
இந்த ஆண்டு நன்றிநவிலும் நாளுக்கு முந்தைய வாரங்களில் இந்தியாவிற்கு மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட பயணத்தை மேற்கொண்ட பின் என் இதயம், குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தரால் நமது ஆன்மீகத் தாயகத்திலிருந்து கொண்டு வரப்பட்ட வாழ்க்கையை-மாற்றும் போதனைகளுக்காக சிறப்புமிக்க நன்றி உணர்ச்சியினால் நிரம்பியிருக்கிறது; மற்றும் அன்றாட வாழ்க்கையில் அந்த இலட்சியங்களை அத்துணை அழகாக வெளிப்படுத்தும் உலகெங்கிலும் உள்ள அவரது நேசத்திற்குரிய தெய்வீக பக்தர்களின் குடும்பமாகிய உங்கள் அனைவருக்காகவும்.
பல வருடங்களுக்கு முன்பு குருதேவர் முதன்முதலில் அமெரிக்காவுக்கு வந்தபோது, குடும்பத்திற்கு, நண்பர்களுக்கு, மற்றும்—எல்லாவற்றிற்கும் மேலாக—நம் வாழ்க்கையில் அனைத்து நல்ல விஷயங்களுக்கும் இறுதி ஆதாரமாக இருக்கும் இறைவனுக்கு செலுத்தப்படும் நன்றியுணர்வின் வெளிப்பாட்டிற்காக ஒரு தேசிய விடுமுறை ஒதுக்கப்பட்டிருப்பதைக் கண்டு அவர் மகிழ்ச்சியடைந்தார். நமது குருதேவர் நன்றி தெரிவிக்கும் விடுமுறையை ஆன்மீக அனுசரிப்பாக ஏற்றுக்கொண்டது அவரது ஆசிரமங்களில் ஓர் ஆனந்தமான பாரம்பரியமாக விரைவில் மாறியது. அவர் வகுத்த உதாரணத்திலிருந்து, நமது உணர்வுநிலையை உயர்த்துவதற்கும் நிரந்தரமாக மாற்றுவதற்கும் நன்றியுணர்வின் உள்முகப் பயிற்சி எவ்வாறு ஒரு சக்திவாய்ந்த உத்தியாக மாற முடியும் என்பதை நாம் அறிகிறோம்.
நன்றி-நவிலும் நாள், இறைவனின் சர்வ வியாபகத்திற்கு நமது இதயங்களையும் மனங்களையும் புதிதாகத் திறக்க ஒரு தெய்வீக வாய்ப்பைக் கொண்டுவருகிறது — இயற்கையில் அவனது புதிரான கைவினைக்குப் பின்னால், ஒவ்வோர் ஆன்மாவிலும் அவன் தன்னை ஒரு தனித்துவமான பிரதிபலிப்பாக உருவாக்கியுள்ளான், மேலும் நல்ல மற்றும் அழகான எல்லாவற்றிலும் கூட. குருதேவர் நம்மிடம் கூறியது போல், “இறைவன் தம்முடைய சிருஷ்டியிலிருந்து விலகி இருக்கவில்லை; அவன் எப்போதும் நம்முடன் இருக்கிறான்….முழுப் பிரபஞ்சமும் அவனது இருப்பினால் அதிர்வுறுகிறது.” தெய்வீகம் நமக்குள்ளேயும் இருக்கிறது என்பதையும் அவன் நமக்கு நினைவூட்டுகிறான். அவனின்றி நம்மால் சிந்திக்கவோ உணரவோ அல்லது ஒரு சுவாசத்தை இழுக்கவோ கூட முடியவில்லை. ஆயினும் அன்றாட வாழ்க்கையின் அழுத்தங்களுக்கு மத்தியில், நமது பரம கொடையாளனை நம்மால் எவ்வளவு எளிதாக மறந்து, அவனது கொடைகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடிகிறது. நன்றியுள்ள இதயத்தை வளர்த்துக் கொள்வதன் மூலம்தான், மாயத்திரைக்கு அப்பால் நம்மால் பார்க்க முடிகிறது, மேலும் அவனது பல தோற்றங்களுக்குப் பின்னால் அவனை உணர முடிகிறது. நன்றியுணர்வுமிக்க மற்றும் பாராட்டு எண்ணங்கள் — சிறிய விஷயங்களுக்கும் கூட — நம்மை அவனிடம் நெருக்கமாக ஈர்த்தவாறு, அவனது அருளாசிகள் நம் வாழ்வில் தடையின்றிப் பாயும் வகையில் கால்வாயை அகலத் திறந்தவாறு, நம் இதயங்களை ஒளிரச் செய்கிறது, மற்றும் உணர்வுநிலையை உயர்த்துகிறது.
இறைவன் நம் நன்றியை எதிர்பார்க்காமல் நமக்கு கொடுக்கும் அதே வேளையில், நம்முடைய சொந்த விருப்பத்தின் பேரில் நாம் நமது பாராட்டை வெளிப்படுத்தும் போது, அவனுடனான நமது உறவு எவ்வளவு இனிமையாகவும் தனிப்பட்டதாகவும் மாறுகிறது. அவன் மீதான நமது நம்பிக்கை வளர்கிறது, மேலும் நாம் அவனது மிகுந்த அக்கறையுடன் கூடிய இருப்பின் மெய்ம்மையால் அதிர்வுறும் வேறு உலகத்தைக் காணத் தொடங்குகிறோம். ஆனந்தத்தையும் பாதுகாப்பையும் அவனுடைய பரிசுகளில் மட்டுமல்ல, அளிப்பவனின் அன்பிலும் காண்கிறோம். அவனுடைய ஞானத்தில் மற்றும் என்றும்-இருக்கும் ஆதரவில் நம்பிக்கை வைத்தவாறு, சவாலான சூழ்நிலைகளில் கூட ஆழ்ந்த புரிதல் மற்றும் ஆன்மீக வலிமை எனும் ஒளிந்துள்ள இரத்தினங்களை நம்மால் கண்டுபிடிக்க முடிகிறது.
நன்றியுணர்வோடு வாழும் திறன் ஆசைகளின் நிறைவேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. வெளிப்புற சூழ்நிலைகள் எப்படியிருப்பினும், இறைவனின் சாசுவத அன்பு என்ற ஓர் அருளாசியை நாம் எப்போதுமே பெற்றிருப்போம் என்று அறிந்தவாறு ஒவ்வொரு நாளும் நம்மால் செய்ய முடிகின்ற ஒரு விருப்பத் தேர்வு தான் அது. தியானக் கோவிலில் அவனுடைய இதமான அமைதி உங்கள் இருப்பில் ஊடுருவி, அவனுடைய தெய்வீக அன்பு உங்கள் விரிவடையும் இதயத்தை நிரப்பும் போது அந்த உண்மையை மிகவும் ஆழமாக அனுபவிக்க முடியும். உங்களுடைய சொந்த வாழ்க்கையில், அந்தப் அன்பளிப்பின் மாற்றும் சக்திக்காக இறைவன் மேலுள்ள உங்கள் நன்றியுணர்வு உங்கள் மூலம் மற்றவர்களுக்கு கருணையாகவும் சேவையாகவும் நிரம்பி வழியட்டும். இதனால் அவனுடைய அன்பான அக்கறையை அவர்களும் உணரலாம்.
உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட நன்றிநவிலும் நாள் வாழ்த்துகள்,