பிற்பகுதியில் பரமஹம்ஸ யோகானந்தர் அமெரிக்கா வந்தடைந்த குறுகிய காலத்திலேயே இளம் சுவாமி பாஸ்டன் பகுதியில் உள்ள ஒரு யூனிடேரியன் தேவாலயத்தில் சொற்பொழிவாற்ற அழைக்கப்பட்டார் அங்கே டாக்டர் லூயிஸின் நீண்டநாள் நண்பர் திருமதி அலிஸ் ஹஸி கூட்டத்தில் ஒரு உறுப்பினராக இருந்தார். டாக்டர் லூயிஸுக்கு ஆன்மீகத்தில் இருந்த ஆர்வத்தைப் பற்றி திருமதி ஹஸிக்கு (அவருக்கு பின்னாளில் பரமஹம்ஸ யோகானந்தர் சகோதரி யோகமாதா என்ற பெயரை அளித்தார்) தெரியும் மற்றும் அவருக்கு ஆலோசனை வழங்கினார் நீங்கள் சுவாமி யோகானந்தரைச் சந்திக்க வேண்டும்.

“குருதேவர் பின்னர் தன் நெற்றியை என் நெற்றியின் மீது படும்படியாக வைத்தார். அவர் என்னை மேலே கண்களை உயர்த்தி புருவமத்தியில் பார்க்கும்படி கூறினார், நான் அவ்வாறே செய்தேன். மேலும் அங்கே நான் ஆன்மீகக் கண்ணின் அபாரமான ஒளியைத் தரிசித்தேன்.”

கிறிஸ்துமஸ் ஈவ் விழாவிற்காக யூனிடி இல்லத்தில் சந்திக்க ஒரு முன்-அனுமதி பெறப்பட்டது; அங்கே குருநாதருக்கு ஓர் அறை இருந்தது. இதற்காக டாக்டர் வீட்டைவிட்டுக் கிளம்பிய போது ஒரு குறுகிய நேரத்திற்காகவே தான் வெளியே செல்வதாக நினைத்தார். தான் விரைவாகத் திரும்பி வந்து கிறிஸ்துமஸ் மரத்தை அழகுபடுத்துவதாக தன் மனைவி மில்ட்ரெட்டிடம் கூறினார்.

யூனிடி இல்லத்திற்குப் போகும் வழியில் மத போதகர்களாக வேடமிடும் புரளிவித்தைக்காரர்களால் ஏமாற்றப்படுவதற்கு அல்லது தவறாக வழிநடத்தப்படுவதற்கு எதிரான பெற்றோரின் எச்சரிக்கையை நினைவு கூர்ந்தார்; அவருடைய மனநிலை ஐயம் நிறைந்ததாக இருந்தது.

பரமஹம்ஸர் டாக்டர் லூயிஸை அன்போடு வரவேற்றார். இளம் பல்மருத்துவரின் மனத்தில் பல ஆன்மீகக் கேள்விகள் இருந்தன, மற்றும் பரமஹம்ஸர் அவருக்கு மனநிறைவான பதில்களை அளித்தார். பல ஆண்டுகளுக்குப் பின்னர் டாக்டர் இந்த நிகழ்வைப் பற்றிக் கூறினார், “நான் ‘மிசோரிக்காரன்’ (‘Show-me’ state) மற்றும் எனக்குக் காட்ட வேண்டியிருந்தது. அதைவிட மோசமானது, நான் நியூ இங்கிலாந்துக்காரன் (pious state), மற்றும் எனக்குத் தெரிந்திருக்க வேண்டுமே!”

1920ல் அந்த கிறிஸ்துமஸ் ஈவ் சந்திப்பில் அவர் பரமஹம்ஸரிடம் கூறினார்: “பைபிள் எங்களுக்குக் கூறுகிறது: ‘கண்தான் உடலுக்கு விளக்கு; கண் ஒன்றாக (நலமாக) இருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும்.’ இதை எனக்கு விளக்க முடியுமா?”“அப்படித்தான் நான் நினைக்கிறேன்,” குருதேவர் பதிலளித்தார்.டாக்டர் இன்னும் ஐயத்துடனேயே இருந்தார். “நான் பல நபர்களைக் கேட்டிருக்கிறேன்,” அவர் சொன்னார், “ஆனால் ஒருவருக்குமே தெரிந்திருப்பதாகத் தோன்றவில்லை.”குருடனால் குருடனை வழிநடத்திச் செல்ல முடியுமா பரமஹம்ஸர் மறுமொழியளித்தார்.இருவரும் தவறு எனும் அதே குழியில் போய் விழுவார்கள்.“இந்த விஷயங்களை எனக்குக் காட்ட முடியுமா?”“அப்படித்தான் நான் நினைக்கிறேன்,” குருதேவர் மீண்டும் வலியுறுத்திக் கூறினார்.

“அப்படியானால், இறைவனின் பொருட்டு, எனக்குக் காட்ட வேண்டுகிறேன்!”

குருதேவர் டாக்டரை தரையில் சப்பணமிட்டு அமரும்படிக் கேட்டார், மற்றும் அவருக்கு எதிரில் அமர்ந்தார். டாக்டரின் கண்களை நேரடியாகப் பார்த்தவாறு, பரமஹம்ஸர் கேட்டார்: “நான் உன்னை நேசிப்பதைப் போல நீ எப்போதும் என்னை நேசிப்பாயா?”

டாக்டர் சம்மதம் என்று பதிலளித்தார். பின் குருதேவர் கூறினார், “உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன மற்றும் நான் உன் வாழ்வின் பொறுப்பை ஏற்கிறேன்.”

“இந்த வார்த்தைகளுடன்,” டாக்டர் பின்னால் விவரித்தார், “ஒரு மிகப்பெரிய சுமை என் தோள்களிலிருந்து தூக்கப்படுவதை நான் உணர்ந்தேன். அது ஓர் உண்மை. நான் ஒரு பெரிய ஆறுதலை உணர்ந்தேன்—கர்மவினை மற்றும் மாயை எனும் மலைகளிலிருந்து நான் விடுபட்டிருந்ததைப் போல. ஒரு பெரிய சுமை தூக்கப்பட்டது, மற்றும் அச்சுமை அன்றிலிருந்து என்றென்றைக்குமாக தூக்கப்பட்டது. பல சோதனைகள் நடந்திருந்தன—அவை ஏராளமானவை—ஆனால் அச்சுமை ஒருபோதும் திரும்பி வரவேயில்லை.”

கதையைத் தொடர்ந்தவாறு, டாக்டர் லூயிஸ் கூறினார்:

“குருதேவர் பின்னர் தன் நெற்றியை என் நெற்றியின் மீது படும்படியாக வைத்தார். அவர் என்னை மேலே கண்களை உயர்த்தி புருவமத்தியில் பார்க்கும்படி கூறினார், நான் அவ்வாறே செய்தேன். மேலும் அங்கே நான் ஆன்மீகக் கண்ணின் அபாரமான ஒளியைத் தரிசித்தேன். குருதேவர் எதையும் பார்க்கும்படி என்னிடம் குறிப்பாகக் கூறவில்லை. அவர் ஆலோசனையின் வாயிலாக என்னிடம் எந்தவிதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. நான் பார்த்தது ஓர் இயல்பான வழியில் வந்தது.

“நான் முற்றிலும் உணர்வுப்பூர்வமாக, முற்றிலும் கவனத்துடன் இருந்தேன், மற்றும் நான் ஆன்மீகக் கண்ணைப் பார்த்தேன் ஏனெனில் குருதேவர் என் மன அலைகளை அசைவற்று இருக்கச் செய்து என் சொந்த ஆன்ம உள்ளுணர்வு இதை எனக்குக் காட்ட வழிவகுத்தார். நான் மிகப்பெரிய பொன்னொளியில் மேலும் பார்த்த போது, முழுமையான ஆன்மீகக்கண், என்னகத்தேயுள்ள கிறிஸ்து உணர்வுநிலையை குறித்துக்காட்டும் அல்லது வெளிப்படுத்தும் அதன் உள்பக்க கருநீல மையத்துடனும் இறுதியாக மையத்தில், பேரண்டப் பேருணர்வுநிலையின் சிற்றுருவமாக விளங்கும் சிறு மின்னும் (வெள்ளி) நட்சத்திரத்துடனும், உருவானது.

“நிச்சயமாக, நம் ஒவ்வொருவருள்ளும் இருக்கும் அக மெய்ம்மையை எனக்குக் காட்டக் கூடிய ஒருவரைக் கண்டு கொண்டதால் நான் உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கிவிட்டேன். அவர் ஒரு சாதாரண மனிதர் அல்ல, ஆனால் அத்தகைய ஆன்மீக விஷயங்களைப் பற்றி அறிந்திருப்பதாக உரிமை கொண்டாடும் மிகச் சாதாரணமானவர்களிலிருந்து மிகவும் வேறுபட்ட ஒருவர் என்று நான் தெளிவாக உணர்ந்தேன்.” நாங்கள் சில நிமிட நேரம் பேசினோம் மற்றும் அப்போது அவர் மீண்டும் ஒரு முறை தன் நெற்றியை என் நெற்றியில் படும்படி வைத்து அழுத்தினார்; மற்றும் அப்போது நான் ஆயிரம்-கதிர்கள் (இதழ்கள்) கொண்ட தாமரையின் [மூளையின் மேற்பகுதியில் உள்ள மிக உயர்ந்த ஆன்மீக மையம்] மாபெரும் ஒளியைப் பார்த்தேன்—அதன் பலப்பல வெள்ளி இலைக் கதிர்களுடன், காண முடிகின்ற பொருட்களில் உச்சபட்ச நேர்த்தியான பொருள். ஆயிரம்-கதிர்கள் கொண்ட தாமரையின் அடிப்பகுதியில், அடர்த்தியான ஒளியில் எல்லை வரைகோடுகள் தீட்டப்பட்ட மூளையின் அடிப்பாகத்தில் உள்ள பெரிய தமனிகளின் சுவர்களை என்னால் காண முடிந்தது. மேலும் இதோ, இதோ, நான் பார்த்த போது, தமனிகளுக்கு உள்ளே சிறு ஒளித் துகள்கள், என் கண் முன்னே அவை கடந்து செல்லும் போது, சுவர்களைத் தாக்கியவாறு குதித்து ஓடிக் கொண்டிருந்தன. இவையே இரத்த நுண் அணுவுடலிகள் (blood corpuscles) ஆகும்; அவை ஒவ்வொன்றும் இறைவனின் ஒளி நாடகத்தில் தம் கடமையை ஆற்றிய போது தமது சூட்சும ஒளியின் சிறு பொறிகளை வெளிப்படுத்தின.

“பரமஹம்ஸர் இறைவனின் மாபெரும் ஒளியை எனக்குக் காட்டினார், மற்றும் கூறினார்: ‘நீங்கள் இப்பாதையைப் பற்றிக்கொண்டு வழக்கமாக தியானம் செய்தால், இக்காட்சி எப்போதும் உங்களுடையதாகும்.’ மேலும் அதனால் நான் அவருடைய அறிவுரையைப் பின்பற்றினேன். நான் ஒருபோதும் என் கிரியா யோகப் பயிற்சியைச் செய்யத் தவறியதில்லை. படிப்படியாக இறையொளி வந்தது. நான் என்ன பெற்றேனோ, அது குருதேவரிடமிருந்து நான் பெற்றது. அவர் மாயையின் உறுதியின்மையிலிருந்து மாபெரும் மெய்ம்மையின் ஒளியினுள் என்னை உயர்த்தினார். அந்த அனுபவம் வரும் போது அது இதயத்தை மாற்றுகிறது. அப்போது நாம் மெய்யான மனித சகோதரத்துவத்தையும் இறைவனின் தந்தைமையையும் உணருகிறோம்.“

தாரா மாதா

தாரா மாதா ஒரு மேம்பட்ட கிரியா யோக சீடர் ஆவார்; அவர் பரமஹம்ஸரால் எழுதப்பட்ட“ஒரு யோகியின் சுயசரிதம்” என்ற நூலுக்கும் அவருடைய மற்ற நூல்களுக்கும் பதிப்பாசிரியராக 1924ம் ஆண்டு முதல் 1971ல் அவர் இறக்கும் வரை பணி புரிந்தார். 1924ல் தாரா மாதா பரமஹம்ஸரைச் சந்தித்த குறுகிய காலத்திலேயே, பேரண்ட உணர்வுநிலையின் அனுபவத்தால் அருளப்பட்ட ஒரு “மனிதரைப்” பற்றி பின்வரும் கட்டுரையை அவர் எழுதினார். அவர் அந்த நபரின் அடையாளத்தைக் குறிப்பிடுவதை பணிவாகத் தவிர்த்தாலும் கூட, தாரா மாதா விவரித்த அனுபவங்கள் அவருக்குச் சொந்தமானவையே. (அவருடைய முழுக் கட்டுரையும் ஃபோர் ரன்னர் ஆஃப் எ நியூ ரேஸ் என்ற தலைப்பில் ஒரு கையேடாக வெளியிடப்பட்டுள்ளது, அது ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் -ல் கிடைக்கிறது.)

தெய்வீக ஞானம் ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு மட்டுமே வருகிறது, மற்றும் சராசரி மனிதனுக்கு, அவனுடைய “விசுவாசம்” எடுத்துச் செல்வதை விட அதிகமாக இறைவனுக்கு அருகாமையில் அவனால் செல்ல முடியாது என்று நம்புகின்றனர். இறைத் தொடர்பிற்கு ஒரு திட்டவட்டமான வழி, எல்லா மனிதர்களாலும் எல்லாச் சூழல்களிலும் பயன்படுத்தக் கூடிய ஓர் உத்தி [கிரியா யோகம்] இருக்கிறது என்ற மெய்யுணர்வு, ஆன்ம-அனுபூதி மாணவர்கள் பலருக்கும், அவர்கள் ஒரு புதிய பிறப்பைப் பெற்றிருப்பதாக அவர்கள் உணரும் அளவிற்கு ஒரு கவலை-நீக்கும் அதிர்ச்சியாக வந்திருக்கிறது.

அத்தகைய விஷயம் ஒன்று என் மனத்தில் உள்ளது—ஸெல்ஃப்-ரியலைசேஷன் போதனையைக் கேட்டிருந்தவுடன், பேரண்ட உணர்வுநிலையினுள் அடித்துச் செல்லப்பட்ட ஒரு மனிதர்… .இம்மனிதர் தீவிரமான மத விசுவாசத்தாலும் உத்வேகத்தாலும் ஆட்கொள்ளப்பட்டவர். உலக மறைநூல்களை, குறிப்பாக இந்துமதத்தைச் சார்ந்தவைகளை, நன்கு படித்திருந்தாலும், இந்த அறிவுசார் ஞானம் தரிசாகவும் கல்லைப் போன்றும் இருந்தது என்று அவருக்குத் தெரிந்தது; அது அவருக்குள் இருந்த ஆன்ம-பசியைப் போக்கவில்லை. அவர் ஆன்மீக உணவைப் பற்றி வெறுமனே படிக்க அல்ல, ஆனால் சுவைக்க விரும்பினார். அவருடைய சமநிலையான நாட்களின் கீழே விரக்தி எனும் ஒரு கரிய படுகுழி வாய் பிளந்து நின்றது—அவருக்கு எந்த இறை-தொடர்பு அனுபவமும் கிடைக்காததால், அவர் அதற்கான தகுதி உள்ளவர்தானா என்ற விரக்தி. அவர் முடிவாக சந்தேகப்பட்டார், இறைவனை அல்ல, ஆனால் அவனைப் பற்றிய ஓர் அறிவார்ந்த புரிதலை விட அதிகமாக எப்போதாவது பெற முடியுமா என்ற சாத்தியத்தை. இத்திடநம்பிக்கை அவருடைய வாழ்வின் வேர்களில் சிக்கிக் கொண்டது, மற்றும் அது ஒரு பயனற்ற மற்றும் அர்த்தமற்ற விஷயமாகத் தோன்றச் செய்தது.

மற்ற ஒய் எஸ் எஸ்/ எஸ் ஆர் எஃப் கிரியாவான்களின் அனுபவங்கள்

இறைவனின் மகிமையால், நான் இருபது ஆண்டுகளுக்கு முன்பு கிரியா யோகத்தில் தீட்சை பெற்றேன். காலை 4 மணிக்குப்பிறகு எழுந்து, 6 மணிக்கு குடும்பத்தை நான் எழுப்புமுன் கிடைக்கும் நேரம் நாளின் மிகவும் அமைதியானது ஆகும், மற்றும் நான் குறிப்பாக என் காலைத் தியானத்தை ஆழ்ந்து அனுபவித்து மகிழ்கிறேன். இறைவன் இருக்கும் தூரம் பக்தியின் விகிதத்தைப் பொருத்தது என்ற ஆழ்ந்த கருத்தைப் பகிர நான் விரும்புகிறேன். எத்துணை அதிகம் நான் இறைவனுடன் இருப்பதற்காக என்றும் ஏங்கினேனோ, அத்துணை அதிகம் தெளிவாக அவன் தன்னை எனக்குக் காட்டினான்.

ஓர் ஆண்டிற்கு முன், மூச்சு திடீரென நின்று விட்டது, முதுகுத்தண்டு கீழிருந்து மேல் வரை நேராகியது மற்றும் உடல் முழுவதும் காலத்தில் உறைந்தது, அதேநேரம் மனம் பிரகாசமான ஒளியிலும் முடிவற்ற ஆனந்தத்திலும் மூழ்கியது.

எஸ் ஆர் எஃப் இணைய தளத்தில் உள்ள ஸ்ரீ யோகானந்தரின் மேற்கோள் பற்றிய உண்மையை என்னால் உறுதிப்படுத்த மட்டுமே முடியும்: “இறைவனுடைய இருப்பின் முதற்சான்று விளக்க முடியாத ஓர் அமைதி ஆகும். இது மனிதனால் நினைத்துப்பார்க்க முடியாத ஆனந்தமாக பரிணாம வளர்ச்சியடைகிறது.” என் குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தரையும் எமக்கு வழிகாட்டும் எல்லா ஆன்மீக இருப்புகளையும் போற்றுகிறேன், இறைவனின் மகிமையே போற்றி!

—என். கே., நமீபியா

முதல் ஆறு மாதங்களாக நாள்தோறும் இருமுறை தியானம் செய்து கொண்டிருந்த பிறகு ஒருநாள் மாலை நான் மிகவும் சோர்வாக இருக்கும் காரணத்தால் தியானம் செய்வதற்குப் பதிலாக படுக்கைக்குச் செல்லப் போவதாக என் மனைவியிடம் அறிவித்தேன். தயக்கமே இல்லாமல் என் மனைவி இரண்டு கைகளாலும் என் சட்டைக் கழுத்துப் பட்டையைப் பற்றிக்கொண்டு தன் முகத்தை என் முகத்திற்கு மிக அருகில் கொண்டுவந்து, உறங்குமுன் நான் தியானம் செய்யச் செல்லுமாறு என்னிடம் அறிவித்தாள். பெரிய வியப்பில் ஆழ்ந்து, ஒரு வழிபாட்டு மரபில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக என்னைப் பற்றி எண்ணியவாறு, எஸ் ஆர் எஃப் உடனான என் ஈடுபாட்டை அவள் எதிர்ப்பதாக நான் எண்ணினேன் என்று குறிப்பிட்டேன். அவள் விளக்கினாள், “இந்த ஆறு மாதங்களில், நான் எப்போதும் விரும்பிய கணவனாக நீ ஆகியிருக்கிறாய். நீ முன்பிருந்த வழியில் திரும்பிப் போக நான் உன்னை விடமாட்டேன். போய் தியானம் செய்!”

கற்பனை செய்து பாருங்களேன்! அது 33  ஆண்டுகளுக்கு முந்தையது மற்றும் என் தியானங்கள் (மற்றும் என் மணவாழ்க்கை) மேன்மேலும் இனிமையாகவே ஆகியிருக்கின்றன. குருதேவருடைய போதனை வார்த்தைகள் பற்பல தளங்களில் என் வாழ்விலும் எண்ணத்திலும் மெய்யாக ஆயின என்று கூறுமளவிற்கு நான் இந்தப் பாதையில் நீண்ட காலம் இருந்திருக்கிறேன். எனக்கு ஓராயிரமாண்டுகளோ அல்லது நாளை வரையோ என்ற வார்த்தைகள் நாளுக்கு நாள் குருதேவர் ஆன்மா எல்லோருடைய உண்மையான பெரும் சுயமாக இருக்கிறது என்பது பற்றிய என் அறிவைப் பெருக்க எனக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார் என்று அறியும் ஓர் ஆனந்த வாக்குறுதியாக இருக்கின்றன.

—டி. சி. எச்., டெக்ஸாஸ்

“இறைத் தொடர்பிற்கு ஒரு திட்டவட்டமான வழி, எல்லா மனிதர்களாலும் எல்லாச் சூழல்களிலும் பயன்படுத்தக் கூடிய ஓர் உத்தி இருக்கிறது என்ற மெய்யுணர்வு, ஆன்ம-அனுபூதி மாணவர்கள் பலருக்கும், அவர்கள் ஒரு புதிய பிறப்பைப் பெற்றிருப்பதாக அவர்கள் உணரும் அளவிற்கு ஒரு கவலை-நீக்கும் அதிர்ச்சியாக வந்திருக்கிறது.”

அவருடைய ஆன்மாவின் இந்த இருண்ட இரவினுள் வந்தது ஆன்ம-அனுபூதி எனும் ஒளி. பரமஹம்ஸ யோகானந்தரின் பொதுக்கூட்டச் சொற்பொழிவுகளில் சிலவற்றில் கலந்து கொண்ட பிறகு, மற்றும் வகுப்புப் பாடங்களை எடுத்துக்கொள்ளுமுன், இந்த மனிதர் தன் இதயத்திலிருந்து விரக்தியின் கனத்த சுமை தூக்கப்படுவதை உணர்ந்தார். பொதுச் சொற்பொழிவுகளின் இறுதிக் கூட்டத்திலிருந்து ஓர் இரவில் வீடு திரும்பியவாறு, அவர் தன்னகத்தே ஒரு பெரிய அமைதியை உணர்ந்தார். ஏதேனும் ஆழ்ந்த அடிப்படையான வழியில், அவர் ஒரு மாறுபட்ட மனிதராக ஆனதாக உணர்ந்தார். தான் புதிய மனிதனைப் பார்க்கக்கூடும் என்ற ஓர் உந்துதல் அவரைத் தன் அறையில் இருந்த ஒரு கண்ணாடியில் பார்க்கும்படித் தூண்டியது. அங்கே அவர் கண்டது, தன் சொந்த முகத்தையல்ல, ஆனால் தான் அந்த மாலையில் யாருடைய சொற்பொழிவில் கலந்து கொண்டிருந்தாரோ, அந்த பரமஹம்ஸ யோகானந்தரின் முகத்தை.

ஆனந்த மடைவெள்ளம் அவருடைய ஆன்மாவில் புகுந்தது அவர் விளக்க முடியாத பரவச அலைகளால் மூழ்கடிக்கப்பட்டார். முன்பு வெறும் வார்த்தைகளாக இருந்த பேரின்பம் அமரத்துவம், சாசுவதம், உண்மை, தெய்வீக அன்பு ஆகிய வார்த்தைகள் கண்சிமிட்டும் நேரத்தில் தன் இருப்பின் மையமாக தன் வாழ்வின் சாரமாக ஒரே சாத்தியமாகும் மெய்ம்மையாக ஆனது. இந்த ஆழ்ந்த நித்திய ஆனந்த ஊற்றுகள் ஒவ்வோர் இதயத்திலும் இருந்தன என்ற இந்த அமரத்துவ வாழ்க்கை எல்லா மனிதகுல நிலையாமைக்கும் அடி ஆதாரமாக இருந்தது என்ற இந்த நிலைபேறான எல்லாம்-உள்ளடக்கிய அன்பு படைப்பின் ஒவ்வொரு துகளையும் ஒவ்வோர் அணுவையும் சூழ்ந்து ஆதரித்து வழிகாட்டியது என்ற மெய்யுணர்வு அவர் மீது வெடித்துச் சிதறியதுஅது அவருடைய முழு இருப்பையும் பாராட்டு மற்றும் நன்றியுணர்வு எனும் ஒரு வெள்ளத்தைப் பாயச் செய்தது என்ற ஒரு உத்திரவாதத்தை ஒரு தெய்வீக உறுதிப்பாட்டை அளித்தது.

அவர் அறிந்து கொண்டார்; அவருடைய மனத்தால் மட்டுமல்ல, ஆனால் அவருடைய இதயத்துடனும் ஆன்மாவுடனும், அவருடைய உடலின் ஒவ்வோர் உயிரணுவுடனும் ஒவ்வொரு மூலக்கூறுடனும். இந்தக் கண்டுபிடிப்பின் உயர்ந்த மகிமையும் ஆனந்தமும், அத்தகைய வழிகளின் மூலம் இந்தப் பேரின்பத்தை அடைய முடியுமானால், நூற்றாண்டுகளாக, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, எண்ணற்ற பேரூழிகளாக அனுபவித்த துன்பம் ஒன்றுமே இல்லை என்பதாக, அதை விடவும் குறைந்தது என்பதாக அவர் உணரும் அளவிற்கு அத்துணை பரந்து விரிந்து இருந்தன. பாவம், துன்பம், மரணம்—இவை இப்போது வெறும் வார்த்தைகள் மட்டுமே, பொருளில்லா வார்த்தைகள், ஏழு கடல்களால் விழுங்கப்பட்ட சிறு மீன்களைப் போல ஆனந்தத்தால் விழுங்கப்பட்ட வார்த்தைகள்.

உடல்ரீதியான மாற்றங்கள்

இந்த இறை-ஞான அனுபவத்தின் முதற்காலத்தின் போதும் அதைப் பின் தொடர்ந்த வாரங்களின் போதும், அவருக்கு அகத்தே பல உடலியல் மாற்றங்கள் ஏற்படுவதை அவர் உணர்ந்தார். அதில் மிகவும் முனைப்பானது, மூளையில் மூலக்கூற்றுக் கட்டமைப்பின் ஓர் இடமாற்றம் அல்லது அங்கே புதிய உயிரணு-பகுதியை திறப்பது போன்ற தோற்றம் ஆகும். இடைவிடாமல், பகலிலும் இரவிலும், இந்த வேலை நடந்து கொண்டிருப்பதை அவர் உணர்ந்தார். ஒரு வகையான மின் துளைக் கருவி புதிய உயிரணுக்களாலான எண்ண-கால்வாய்களைக் குடைந்து கொண்டிருப்பது போலத் தோன்றியது. இப்பெருநிகழ்வு, பேரண்ட உணர்வுநிலை மனிதனின் ஓர் இயல்பான திறன் என்ற பக்கே என்பவரது கோட்பாட்டின் வலிமையான சான்று, ஏனெனில் இந்தத் திறனுடன் இணைக்கப்பட்டுள்ள மூளை உயிரணுக்கள், தற்காலத்திய பெரும்பாலான மனிதர்களில் செயலற்ற அல்லது இயங்காத நிலையில் இருந்த போதிலும், மனிதனில் ஏற்கனவே இருக்கின்றன என்று அது சான்றளிக்கிறது.

மற்றொரு முக்கியமான மாற்றம் அவருடைய முதுகுத்தண்டு வடத்தில் உணரப்பட்டது. பல வாரங்களுக்கு முழு முதுகுத்தண்டும் இரும்பாக மாறியது போல் தோன்றியது; அதனால் அவர் இறைவன் மீது தியானம் செய்ய அமர்ந்த போது, அவர் என்றென்றைக்குமாக நங்கூரம் பாய்ச்சப்பட்டது போல உணர்ந்தார், அவரால் ஓரிடத்தில் நிலைபேறாக எந்த இயக்கமோ அல்லது எந்த உடலியக்க உணர்வுநிலையோ இல்லாமல் அமர்ந்திருக்க முடிந்தது. சில நேரங்களில் ஓர் அமானுஷ்ய வலிமை வெள்ளம் அவரைத் தாக்கியது, மற்றும் அவர் முழுப் பிரபஞ்சத்தையும் தன் தோள்களின் மீது சுமந்து கொண்டிருப்பதாக உணர்ந்தார். வாழ்வின் அமிழ்தம், அமரத்துவத் தேன் தன் இரத்தக் குழாய்களில் ஓர் உண்மையான, புலப்படத்தக்க ஆற்றலாக பாய்வதை அவர் உணர்ந்தார். அது உடல் முழுதூடும் ஒரு பாதரசத்தைப் போல அல்லது ஒரு வகையான மின்சார, திரவ ஒளியைப் போலத் தோன்றியது.

தன் இறை-ஞான அனுபவ வாரங்களின் போது, அவர் உணவின் தேவையையோ அல்லது உறக்கத்தின் தேவையையோ உணரவில்லை. ஆனால் அவர் தன் புற வாழ்க்கையை தன் இல்லற முறைகளுக்கேற்ப அனுசரித்துச் சென்றவாறு, தன் குடும்பம் உண்டு உறங்கிய போதெல்லாம் அவரும் அவ்வாறே செய்தார். எல்லா உணவும் அவருக்கு தூய ஆவியைப் போலத் தோன்றியன, மற்றும் உறக்கத்தில் அவர், எல்லா வார்த்தைகளையும் கடந்த, எல்லா விளக்கும் சக்திகளையும் கடந்த ஓர் ஆனந்தத்தில் விழித்தெழுந்தவாறு, “நிலைபேறான கரங்கள்” எனும் தலையணையில் படுத்திருந்தார்.

அவர் முன்பு நீடித்த நீர்க்கோர்ப்பு நோயால் அவதிப்பட்டிருந்தார்; இப்போது அவருடைய உடல் எல்லா சுகவீனத்திலிருந்தும் விடுபட்டது. அவருடைய குடும்பத்தினரும் நண்பர்களும் அவருடைய தோற்றத்திலும் நடத்தையிலும் உள்ள பெரிய மாற்றத்தை உணர்ந்தனர்; அவருடைய முகம் ஒரு கதிர்வீசும் ஒளியால் பிரகாசித்தது; அவருடைய கண்கள் ஆனந்தக் குளங்களாக இருந்தன. அன்னியர்கள் ஒரு வினோதமான இரக்கத்தால் தவிர்க்கமுடியாமல் இழுக்கப்பட்டு, அவரிடம் வந்து பேசினார்கள்; டிராம் வண்டிகளில் குழந்தைகள் தங்கள் வீட்டிற்கு வரும்படிக் கேட்டவாறு அவருடைய மடியில் வந்து அமர்ந்தனர்.

மற்ற ஒய் எஸ் எஸ்/ எஸ் ஆர் எஃப் கிரியாவான்களின் அனுபவங்கள்

நான் கிரியா யோகத்தை 45 ஆண்டுகளாகப் பயிற்சி செய்திருக்கிறேன். 20 ஆண்டுகளுக்கு மேலாக, என் தியானங்கள் உணர்வற்றதாக உலர்ந்து இருந்தன, ஆனால் நான் என் தினசரி-இருமுறை பயிற்சியைத் தொடர்ந்து செய்தேன். இப்போது என் பிந்தைய ஆண்டுகளில், வார்த்தைகளால் விவரிக்கும் திறமைக்கு அப்பால் நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன். சமீபத்தில் கிரியா யோகத்திற்குப் பின் ஆழ்ந்த தியானத்தில், நான் குருதேவரைக் கேட்டேன், “பேரண்டப் பேரமைதி என்றால் என்ன?” அங்கே மௌனம் நிலவியது; நான் தியானத்தில் மேலும் ஆழ்ந்து சென்றேன், மற்றும் படிப்படியாக ஒரு பேரின்ப அமைதி அலை கீழ் முதுகுத்தண்டிலிருந்து உயர்நிலை முதுகுத்தண்டு மையங்களை நோக்கி மேல்நோக்கி ஏறி உடல் முழுவதும் பரவுவதை உணர்ந்தேன்—இதுவரை ஒருபோதும் அறியப்படாத அமைதியின் உணர்வுக்காட்சி. அந்த அமைதி அலையில் இந்த உடலின் எல்லா அணுக்களும் உலகளாவிய தர்மத்தின் எல்லா அதிர்வுகளுடனும் முழுநிறைவான நல்லிணக்கத்தில் ஒத்திசைவாக அதிர்வுற்றுக் கொண்டிருந்தன என்று உணர்ந்தேன். இந்தப் பேரின்ப அமைதி எனும் ஒளியில் உடல் உருகியோடிக் கொண்டிருப்பதாக மற்றும் என் ஆன்மா அன்பெனும் அலைகளில் மேலேறிக்கொண்டும் விரிவாகிக்கொண்டும் இருப்பதாக நான் உணர்ந்தேன். எப்போதையும் விட ஆழமான தியானத்தில் என் ஆன்மா இன்னும் உயர்ந்த அளவிலான பேரின்பமய அமைதிக்குள், அதிர்வற்ற, முழுநிறைவான, இனிமையான நிலையமைதிக்குள் நுழைந்தது, மற்றும் குறுகிய கணநேரத்திற்கு நான் பெருவீட்டில் இருந்தேன் என்று நான் அறிந்தேன். இந்த அனுபவத்தில், “பேரண்டப் பேரமைதி என்றால் என்ன?” என்ற என் கேள்விக்கு என் குருதேவரின் பதிலை நான் அறிந்து கொண்டேன்.

— எஸ். பி. ஜார்ஜியா

அவரைப் பொருத்தவரை முழுப் பிரபஞ்சமும் அன்பெனும் கடலில் குளித்தது; அவர் தனக்குத்தானே பலமுறை சொல்லிக் கொண்டார், “முடிவாக அன்பு என்றால் என்ன என்று இப்போது எனக்குத் தெரியும்! இது மிக உன்னத மனித அன்பையும் நாணமுறச் செய்யும் இறைவனின் அன்பு. நிலைபேறான அன்பு, வெல்லமுடியாத அன்பு, எல்லோரையும்-திருப்திப்படுத்தும் அன்பு!” பேரன்பு இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கி ஆதரிக்கிறது என்றும், படைக்கப்பட்ட எல்லாப் பொருட்களும், மனிதனோ அல்லது மனிதனை விடக் கீழ்நிலையானவையோ, இந்தப் பேரன்பை, வாழ்வின் சாரமாகவே விளங்கும் இந்த அமரத்துவப் பேரின்பத்தைக் கண்டுபிடிக்க விதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் எல்லா சாத்தியத்திற்கும் அல்லது சந்தேக எண்ணத்திற்கும் அப்பாற்பட்டு அவர் அறிந்தார். எல்லா விஷயங்களையும், எல்லா எண்ணங்களையும் தன்னிடம் இணைத்தவாறு, தன் மனம் விரிவடைவதை, தன் புரிதல் வெளிச்சென்று, முடிவில்லாமல் விரிந்து, வளர்ந்து, பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றையும் தொடுவதை, அவர் உணர்ந்தார். அவர் “எங்கும் மையமாக, சுற்றெல்லை எங்குமில்லாது” இருந்தார்.

இயற்கையின் அணு-நடனம்

அவர் வெளிவிட்ட மூச்சுக் காற்று தோழமைமிக்கதாக, நெருக்கமானதாக, வாழ்வைப் பற்றிய உணர்வுள்ளதாக இருந்தது. உலகம் முழுவதும் அவருக்கு “வீடு” என்றும், அவரால் எந்த இடத்தையும் இனிமேல் வினோதமானதாகவோ அல்லது அன்னியமானதாகவோ ஒருபோதும் உணர முடியாது என்றும்; ஒருபோதும் கண்டிராத மலைகள், கடல், தொலைதூர நாடுகள் தன் பிள்ளைப் பருவ வீட்டைப் போலவே தனக்குச் சொந்தமானதாக இருக்கும் என்றும் அவர் உணர்ந்தார். அவர் பார்த்த இடமெல்லாம், இயற்கையின் “அணு-நடனத்தை”; காற்று எண்ணிலடங்கா நகரும் ஒளி ஊசிகளால் நிறைந்திருந்ததை அவர் பார்த்தார்.

இந்த வாரங்களின் போது அவர் தன் தினசரிக் கடமைகளை வழக்கம் போல ஆனால் இதுவரை அறிந்திராத திறனுடனும் வேகத்துடனும் செய்தார். டைப் அடிக்கப்பட்ட காகிதங்கள் பிழையின்றி வழக்கமான நேரத்தில் நான்கில் ஒருபங்கு நேரத்திலேயே முடிக்கப்பட்டு அவருடைய இயந்திரத்திலிருந்து பறந்தன. சோர்வு அவருக்குத் தெரியாததாக இருந்தது அவருடைய வேலை மகிழ்ச்சியாகவும் கவலையில்லாமலும் குழந்தையின் விளையாட்டைப் போலத் தோன்றியது. தன் வாடிக்கையாளர்களுடன் நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ பேசியவாறு அவருடைய அக ஆனந்தம் ஒவ்வொரு செயலையும் சூழலையும் ஒரு பேரண்ட முக்கியத்துவத்துடன் சூழ்ந்தது ஏனெனில் அவருக்கு இந்தத் தொலைபேசி இந்த மேஜை இந்தக் குரல் இறைவனாக இறைவன் தன்னையே தன் மற்றொரு கவர்ச்சியூட்டும் மாறுவேடத்தில் உருவெடுத்ததாக இருந்தது.

தன் வேலையின் நடுவில், இந்த நம்பமுடியாத, சொல்லொணா மகிழ்ச்சியை அவருக்கு அளித்திருந்த இறைவனின் தாராள குணத்தால் அவர் திடீரெனப் புதிதாக உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கிவிடுவார். அவருடைய மூச்சு சில நேரங்களில் முழுவதும் நின்றுவிடும்; அவர் உணர்ந்த பிரமிப்புடன் உள்ளும் புறமும் ஒரு முழுமையான அசைவற்ற நிலை சேர்ந்து வரும். அவருடைய உணர்வுநிலை முழுவதற்கும் ஆதாரமாக, அளவிடமுடியாத மற்றும் சொல்லமுடியாத நன்றியுணர்வு; மற்றவர்களுக்குள்ளும் இருக்கும் ஆனந்தத்தை அவர்கள் அறிய வேண்டும் என்ற ஓர் ஏக்கம்; ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, உலகில் எல்லாம் நன்றாக உள்ளது என்ற, ஒவ்வொன்றும் பேரண்ட உணர்வுநிலை எனும், அமரத்துவப் பேரின்பம் எனும் இலக்கிற்கு வழிநடத்திச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்ற எல்லா மனிதப் புரிதலையும் கடந்த ஒரு தெய்வீக ஞானம், இருந்தது. இந்த ஞான ஒளி அனுபவ நிலை அந்த மனிதரிடம் சுமார் இரண்டு மாதங்களாக இருந்தது மற்றும் அதன்பின் படிப்படியாகத் தேய்ந்து விட்டது. அது தன் தூய்மையான முழு ஆற்றலுடன் ஒருபோதும் திரும்பவில்லை; இருப்பினும் சில அம்சங்கள், குறிப்பாக தெய்வீக அமைதி மற்றும் ஆனந்த உணர்வு, அவர் ஸெல்ஃப்-ரியலைசேஷன் தியான உத்திகளைப் பயிற்சி செய்யும் போதெல்லாம் திரும்பி வந்தன.

“யோகப் பயிற்சி இறைவனின் மகிமையை மிக உயர்ந்த வழியில் கொண்டு வருகிறது”

ஸ்ரீ ஞானமாதா பரமஹம்ஸ யோகானந்தரின் மிகவும் மேம்பட்ட கிரியா யோக சீடர்களில் ஒருவர்; பக்தர்களுக்கான அவருடைய விவேகமிக்க மற்றும் அன்பார்ந்த ஆலோசனை காட் அலோன்: தி லைஃப் அன்ட் லெட்டர்ஸ் ஆஃப் எ செய்ன்ட் என்ற புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளது. 1951ல் அவர் இறந்த பிறகு, ஞானமாதா முழுமையான முக்தியை அடைந்து விட்டார் என்று குருதேவர் தன் மற்ற சீடர்களுக்கு கூறினார். பரமஹம்ஸர் விவரித்தார்:

[அவருடைய மரணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்] அவர் என்னிடம் நிர்விகல்ப சமாதியை வேண்டினார்; ஆனால் நான் கூறினேன், “ உங்களுக்கு அது தேவையில்லை. நான் உங்களை இறைவனில் கண்டேன். நீங்கள் அந்த மாளிகையை அடையும் போது, இனிமேலும் நீங்கள் தோட்டத்தில் செல்ல விரும்புவதேன்?”…

அவர் தன் சொந்தக் கர்மவினையை கடந்த வாழ்விலும் இந்த வாழ்விலும் முழுமையாகத் தீர்த்து விட்டார், மற்றும் அவர் தெய்வத்தந்தையின் கருணையால் இந்த வாழ்வில் நிலைபேறான விடுதலைக்கு உயர்நிலைப் பரவசமின்றியே இழுக்கப்பட்டார். இதற்கு ஞானமாதா மிக உயர்ந்த பரவசத்தைப் (நிர்விகல்ப சமாதியை) பெறவில்லை என்று பொருளல்ல. அவர் தன் கடந்த வாழ்வில் அதைப் பெற்றார். ஆனால்—அவருடைய அறையில் உள்ள சிறிய பதாகை “இறைவன் மட்டுமே” என்று சொல்வதைப் போலவே—இந்த வாழ்வில் இறைவனின் கருணை ஒன்றே அவருடைய வலியால்-கலக்கமுறாத வெற்றிகரமான ஆன்மாவை சர்வவியாபக முக்திக்கு தூக்கிச் சென்றது…

இடைவிடாத யோகப் பயிற்சி மட்டுமே இறைவனின் கருணையை மிக உயர்ந்த வழியில் கொண்டுவருகிறது என்பதை எல்லாப் பக்தர்களும் நினைவில் கொள்ள வேண்டும், ஏனெனில் கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கூறினார்: “அர்ஜுனா, ஞானத்தின், அல்லது கர்மத்தின், அல்லது வேறு எந்த பாதையையும் விட மிக உயர்ந்தது யோகப் பாதையாகும். ஆகவே, நீ ஒரு யோகியாக இரு, அர்ஜுனா!”

இதைப் பகிர