இந்த இணக்கமில்லா காலங்களில் ஆன்மீக நல்லிணக்கத்தை ஊக்குவித்தல்

Healing-Technique-from-Paramahansa-Yogananda-led-by-Swami-Chidananda-giri

ஸ்வாமி சிதானந்த கிரியிடமிருந்து செய்தி

[2018 இல் ஸ்வாமி சிதானந்தகிரி வெளியிட்ட கடிதத்தைத்  தழுவி எழுதப்ப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டிருந்தாலும், அடிப்படைச் செய்தி இன்று மேலும் முக்கியமானதாயிருக்கிறது. – பிரிவினை மற்றும் இடர்பாடுகளைக் கடக்க நாம் மேற்கொள்ளக் கூடிய மனப்பான்மைகள் மற்றும் திறன்களை சுட்டிக்காட்டுகிறது.]

 

அன்பர்களே,

எனது தினசரி தியானங்களில் உலகெங்கிலும் உள்ள நமது குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தரின் இனிய ஆன்மீகக் குடும்பத்தை, நினைத்துப் பார்க்கிறேன், மேலும் இறைவனும் குருதேவரும் உங்கள் வாழ்க்கையையும் ஆன்மீக முயற்சிகளையும் வழிநடத்தி, அவர்களின் அன்பிலும் ஞானத்திலும் ஆழ்ந்த, அசைக்க முடியாத பாதுகாப்பை உணர உங்களுக்கு உதவுமாறு பிரார்த்தனை செய்கிறேன். இறைவன், அவனுடைய சாசுவத மகிழ்ச்சிக்கான தார்மீக நெறிகளுடன் கூட, அமைதி, நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்புடன், வாழவேண்டும் என உத்தேசித்திருந்த உலக குடும்பத்தின், பெருகிய மாறுபட்ட பிரிவுகளிடையே, தற்போது சமூகத்தில் பரப்பப்படும் பிரிவினை மற்றும் சீர்கேடுகள் குறித்து உலகெங்கிலும் உள்ள பல பக்தர்கள் மிகவும் கவலைப்படுகிறார்கள் என்பதை நான் அறிவேன். இருமை நிறைந்த இந்த உலகம் எப்போதும் ஒளிக்கும் இருளுக்கும் இடையேயான போர்க்களமாகவே இருந்து வருகிறது; ஆனால், இணையம் மற்றும் பிற மக்கள் தொடர்பு ஊடகங்கள் மூலம் நமது உள் மற்றும் வெளிப்புறச் சூழல்களில் ஊடுருவிச் செல்லும் அதர்மம் மற்றும் எதிர்மறையின் சரமாரியான தாக்கங்கள் தொடர்ந்து வெளிப்படும் இந்த நம் யுகத்தில், இறைவனின் சாசுவத சத்தியங்களான நன்மை மற்றும் தார்மீக மதிப்புகள் மீதான தாக்குதல், உணரக்கூடிய வகையில் உயர்ந்துவிட்டதாக, தோன்றலாம்.

ஆனால் எதிர்காலத்தைப் பற்றிய மனச்சோர்வுக்கு இடம்தர வேண்டியதில்லை. சமூக ஊடகங்கள் ஒரு நபரின் முரண்பாடான கருத்துக்களை மிகைப்படுத்தவும் , அதன் மூலம் அந்த நபரின் இருப்பிடத்திற்கு அப்பால் எண்ணற்ற மற்றவர்களைப் பாதிக்கவும் முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, சத்தியம், இனிமை, நன்மை, ஞானம், கருணை -ஆகிய ஆன்மாவின்- இறைவனின் பிரதிபிம்பம் –அனைத்து தெய்வ குணங்களின் தாக்கத்தை அதிகரிக்க, அதற்கு சமமான அல்லது மேலும் அதிக ஆற்றல் ஒவ்வொரு மனிதனிலும் உள்ளது. இது எப்படி? ஏனென்றால், நன்மையின் எல்லையற்ற ஆதாரமான இறைவனுடனான இணக்கம் மற்றும் கிரியா யோக தியானத்தின் மூலம் மிகுந்த ஆற்றலுடன் கவனம் குவிக்கும் ஒளிபரப்பு நிலையமாகிய ஒவ்வொரு இதயம் மற்றும் மனதின் மூலமாக, எந்த டிஜிட்டல் தகவல் தொடர்புத் தொழில் நுட்பத்தையும் விட விரிந்து பரவக் கூடியது, உலகச் சுற்றுச்சூழலின் அணுக்களிலும் மற்றும் அனைத்து உணர்வுள்ள உயிரினங்களின் உணர்வுநிலை அல்லது ஆழ் உணர்வுநிலைக்குள் செலுத்தப்படும் அதிர்வு ஆற்றலின் கதிர்வீச்சாகும். தினசரி தியானம் மற்றும் நம் உலகளாவிய பிரார்த்தனை குழுவில் பங்கேற்பதன் மூலம் நீங்கள் அதிக நன்மை செய்ய முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

ஸெல்ஃப் ரியலைஸேஷன் ஃபெலோஷிப் / யோகதா சத்சங்க சொஸைடி மற்றும் கிரியா யோகப் பாதைக்கு ஈர்க்கப்படும் ஒளி மற்றும் சத்தியத்தின் தெய்வீகப் போர்வீரன், பூவுலகில் ஆன்மீக நல்லிணக்கத்தை (தர்மத்தை) மேம்படுத்துவதற்கு புற மற்றும் அக வழிகளைப் பயன்படுத்தலாம். உங்களையும், உங்கள் உணர்வில் உள்ள எந்தவொரு அன்பற்ற அகந்தை-குணங்களையும் மாற்றிக்கொள்வதற்கு முதல் முன்னுரிமை கொடுக்கும்போது , இறைத்தன்மை அற்றவையுடன் ஒத்துழைக்க மறுக்கும் ஒரு கடமையை சூழ்நிலைகள் உங்கள் முன் வைக்குமாயின், அவ்வாறு செய்து வெளிப்புற சாட்சியாக இருப்பதற்கு ஒருபோதும் அஞ்ச வேண்டாம். எவ்வாறாயினும், பகைமையும் பணிவின்மையும் நீங்கள் எதிர்க்கும் பக்கத்திற்கு விரைவில் உங்களைத் திசைதிருப்பக்கூடும் என்பதையும் மேலும் ஆன்மீகமும் சத்தியமும் அரசியல் சார்புகளால் வரையறுக்கப்படவில்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

உலக நிகழ்வுகளில் வெளிப்படும் நாடகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் கூட்டு கர்மவினை – மற்ற யுகங்கள் போலவே நமது தற்போதைய யுகத்திலும் – வரையறுக்கப்பட்ட மனித அறிவால் எப்போதும் புரிந்து கொள்ளப்படுவதில்லை. இறுதியில், ஒரு தேசத்தின் ஆரோக்கியமும் நல்லிணக்கமும் அந்தச் சமூகத்தில் நிலவும் நன்மை தீமையின் கலவையினாலும், அதன் கூட்டு கர்மவினைகளாலும் ஏற்படுகிறது. நமது காலத்தின் தேவை – மற்றும் வேறு எந்த காலத்திலும் – தனிமனிதர்கள் பெருந்திரளானவர்கள் தங்கள் இதயங்களில் இருந்து இறைச் சிந்தனையற்றநிலை, ஒழுக்கக்கேடு, அதர்ம வாழ்வு போன்ற தீமைகளை அகற்ற வேண்டும். அனைத்து சமயங்களுக்கும் பொதுவான தெய்வீக உண்மைகளின் சில கோட்பாடுகளை-இவற்றின் சாரம் எஸ் ஆர் எஃப்/ஒய் எஸ் எஸ் போதனைகளில் வழங்கப்பட்டுள்ளது- ஒவ்வொரு நாளும் பயிற்சி செய்வதே இந்த இருண்ட காலங்களுக்கு ஒளியை வழங்குவதற்கான மிகச் சிறந்த வழி. இது உங்கள் உணர்வுநிலையை மேம்படுத்தவும், இறைவனின் மகிமையின் வலுவான சக்தியால் உங்கள் எண்ணங்களையும் செயல்களையும் ஊக்குவிக்கவும் நீங்கள் எடுக்கக்கூடிய செயலூக்கமான முன் முயற்சியாகும். தினமும் காலையில், பாடங்களில் இருந்து , எடுத்துக்காட்டாக, ஆன்மீக நாட்குறிப்பில் இருந்து சிறிது படித்து – அல்லது பகவத் கீதை அல்லது பைபிளில் இருந்து விரும்பும் மேற்கோளைத் தேர்ந்தெடுங்கள் – அதை அன்றைய உங்கள் அடிப்படை கருத்தாக்கிக் கொள்ளுங்கள். செய்திகளில் நீங்கள் கேள்விப்படும் ஒன்று உங்கள் உள் அமைதியையும் சமநிலையையும் சீர்குலைக்கும் போது, அந்த கருத்தை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளுங்கள், மேலும் அதை உறுதிப்படுத்தி வெளிப்படுத்த, ஈடுபடுத்தும் இச்சாசக்தியின் மூலம் அந்த எதிர்மறையை பயனற்றதாக்க நீங்கள் உதவுகிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். குருதேவரின் அசாத்தியமான, நேர்மறை உணர்வின் முன்மாதிரியைப் பின்பற்றி, உலகிற்குக் கொண்டு வர அவர் நியமிக்கப்பட்ட, குறிப்பாக நாம் கடந்து வரும் இந்த காலங்களுக்கு, அந்த புனித கிரியா யோக இறை-தொடர்பு விஞ்ஞானத்தை பயிற்சி செய்யும்போது, நீங்களே மெய்ப்பிப்பீர்கள், இறைவன் மற்றும் இந்த உலகத்தை காத்துப் பேணும் மகத்தான ஆசான்களின் உதவியால், அறியாமை காரணமாக எழும் அச்சங்கள் மற்றும் வெறுப்புகளின் பிணைப்புகளிலிருந்து மனிதகுலம் விடுபட, இறைவனின் இணக்கம் மற்றும் சமநிலையை உருவாக்கும் அன்பு மற்றும் பேரின்ப உணர்வுடன் இசைவித்துப் போக, உலகத்திற்கு நாம் உதவ முடியும் என்பதை.

நீங்கள் சந்திக்கும் அனைத்து நபர்களிடமும் நன்மை மற்றும் ஆன்மீக உணர்வுநிலையின் வெளிப்பாடுகளைத் தேடுங்கள் மற்றும் கவனம் செலுத்துங்கள் – உங்கள் சொந்த கருத்துடன் பொருந்தாத கருத்துடையவர்களிடம் கூட – இந்த வழியில் கவனம் செலுத்துவது இவ்வுலகில் இறைவனின் இருப்பின் வெளிப்பாட்டை அதிகரிக்கிறது என்பதை நீங்கள் காண்பீர்கள். பகவான் பகவத் கீதையில் அறிவிக்கிறார்: “நான் எல்லா உயிர்களின் இதயத்திலும் அமர்ந்திருக்கிறேன்.”மற்றவர்களை ஆன்மாக்களாகப் பார்க்கவும், அந்த மரியாதை மற்றும் பாராட்டு மனப்பான்மை காரணமாக, நீங்கள் நுட்பமாக அவர்களிடமிருந்தும் – உங்களிடமிருந்தும் – ஆன்மா குணங்களின் அதிக வெளிப்படு திறன்களைப் பெறுவீர்கள்.

உலகத்திலோ அல்லது உங்கள் சொந்த வாழ்க்கையிலோ என்ன தவறு இருக்கிறது என்பதைப் பற்றி நீங்கள் அடிக்கடி சிந்திக்கவும், படிக்கவும், பேசுவதுமாக இருந்தால், உங்கள் கவனத்தை மாற்ற முயற்சிக்கவும். அந்த நேரத்தையும் சக்தியையும் நல்ல எண்ணங்களைச் சிந்திக்கவும், பிரார்த்தனை செய்யவும், சேவை மற்றும் பெருந்தகைமையுடன் நல்ல செயல்களைச் செய்யவும், கருணை, புரிதல் மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நபராக மாறுவதற்குப் பயன்படுத்தவும். அவ்வாறு செய்வதன் மூலம், உங்கள் உணர்வுநிலையையும் மற்றவர்களின் உணர்வுநிலையையும் உயர்த்துவீர்கள். நீங்கள் விசுவாசத்துடன் தியானித்து, அனைத்து எண்ணங்களும் அசைவற்று இருக்கும் உங்கள் அக ஆழத்தில் உள்ள புனித சரணாலயத்திற்குள் நுழையும்போது, ஒவ்வொரு ஆன்மாவையும் நேசிக்கும் இறைவனின் அன்பை நீங்கள் அதிகமாக உணர்வீர்கள், மேலும் அந்த அன்பை மற்றவர்களுக்கு வழங்க முடியும். உங்கள் நல்வாழ்விற்கான, உங்களைச் சுற்றியுள்ளவர்கள் மற்றும் மனிதகுலத்திற்கான உங்கள் ஆன்மீக முயற்சிகளின் நேர்மறை விளைவை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். குருதேவர் கூறினார், “உடல், மனம் மற்றும் ஆன்மாவை இறைவனுடன் ஒத்திசைவித்து, ஒவ்வொரு வகையிலும் தன்னை மேம்படுத்திக் கொள்ள முயற்சிப்பவர், தனது சொந்த வாழ்க்கையில் மட்டுமல்ல, அவரது குடும்பம், சுற்றுப்புறம், தேசம் மற்றும் உலகில் நேர்மறை கர்மவினைகளை உருவாக்குகிறார்.”

உங்கள் வாழ்வில் அவனுடைய ஒளியையும் அன்பையும் வெளிப்படுத்த நீங்கள் முயற்சிக்கும் போது இறைவன் உங்களை எப்போதும் ஆசீர்வதிப்பானாக,

ஸ்வாமி சிதானந்த கிரி

இதைப் பகிர