சிந்தனைக்கும் அறிவிற்கும் அப்பால்: ஆன்ம உள்ளுணர்வு எனும் வரம்பற்ற நுண்ணறிவுத்திறன்

பரமஹம்ஸ யோகானந்தரின் ஞான-மரபிலிருந்து

எல்லோருக்கும் உள்ளுணர்வு உள்ளது, உங்களுக்கும் கூட

இறைவனின் குழந்தைகள் அனைவரும் மிக உயர்ந்த அறிவுத்திறனைக் கொண்டுள்ளனர்: உள்ளுணர்வு, பரம்பொருளின் அனைத்தையும் அறிந்த ஆன்ம ஞானம்.
உள்ளுணர்வு என்பது ஆன்மாவால் மரபுரிமையாகப் பெறப்பட்ட பரம்பொருளின் சக்தி, இதன் மூலம் வேறு எந்தப் புலன் எனும் ஊடகமும் இல்லாமல் உண்மையை நேரடியாக உணர முடியும்.

உள்ளுணர்வு என்பது ஆன்ம வழிகாட்டுதல், மனிதனின் மனம் அமைதியாக இருக்கும் சந்தர்ப்பங்களில் இயற்கையாகவே தோன்றுவது. ஒரு விளக்கமுடியாத ஆனால் சரியாக “யூகம்” செய்திருக்கும் அல்லது தன் எண்ணங்களை மற்றொரு நபருக்கு துல்லியமாகக் கடத்தியிருக்கும் அனுபவத்தை கிட்டதட்ட எல்லோரும் பெற்றிருக்கின்றனர்.

ஒவ்வொருவருக்கும் சிந்தனா சக்தி இருப்பதால், உள்ளுணர்வுத் திறனும் இருக்கிறது. சிந்தனை பேணி வளர்க்கப்பட முடியும் என்பதால், உள்ளுணர்வும் வளர்க்கப்பட முடியும். உள்ளுணர்வில் நாம் மகா மெய்ம்மையுடன் இசைந்திருக்கிறோம்—பேரின்ப உலகுடன், “வேற்றுமையில் ஒற்றுமையுடன்,” ஆன்மீக உலகை ஒழுங்குபடுத்தும் அக விதிமுறைகளுடன், இறைவனுடன்.

…ஆனால் அது வளர்க்கப்பட வேண்டும்:

ஒவ்வொரு நபரின் வாழ்விலும், இரண்டு அறிவாற்றல்கள் பிறந்ததிலிருந்து இயங்குகின்றன: (1) மனிதப் பகுத்தறிவுத் திறன்; அது புலனுணர்வு, கண்ணோட்டம், கருத்துருவாக்கம், மற்றும் இன்ன பிற துணைக்கோள்களுடன் சேர்ந்து இயங்குகிறது; (2) உள்ளுணர்வுத் திறன்.

முந்தையது சமூகப் பழக்கவழக்க மரபுகளின் மற்றும் இடைவினைகளின் வாயிலாக வளர்க்கப்படுகிறது. பிந்தையது முறையான வழிகாட்டலும் பயிற்றுவிக்கும் வழிமுறைகளும் இல்லாமல் பண்படுத்தப்படாமல், வளர்க்கப்படாமல் இருக்கிறது.

ஒருவருடைய உள்ளுணர்வு மேம்படாத நிலையில் இருக்கும் வரை, அவர் பெருமளவு நிலையற்ற அறிவாற்றலின் வரையறைக்குட்பட்ட புரிதலால் வழிகாட்டப்படுகிறார்; உள்ளுணர்வு ஞானத்தின் தூண்டுதல்கள் அவ்வப்போது மட்டுமே கிடைக்கப் பெறுகிறார். இவ்வாறு அவர் சில நற்செயல்களில் ஈடுபடுகிறார், ஆனால் பல தவறான செயல்களிலும் ஈடுபட்டு பல கெட்ட பழக்கங்களுக்கு ஆட்படுகிறார். அவர் காரண-காரிய விதிமுறையின், அதாவது கர்மவினையின் இயக்கத்தின் வாயிலாக, அடிக்கடி துன்பத்திற்கு இட்டுச் செல்லும் தனது சொந்த தானே-உருவாக்கிய ஊழ்வினையை திக்கற்று தான் பின்பற்றக் காண்கிறார்.

செயற்பாடு இறைவனின் அக, உள்ளுணர்வு இயக்கத்தால் வழிகாட்டப்படும் போது, ஒரு வாழ்க்கை வெற்றிகரமாக, ஆரோக்கியமாக, மற்றும் முழுமையாக—ஞானம், மகிழ்ச்சி ஆகியவற்றால் சமச்சீராக்கப்பட்டு—இருக்க முடியும்.

உண்மையை அறிந்து வாழ்வதற்கான ஒரே வழி உள்ளுணர்வுச் சக்தியை வளர்ப்பதுதான். அப்போது வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருப்பதாக, மற்றும் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தாலும் சரி, அகக் குரல் உங்களை வழிநடத்திக் கொண்டிருப்பதாக நீங்கள் காண்பீர்கள்.

விலங்குகள் முதன்மையாக இயல்புணர்ச்சியாலும் சாதாரண மனிதன் தன் அகந்தையாலும் வழிகாட்டப்படும் அதே வேளையில், பெரும்-சுயத்துடன் ஐக்கியமாகி இருக்கும் யோகி ஆன்மாவால் வழிகாட்டப்படுகிறார்.

இந்த உள்ளுணர்வுச் சக்தியை ஆன்ம-அனுபூதிக்கு வழிநடத்திச் செல்லும் படிப்படியான அறிவியல்பூர்வ ஆழ்ந்த தியான வழிமுறைகளைப் பயில்வதன் மூலம் வளர்க்க முடியும்.

உள்ளுணர்வின் பண்புகள்

புலன்கள், எண்ணங்கள், அறிவுத்திறன் ஆகியவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டது…  

எவற்றின் வழியாக அறிவு உணர்வுநிலைக்குள் ஊடுறுவிப் பரவுமோ, அந்த வெளிவாசல்களே புலன்களும் மனமும். மனித அறிவு புலன்களின் வழியாக வடிகட்டப்பட்டு மனத்தால் புரிந்துகொள்ளப் படுகிறது. புலன்கள் தரவுகளை உணர்வதில் தவறிழைத்தால், அந்தத் தரவுகளின் புரிதலால் வரும் முடிவுகளும் தவறாகவே இருக்கும். தொலைவில் படபடத்துக் கொண்டிருக்கும் ஒரு வெண்ணிற வலைத்துணி ஒரு பிசாசைப் போலத் தோன்றலாம், மற்றும் ஒரு மூடநம்பிக்கையுள்ள நபர் அது ஒரு பிசாசு என்று நம்புகிறார்; ஆனால் அருகில் சென்று கவனிக்கும் போது அந்த முடிவின் பிழை வெளிப்படுகிறது. புலன்களும் புரிதலும் எளிதாக ஏமாற்றப்படுகின்றன ஏனெனில் அவற்றால் படைக்கப்பட்ட விஷயங்களின் மெய்யான இயல்பை, இன்றியமையாப் பண்பையும் சாரத்தையும், கிரகிக்க முடிவதில்லை.

மனிதனின் மிக உயர்ந்த திறன் பகுத்தறிவல்ல, உள்ளுணர்வு: புலன்களின் அல்லது பகுத்தறிவின் தவறிழைக்கும் முகமையிலிருந்து அல்லாது, ஆன்மாவிலிருந்து உடனடியாகவும் தன்னியல்பாகவும் தருவிக்கப்படும் ஞானத்தின் புரிதல்.

“உள்ளுணர்வு பெரும்பாலும் இதயத்தின் வழியாக அறியப்படும் உணர்வாக அமைதியான உணர்வுநிலையில் வெளிப்படுகிறது. அத்தகைய உணர்வு வரும்போது, அதன் வாயிலாக சரியான திசை மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை எனும் ஒரு திட்டவட்டமான உணர்வை நீங்கள் பெறுகிறீர்கள்.”

உள்ளுணர்வு அகத்தேயிருந்து வருகிறது; சிந்தனை, வெளியிலிருந்து வருகிறது. உள்ளுணர்வு மகா மெய்ம்மையின் ஒரு காட்சியை நேருக்கு-நேர் தருகிறது; சிந்தனை அதன் மறைமுகமான ஒரு காட்சியைத் தருகிறது. உள்ளுணர்வு, ஒரு விந்தையான ஒத்துணர்வின் மூலம், மகா மெய்ம்மையை அதன் முழுமையான தோற்றத்தில் பார்க்கிறது, அதே நேரத்தில் சிந்தனை அதைப் பல பகுதிகளாக வெட்டுகிறது.

…மற்றும் உணர்வை உள்ளடக்கியது

புலன்களுக்கும் அறிவுத்திறனுக்கும் அப்பால், உள்ளுணர்வு பெரும்பாலும் இதயத்தின் வழியாக அறியப்படும் உணர்வாக அமைதியான உணர்வுநிலையில் வெளிப்படுகிறது. அத்தகைய உணர்வு தியானத்தில் வரும் போது, நீங்கள் அதன் வாயிலாக சரியான திசை மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை எனும் ஒரு திட்டவட்டமான உணர்வைப் பெறுகிறீர்கள். மேன்மேலும் உங்களால் இந்த உள்ளுணர்வை அடையாளம் கண்டு பின்பற்ற முடியும். அதன் பொருள் நீங்கள் பகுத்தறிவைக் கைவிடுவது அல்ல. அமைதியான பாரபட்சமற்ற பகுத்தறிவாலும் உள்ளுணர்விற்கு இட்டுச் செல்ல முடியும். பொது அறிவைப் பயன்படுத்துங்கள். ஆனால் மமதையான அல்லது உணர்ச்சிபூர்வமான பகுத்தறிவு தவறான புரிதல்களுக்கும் தவறுகளுக்கும் வழிவகுக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தூய பகுத்தறிவு, தூய உணர்வு ஆகிய இரண்டும் உள்ளுணர்வுப் பண்புகளைக் கொண்டுள்ளன. தூய உணர்வு தூய பகுத்தறிவைப் போலவே தெளிவாகப் பார்க்கிறது. பெரும்பாலான பெண்களிடம் கூர்மையாக வளர்க்கப்பட்ட ஓர் உள்ளுணர்வு உள்ளது. தேவைக்கதிகமான கிளர்ச்சியில் இருக்கும்போதுதான் அவர்கள் உள்ளுணர்வுச் சக்திகளை இழக்கிறார்கள். இந்தச் சக்தி போதுமான அளவு வளர்க்கப்பட்டிருந்தால் தூய பகுத்தறிவும் உள்ளுணர்வே. இல்லையெனில், அனுமானம் தவறாக இருந்தால், முடிவும் தவறாகவே இருக்கும். தெளிவாகப் பகுத்தறியும் ஒவ்வொரு மனிதனும் உண்மையான உள்ளுணர்வை எப்போதாவது வளர்த்துக் கொள்வான்,அது ஒருபோதும் தவறு செய்யாது.

” தூய பகுத்தறிவு, தூய உணர்வு ஆகிய இரண்டும் உள்ளுணர்வுப் பண்புகளைக் கொண்டுள்ளன. தூய உணர்வு தூய பகுத்தறிவைப் போலவே தெளிவாகப் பார்க்கிறது”

நீங்கள் உணரவும் அத்துடன் சிந்திக்கவும் வேண்டும்; உங்கள் எண்ணங்களுடன் சேர்த்து உங்களுக்கு உணர்வு இல்லையென்றால், நீங்கள் சரியான முடிவை அடைவதில் வெற்றிபெறுவது எல்லா நேரங்களிலும் சாத்தியமில்லை. உணர்வு என்பது அனைத்து அறிவின் களஞ்சியமான உள்ளுணர்வின் வெளிப்பாடு. உணர்வும் சிந்தனையும், அல்லது பகுத்தறிவும், சமநிலையில் இருக்க வேண்டும்; அப்போதுதான் உங்கள் அகத்தேயுள்ள இறைவனின் தெய்வீகப் பிரதிபலிப்பு, ஆன்மா, அதன் முழு இயல்பையும் வெளிப்படுத்துகிறது. எனவே யோகம் ஒருவருக்கு தனது பகுத்தறிவு மற்றும் உணர்வின் சக்திகளை எவ்வாறு சமநிலைப்படுத்துவது என்று கற்பிக்கிறது. இரண்டும் சமமாக இல்லாத ஒருவர் முழுமையாக வளர்ச்சியடைந்த ஒரு நபர் அல்ல.

பகுத்தறிவு, உணர்வு ஆகியவற்றின் இணக்கமான சமநிலை உள்ளுணர்வுப் புரிதலுக்கும் பேருண்மை என்னவென்று அறியும் திறனுக்கும் வழிவகுக்கிறது. இந்தச் சமநிலையை அடைந்தவாறு, ஆண்களும் பெண்களும் தெய்வங்களாகின்றனர்.

வளர்ச்சியடையாத உள்ளுணர்வின் விளைவுகள்

நீங்கள் மெய்யாகவே என்னவாக இருக்கிறீர்கள் என்பது பற்றிய அறியாமை:

வளர்ச்சியடையாத உள்ளுணர்வு என்பது ஆன்மாவின் முன் வைக்கப்படும் ஒரு படிகமாகும், இது இரட்டை பிம்பத்தை உருவாக்குகிறது. ஆன்மாவே மெய்யான பிம்பம்; பிரதிபலிப்பு மெய்யல்ல – அகந்தை அல்லது போலியான ஆன்மா. உள்ளுணர்வு எவ்வளவு அதிகம் வளர்ச்சியடையாமல் இருக்கிறததோ, அவ்வளவு அதிகம் அகந்தையின் பிம்பம் சிதைவுற்றதாக இருக்கும். மனித வாழ்க்கை வளர்ச்சியடையாத உள்ளுணர்வு மூலம் கொண்டு வரப்படும் இந்தத் தவறான அடையாளத்தால் வழிகாட்டப்படும்போது, அது மாயையின் அனைத்து வரம்புகளுக்கும் தவறான கருத்துக்களுக்கும் உட்படுகிறது. ஆகவே பிழையின் ஒரு குழப்பமான இருப்பும் அதன் விளைவுகளும் தவிர்க்க முடியாதவை.

ஒரு மனிதன் தன் உடலால் அடையாளப் படுத்தப்படும்போது, அவன் பார்ப்பது, முகர்வது, சுவைப்பது, தொடுவது, கேட்பது, எடை, இயக்கம் ஆகியவற்றின் உணர்வுகளைத் தவிர வேறொன்றையும் உணர்வதில்லை…. உடல்சார் கனவுகள் மூலம் மகிழ்விக்கப்பட இறைவன் மனிதனைப் பூமிக்கு அனுப்பினார், உடலுடன் அடையாளப்படுத்திக் கொள்வதன் மூலம் தனது அமரத்துவ உணர்வுநிலையை மறைக்க அல்ல.

ஒருவரால் ஒரு போதுமான அளவிலான நேரத்திற்கு எண்ணங்களாலும் புலனுணர்வுகளாலும் அடையாளப்படுத்தப்படாமல், அதேநேரம் உணர்வற்ற நிலையில் இல்லாமல் இருக்க முடிந்தால், அவர் ஆன்மாவின் இயல்பை உள்ளுணர்வின் வளர்ச்சியின் வாயிலாக அறிவார்.

“வெற்றியைத் தேடும் எவரும் தனது முன்னேற்றத்திற்காக வெறுமனே புத்தகங்கள் மற்றும் கல்லூரிப் பணிகளைச் சார்ந்து இருப்பதற்குப் பதிலாக, அவரது மூளை உயிரணுக்களின் ஏற்றுக்கொள்ளும் தரத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்தினால் அதிக அளவில் சாதிப்பார்.”

“நான் மூச்சல்ல; நான் உடலல்ல, எலும்புகளோ அல்லது சதையோ அல்ல. நான் மனமோ அல்லது உணர்வோ அல்ல. நான் மூச்சு, உடல், மனம் மற்றும் உணர்வின் பின்னால் உள்ளது எதுவோ, அது.” நீங்கள் உடலோ அல்லது மனமோ அல்ல, இருப்பினும் நீங்கள் இருப்பதை முன் எப்போதையும் விட நன்றாக உணருகிறீர்கள் என்பதை அறிந்தவாறு, நீங்கள் இந்த உலக உணர்வுநிலைக்கு அப்பால் செல்லும்போது – அந்தத் தெய்வீக உணர்வுநிலையாக இருப்பவர்தான் நீங்கள். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திலும் வேரூன்றியிருப்பது எதுவோ, அதுவே நீங்கள்.

மேம்பட்ட மாணவர் தனது எண்ணங்கள் உள்ளுணர்வில் கரைந்து போகும் வரை ஆழமாக தியானம் செய்ய வேண்டும். சிந்தனை அலைகளற்ற உள்ளுணர்வு ஏரியில், யோகியால் ஆன்ம சந்திரனின் உலைவில்லாப் பிரதிபலிப்பைக் காண முடியும்.

மேம்படாத உள்ளுணர்வு மதிப்பீட்டில் பிழைகளையும் தவறான முடிவுகளையும் கொண்டு வருகிறது. . .

மதிப்பீட்டில் உள்ள பிழைகள் மேம்படாத உள்ளுணர்வைப் பெற்றிருப்பதன் ஒரு விளைவாகும். உங்களில் பெரும்பாலோருக்கு, நீங்கள் பெரிய மனிதராக இருக்கலாம், பெரிய காரியங்களைச் செய்யலாம்; ஆனால் உங்களிடம் உள்ளுணர்வுச் சக்தி இல்லாததால், அந்த மூலவாய்ப்புவளம் பெரும்பாலும் செயலற்ற நிலையில் இருந்திருக்கிறது என்ற உணர்வு இருந்திருக்கும்.

புலன்களால் வழங்கப்பட்ட தகவல்களால் உங்கள் மனத்தின் மதிப்பீடு வரையறுக்கப்படுகிறது என்பதால், உங்கள் புலன்கள் மாயைக்கு ஆட்பட்டால், ஒரு நபர் உண்மையில் அகத்தே எப்படி இருக்கிறார் என்பதை அறியாமல் அற்புதமாக இருப்பதாக நீங்கள் நினைக்கலாம். உங்கள் ஆருயிர்த் துணையை நீங்கள் கண்டுபிடித்துவிட்டதாக நீங்கள் நினைக்கலாம், எனவே நீங்கள் திருமண பந்தத்திற்குள் நுழைகிறீர்கள்; பின்னர் அப்பந்தம் விவாகரத்து நீதிமன்றத்தில் முடிகிறது. ஆனால் உள்ளுணர்வு ஒருபோதும் அத்தகைய தவற்றைச் செய்யாது. அது கண்களின் காந்த சக்தியையோ அல்லது ஒரு நபரின் கவர்ச்சியான முகத்தையோ அல்லது ஆளுமையையோ பார்க்காது, ஆனால் அந்த நபர் உண்மையில் எப்படிப்பட்டவர் என்பதை இதயத்தில் துல்லியமாக உணர்ந்து அறியும்.

. . அதே சமயம் மேம்பட்ட உள்ளுணர்வு வாழ்க்கையில் வெற்றியைக் கொண்டு வருகிறது:

முன்னேறிச் செல்லவும் தவறுகளின் துயரத்தைத் தவிர்க்கவும், எல்லாவற்றிலும் உண்மை என்ன என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் உள்ளுணர்வை வளர்த்துக் கொண்டால் மட்டுமே இது சாத்தியமாகும். அதுதான் இந்த விஷயத்தின் நடைமுறை உண்மை. அதனால்தான் எல்லாவற்றிலும் உள்ளுணர்வுச் சக்தியை வளர்க்கவும் பயன்படுத்தவும் வேண்டுமென நான் உங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். மற்றவர்களுடனான உங்கள் உறவுகளில், உங்கள் வியாபாரத்தில், உங்கள் திருமண வாழ்க்கையில், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும், உள்ளுணர்வு இன்றியமையாதது. உள்ளுணர்வுத் திறனை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பதால், நீங்கள் தவறான முடிவுகளை எடுக்கிறீர்கள், தவறான வணிகக் கூட்டாளிகளைத் தேர்ந்தெடுக்கிறீர்கள், மற்றும் தவறான தனிப்பட்ட உறவுகளில் சிக்கிக் கொள்கிறீர்கள்.

பொருள்சார் வழிகளால் கிடைக்கும் வெற்றியை மட்டுமே சார்ந்து இருப்பதில் எப்போதும் நிச்சயமற்ற தன்மை உள்ளது. ஆனால் உள்ளுணர்வு வழியால் கிடைக்கும் வெற்றி வேறானது. உள்ளுணர்வுக் கருத்து ஒருபோதும் தவறாக இருக்க முடியாது. இது ஓர் அகக் கூருணர்ச்சியின் மூலம், நீங்கள் தீர்மானித்த போக்கைப் பின்பற்றுவதன் மூலம் வெற்றிபெறப் போகிறீர்களா அல்லது இல்லையா என்பது உங்களுக்கு முன்கூட்டியே தெரியவரும் அந்த ஓர் உணர்வின் மூலம், வருகிறது.

பலர், உள்ளுணர்வு இல்லாததால், எதையும் உற்பத்தி செய்யாத நிதி வாய்ப்புகளில் நிறைய பணத்தை முதலீடு செய்கிறார்கள், மற்றும் இதன் விளைவாக அவர்கள் எல்லாவற்றையும் இழக்கிறார்கள். உள்ளுணர்வுச் சக்தியின் மூலம் நான் எடுத்த ஒவ்வொரு முடிவிலும் வெற்றி பெற்றிருக்கிறேன். அது ஒருபோதும் தோல்வியடையாது.

அறிவியல்பூர்வ மனிதன் அல்லது தொழிலதிபர் அல்லது வெற்றியைத் தேடும் எவரும் தனது முன்னேற்றத்திற்காக புத்தகங்களையும் கல்லூரிப் படிப்பையும் மட்டுமே சார்ந்து இருப்பதற்குப் பதிலாக, அவரது மூளை உயிரணுக்களின் ஏற்புத்திறனை அதிகரிப்பதில் கவனம் செலுத்தினால் மேலும் சாதிப்பார். உலகம் புத்தகங்கள் மற்றும் வெளிப்புற வழிமுறைகளுடன் தொடங்குகிறது, ஆனால் உங்கள் உள்ளுணர்வின் ஏற்புத்திறனை அதிகரிப்பதன் மூலம் நீங்கள் தொடங்க வேண்டும். எல்லா அறிவின் எல்லையற்ற பீடம் உங்களிடம்தான் உள்ளது.

உள்ளுணர்வை வளர்ப்பதற்கான வழிகள்

முதலில் பொது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். . .

உள்ளுணர்வு ஞானம், சாதாரண அறிவின் எல்லைகடந்து இருந்தாலும், ஒருவரை மற்றொரு உலகத்தவராகவோ அல்லது நடைமுறைக்கு ஒவ்வாதவராகவோ மாற்றாது; இது பொது அறிவின் முன்னோடி, ஒருவரின் சூழலுக்கான உள்ளுணர்வுப்பூர்வ எதிர்வினை மட்டுமே ஆகும்.

. . . பின்னர் உள்ளுணர்வுப்பூர்வ வழிகாட்டுதலுக்காக பிரார்த்தனையைச் சேர்த்துக் கொள்ளுங்கள்:

உங்கள் குறிக்கோள் மற்றும் அதை அடையத் தேவையான நடைமுறை வழிமுறைகள் பற்றி உங்களால் முடிந்த அனைத்தையும் கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் பணத்தை முதலீடு செய்தாலும், ஒரு தொழிலைத் தொடங்கினாலும், உங்கள் வேலையை மாற்றினாலும் சரி, நீங்கள் புலனாய்வு செய்து, ஒப்பிட்டு, மற்றும் உங்களது அறிவுத்திறனை அதன் எல்லைவரை பயன்படுத்திய பிறகு, அதனுள் அவசரப்பட்டுக் குதிக்க வேண்டாம். உங்களுடைய பகுத்தறிவும் விசாரணையும் ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டும்போது, தியானம் செய்து இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். அக அமைதியில், இதில் மேலே செல்வது சரியா என்று இறைவனிடம் கேளுங்கள். நீங்கள் ஆழ்ந்தும் நேர்மையாகவும் பிரார்த்தனை செய்தால், மற்றும் அதிலிருந்து ஏதாவது உங்களைத் திருப்புவதாகக் கண்டால், அதைச் செய்யாதீர்கள். ஆனால் உங்களிடம் தவிர்க்கமுடியாத ஆக்கப்பூர்வமான உந்துதல் இருக்கிறது, நீங்கள் பிரார்த்தனை செய்து, பிரார்த்தனை செய்து, மேலும் பிரார்த்தனை செய்து கொண்டே இருக்கிறீர்கள், இந்த உந்துதல் இன்னும் நீடிக்கிறது என்றால், மேலே செல்லுங்கள். வழிகாட்டுதலுக்கான உங்கள் பிரார்த்தனை நேர்மையானதாக இருக்க வேண்டும்; அதனால் நீங்கள் உணரும் எந்த உந்துதலும் உங்களுடைய சொந்தக் குறைபாடுள்ள ஆசையை வெறுமனே வலுப்படுத்துவதாக இல்லாமல் இறைவனிடமிருந்து வருவதாக இருக்கும்.

அதுவே என் உள்ளுணர்வின் நடைமுறைப் பயன்பாட்டை நான் வளர்த்த வழியாகும். எந்த முயற்சியையும் தொடங்குவதற்கு முன், நான் என் அறையில் தியான அமைதியில் அமர்ந்து அந்தச் சக்தியை என் மனத்தில் விரிவாக்கிக்கொண்டே செல்கிறேன். நான் என்ன சாதிக்க வேண்டுமோ, அதன்மீது என் மனத்தின் ஒருமுகப்பட்ட ஒளியை வீசுகிறேன்.

உங்களுக்கு வழிகாட்டும்படி எப்போதும் தந்தையிடம் கேளுங்கள். உங்கள் அகந்தை குருடாகவும், வலுவான குரலைக் கொண்டதாகவும் இருந்தால், அது உள்ளுணர்வை மூழ்கடித்து உங்களைத் தவறாக வழிநடத்தக்கூடும். ஆனால் பயனுள்ள ஒன்றைச் செய்வதற்கான உங்கள் முயற்சியின் மூலம் இறைவனை மகிழ்விக்க மட்டுமே நீங்கள் முயன்றால், அவர் உங்கள் பாதச் சுவடுகளை பிழையிலிருந்து நன்மைக்கு வழிநடத்துவார்.

தியானமே ஆகச் சிறந்த வழி. . .

அதிகாலையில் மற்றும் இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் செய்யப்படும் தியான வழியே உள்ளுணர்வின் வெளிப்பாட்டை விடுவிப்பதற்கான ஆகச் சிறந்த வழியாகும்.

“அமைதியற்ற எண்ணங்கள் நிற்கும் போது மட்டுமே ஒருவரால் உள்ளுணர்வின் மௌனத்தின் மூலம் தொடர்புகொள்ளும் இறைவனின் குரலைக் கேட்க முடியும் …. பக்தரின் மௌனத்தில் இறைவனின் மௌனம் கலைகிறது.”

நீங்கள் ஒரு பிரச்சனையை உள்ளுணர்ப்பூர்வமாகத் தீர்க்க விரும்பும் போதெல்லாம், நீங்கள் பாடங்களில் கற்பிக்கப்பட்டுள்ளபடி, முதலில் ஆழ்ந்த தியானத்தினுள் அல்லது மௌனத்தினுள் செல்லுங்கள். தியானத்தின் போது உங்களுடைய பிரச்சினைகளைப் பற்றி நினைக்க வேண்டாம். ஓர் அமைதியுணர்வு உங்கள் உடலின் அக இடைவெளிகளை நிரப்புகிறது என்று நீங்கள் உணரும் வரை – ஒரு தெய்வீக மகிழ்ச்சி ஆன்மாவின் அக இடைவெளிகளை நிரப்பும் வரை – மற்றும் மூச்சு அமைதியாகவும் ஓசையில்லாமலும் ஆகும் வரை தியானம் செய்யுங்கள். பின்னர் புருவமத்தியிலும் (கிறிஸ்து உணர்வு மையம்) இதயத்திலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்துங்கள். இறுதியாக, உங்கள் பிரச்சனைகளுக்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் அறியும்வண்ணம், உங்கள் உள்ளுணர்வை இயக்கும்படி இறைவனிடம் கேளுங்கள்.
தெளிவாகச் சிந்திக்கும் மனிதனை அளவிற்கதிகமாகச் சிந்திக்கும் மனிதனிடமிருந்து வேறுபடுத்த வேண்டும் …. உள்ளுணர்வு அமைதியில் மட்டுமே வெளிப்படுகிறது; வளர்ச்சியடையாத மனிதனில், அது பரபரப்பாக இயங்கும் மனம் மற்றும் அமைதியற்ற புலன்கள் ஓய்வாக இருக்கும் நேரங்கள் எனும் சிறு இடைவெளிகளின் வழியாக எப்போதாவது மட்டுமே எட்டிப் பார்க்கிறது. தெளிவாகச் சிந்திக்கும் நபர் அறிவுத்திறன் உள்ளுணர்வை மீறுவதை அனுமதிப்பதில்லை; அவரது பொறுமையான அமைதியால், அவர் சரியான தீர்மானங்களுக்கு வழிகாட்டுவதில் உள்ளுணர்வின் முழு இயக்கத்தையும் அனுமதிக்கிறார்.
உணர்வுநிலை மற்றும் தெய்வீக உணர்வின் உயர்ந்த நிலையை அடைய, மனத்தை தியானத்தின் வாயிலாக அதன் தொடர்ச்சியான அமைதியற்ற செயல்பாட்டிலிருந்து பின்வாங்கச் செய்வது அவசியம். அந்த உள்ளார்ந்த நிலையில், ஆன்மீகக் கூருணர்வுத்திறன் அல்லது உள்ளுணர்வு, விழித்தெழுகிறது.

சமாதி தியானத்தில் தனது உணர்வுநிலையையும் உயிர்ச் சக்தியையும் பருப்பொருளாலான உடல் மற்றும் புலன்களின் மண்டலத்திலிருந்து பின்வாங்கியிருக்கும் ஒரு மேம்பட்ட கிரியா யோகி, ஞான வெளிப்பாடுகளின் அக உலகத்திற்குள் நுழைகிறார். அவர் முதுகுத்தண்டு மற்றும் மூளையில் உள்ள பரம்பொருளின் ஏழு புனிதப் பீடங்களைப் பற்றி அவர் அறிய வருகிறார், மேலும் அவற்றிலிருந்து வெளிப்படும் அனைத்து அறிவையும் பெறுகிறார். இவ்வாறு உள்ளுணர்வுப்பூர்வ ஆன்ம-கண்ணோட்டத்தின் வாயிலாக உண்மையுடன் இசைந்திருந்தவாறு, அவருடைய ஆன்மீக மற்றும் பொருள்சார்ந்த கடமைமிகு நடத்தையின் அனைத்து அம்சங்களுக்கான சரியான வழிகாட்டுதலை அவர் எப்போதும் அறிகிறார்.

யோகா அறிவியலின் குறிக்கோள் சிதைவு இல்லாமல் அகக் குரலின் தவறிழைக்காத ஆலோசனையை கேட்கும் வண்ணம் மனத்தை அமைதிப்படுத்துவதாகும்.

உங்கள் உள்ளுணர்வின் வாயிலாக இறைவன் உங்களுடன் பேசுகிறார். . .

பரம்பொருள் ஒரு மனக் காட்சியில் ஓர் உருவத்தின் உதடுகளின் வாயிலாகவோ, அல்லது ஓர் உருவம் எடுத்துவந்த மனித உடலின் வாயிலாகவோ பேச வேண்டிய அவசியமில்லை, ஆனால் பக்தரின் விழித்தெழுந்த உள்ளுணர்வு ஊடகத்தின் வாயிலாக ஞானச் சொற்களைத் தெரிவிக்கலாம். இறைவன் ஒரு சன்னியாசியின் வடிவத்தில் வந்து ஒரு பக்தருக்கு ஆலோசனை வழங்கலாம், ஆனால் பொதுவாக அவன் பக்தரின் சொந்த உள்ளுணர்வுக் கண்ணோட்டத்தின் வாயிலாகப் பேசும் எளிய முறையை மேற்கொள்கிறான்.

இறைவனின் குரல் மௌனம் ஆகும். அமைதியற்ற எண்ணங்கள் நிற்கும் போது மட்டுமே ஒருவரால் உள்ளுணர்வின் மௌனத்தின் மூலம் தொடர்புகொள்ளும் இறைவனின் குரலைக் கேட்க முடியும். அது இறைவனுடைய வெளிப்பாட்டு வழிமுறையாகும். பக்தரின் மௌனத்தில் இறைவனின் மௌனம் கலைகிறது.

ஆன்மா, பரம்பொருள் ஆகியவற்றின் கூட்டுறவை அனுபவிக்க, எந்த பக்தரும் தனது உள்ளுணர்வை – கிரியா யோகத்தில் இருப்பதைப் போல பாரபட்சமற்ற சுயபரிசோதனை மற்றும் ஆழ்ந்த தியானத்தின் மூலம் – போதுமான அளவு வளர்க்கும் வரை திருப்தியடையக்கூடாது. ஒரு பக்தர் தினமும் குறைந்தபட்சம் குறுகிய கால அளவிற்கு தீவிரமாகத் தியானம் செய்து, வாரத்திற்கு ஓரிரு முறை மூன்று அல்லது நான்கு மணிநேரம் ஆழ்ந்த தியானம் செய்கிறார் என்றால், அவருடைய உள்ளுணர்வு ஆன்மாவிற்கும் இறைவனுக்கும் இடையே பரிமாறப்படும் பேரின்பமிகு ஞான உரையாடலை முடிவில்லாமல் உணர்ந்தறியப் போதுமான அளவு மிகவும் நுட்பமானதாக ஆவதை அவர் காண்பார். ஆன்மா இறைவனுடன், எந்த மனித மொழியின் கூற்றுக்களாலும் அல்லாமல், ஆனால் வார்த்தைகளற்ற உள்ளுணர்வுப்பூர்வ பரிமாற்றங்களின் வாயிலாக “பேசவும்” அவனுடைய மறுமொழிகளைப் பெறுவதும் ஆன அகமுகமாக்கப்பட்ட கூட்டுறவு நிலையை அவர் அறிவார்.

உண்மையான மதம் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது

உலகின் எல்லா நியாயமான உண்மையை வெளிப்படுத்திய மதங்களும் உள்ளுணர்வுப்பூர்வ அறிவை அடிப்படியாகக் கொண்டவை ஆகும். ஒவ்வொன்றும் ஒரு பொதுவான அல்லது புறச் சிறப்பியல்பையும் ஒரு மறைபொருளான அல்லது அக மையத்தையும் கொண்டுள்ளன. பொதுவான அம்சம்தான் எல்லோருக்குமான கருத்துப்படிவம், மற்றும் அது அதைப் பின்பற்றுபவர்களில் பெரும்பாலான மக்களுக்கு வழிகாட்ட தார்மீக போதனைகள் மற்றும் கோட்பாடுகளின் ஒரு தொகுப்பு, உறுதியான கொள்கைகள், விளக்கவுரைகள், விதிமுறைகள், வாடிக்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. மறைபொருள் அம்சம் இறைவனுடனான ஆன்மாவின் உண்மையான கூட்டுறவின் மீது கவனம் செலுத்தும் வழிமுறைகளை உள்ளடக்கியது. பொதுவான அம்சம் பலருக்கானது; மறைபொருள் அம்சம் ஆர்வமிக்க சிலருக்கானது. மறைபொருள் அம்சம்தான் உள்ளுணர்விற்கு, மகா மெய்ப்பொருளின் நேரடி ஞானத்திற்கு, வழிநடத்திச் செல்கிறது.

படைத்தவனைப் பற்றிய அறிவுசார் சொற்பொழிவுகள் இறைவனை உங்களுக்கு வழங்காது. ஆனால் ஒவ்வொரு நாளும் முயற்சியைச் செய்தவாறு, அவனை அகத்தே நாடுவதன் மூலம் அவனை நீங்கள் காண்பீர்கள். இறைவனுக்கான வழி அறிவுத்திறனின் வாயிலாக அல்ல, ஆனால் உள்ளுணர்வின் வாயிலாகக் கிடைக்கிறது.

பொருள்சார் வாழ்க்கையைப் பயின்று அதனுடன் பணி செய்யும் சாதாரண மனிதர்கள் தம் புலன் உணர்வுகளாலும் பகுத்தறியும் அறிவுத்திறனாலும் தமது புரிதலில் வரையறைப் படுத்தப்படுகின்றனர். அத்தகைய உண்மை அவர்களுக்கு விளக்கப்படும் போது கூட, வளர்ச்சியடையாத உள்ளுணர்வின் காரணமாக அவர்களுடைய வரையறைக்குட்பட்ட அறிவுத்திறனால் ஆவி பற்றிய விஷயங்களை உண்மையாக புரிந்துகொள்ள முடியாது. மாபெரும் அறிவுஜீவிகளும் புகழ்பெற்ற இறையியல் வல்லுநர்களும் ஆன்மாவைப் பற்றி நன்றாகப் படித்திருந்தாலும் கூட, அவர்கள் அதைப் பற்றி அரிதாகவே புரிந்திருக்ககூடும்!

மற்றொரு பக்கம், ஆழ்ந்த தியானத்தைப் பெற்றிருக்கும் படிக்காதவர்களால் கூட ஆன்மாவின் இயல்பை தமது நேரடியான அனுபவத்திலிருந்து தெளிவாக விளக்கிக்கூற முடியும். ஆன்மாவைப் பற்றிய அறிவுசார் ஞானத்திற்கும் தெய்வீகப் பெரும் சுயத்தின் உண்மையான அனுபூதிக்கும் இடையேயுள்ள இடைவெளியை உள்ளுணர்வு இணைக்கிறது.

அறிவுசார் மேதைகள், பல்மொழி வல்லுநர்கள், அறிவும் உய்த்தறியும் தத்துவமும் கொண்ட மெய்யாக நடமாடும் நூலகங்கள், ஆனால் தெளிவான கண்களையுடைய உள்ளுணர்வின் உதவியற்றவர்கள், சார்புத்தளத்தில் இயங்கும் ஆனால் தெய்வீக ஞானத்திற்கு தடைசெய்யும் மாயைக்கு ஆட்பட்ட ஓர் அறிவுத்திறனைக் கொண்டிருக்கின்றனர்.

உள்ளுணர்வால்தான் இறைவனது எல்லா அம்சங்களிலும் அவனை உணர்ந்தறிய முடியும். அவனைப் பற்றிய ஞானத்தை வெளிப்படுத்தக்கூடிய எந்தப் புலனும் நம்மிடம் இல்லை; எந்தச் சிந்தனையாலோ அல்லது அனுமானத்தாலோ அவன் உண்மையில் எப்படி இருக்கிறானோ, அப்படியே அவனை அறியவைக்க முடியாது, ஏனெனில் சிந்தனையால் புலன்களின் தரவுகளுக்கு அப்பால் செல்ல முடியாது; அதனால் புலன்களின் பதிவுகளை வரிசைப்படுத்தவும் விளக்கவும் மட்டுமே முடியும்.

இறைவன் மனத்திற்கும் அறிவுத்திறனுக்கும் அப்பாற்பட்டவன்…ஆன்மாவின் உள்ளுணர்வுச் சக்தியின் வாயிலாக மட்டுமே அவனுடைய உண்மையான இயல்பு உணரப்பட முடியும். நாம் அவனுடைய உணர்வுநிலையை, மனம், அறிவுத்திறன் ஆகியவற்றின் கருவாகிய உயர்-உணர்வுநிலையின் வாயிலாகக் காண வேண்டும். அவனுடைய அளவிறுதியற்ற இயல்பு ஆன்மாவின் உள்ளுணர்வுப்பூர்வ உயர்-உணர்வுநிலையின் வாயிலாக மனிதனுக்கு வெளிப்படுத்தப்படுகிறது. தியானத்தில் உணரப்படும் ஆனந்தம் எல்லாப் படைப்பின் மீதும் படர்ந்திருக்கும் சாசுவதப் பேரானந்தத்தின் இருப்பை வெளிப்படுத்துகிறது. தியானத்தில் காணப்படும் ஒளியே சூட்சும ஒளி, அதிலிருந்து உருவமுள்ள படைப்பு உருவாக்கப்படுகிறது. இந்த ஒளியைப் பார்த்தவாறு, ஒருவர் எல்லாவற்றுடனும் ஓர் ஒற்றுமையை உணருகிறார்.

“இறைவன் மனத்திற்கும் அறிவுத்திறனுக்கும் அப்பாற்பட்டவன்…ஆன்மாவின் உள்ளுணர்வுச் சக்தியின் வாயிலாக மட்டுமே அவனுடைய உண்மையான இயல்பு உணரப்பட முடியும்.”

உள்ளுணர்வு பேரண்ட மாயைக்கு முறிவு மருந்தான உண்மையான ஞானத்தை உருவாக்குகிறது

தன் உண்மையான கண்ணோட்டத்தை அறவே அழிக்கும் படியாக மனிதன் மாயையால் அத்துணை உன்மத்தமாயிருக்கிறான்; அதனால் அவனுடைய அறியாமை எனும் இருளால் எங்கும் அதிர்வுறும் இறைவனின் ஒளியைப் புரிந்துகொள்ள முடியாது. இறைவனின் சர்வவியாபகம் எனும் ஆன்மாவின் உள்ளார்ந்த உள்ளுணர்வுப்பூர்வ உணர்வைத் தெளிவற்றதாக்க மற்றும் குழப்ப, பேரண்ட மாயை (மாயா), தனிநபர்சார்ந்த மயக்கம் அல்லது அறியாமை (அவித்யா) ஆகிய இரண்டும் இவ்வாறு சேர்ந்து வேலை செய்கின்றன. தியானத்தில் இந்தப் புலன்சார்பு எனும் இருள் விலகிச் செல்கிறது மற்றும் ஒருவரை ஒரு முழுப் பிரபஞ்ச ஒளியாக வெளிப்படுத்தியவாறு, உள்ளுணர்வு மேலோங்குகிறது.
மனிதன் அந்த அகத் தெய்வீக உணர்வுநிலை எனும் இராஜ்ஜியத்தில் தங்கிவிடும் போது, ஆன்மாவின் விழித்தெழுந்த உள்ளுணர்வுக் கண்ணோட்டம் பருப்பொருள், உயிர்ச்சக்தி, உணர்வுநிலை ஆகியவற்றின் திரைகளைக் கிழித்து எல்லாவற்றின் இதயத்திலும் உள்ள இறை-சாரத்தை அம்பலப்படுத்துகிறது.
தியானத்தின் மூலமும் தெய்வீகப் போதனைகளின் பக்திப்பூர்வ நடைமுறையின் மூலமும் ஆன்மாவின் உள்ளுணர்வு அறிவாற்றலின் வளர்ச்சிக்கு வழிகாட்டத் துவங்கும் போதுதான் விவேகத்திற்குப் பதிலாக மாயையின் அழிவு தவிர்க்கமுடியாததாகிறது.

எல்லை-கடந்த தரிசனம்

இந்த வாழ்க்கை இறைவனால் எழுதப்பட்ட ஒரு தலைசிறந்த புதினம் ஆகும், மற்றும் மனிதன் அதைப் பகுத்தறிவால் மட்டுமே புரிந்துகொள்ள முயற்சி செய்தால் அவனுக்குப் பித்துப் பிடித்துவிடும். அதனால்தான் நான் உங்களை அதிக அளவு தியானம் செய்யும்படிக் கூறுகிறேன். உங்களுடைய உள்ளுணர்வு எனும் மந்திரக் கிண்ணத்தைப் பெரிதாக்குங்கள் மற்றும் அப்போது உங்களால் எல்லையற்ற ஞானம் எனும் பெருங்கடலைப் பிடித்து வைத்துக்கொள்ள முடியும்.

உடல்-உணர்வுநிலை எனும் பார்வைக் குறைபாட்டின் எல்லை-கடந்த பக்தர் தெய்வீக உள்ளுணர்வு எனும் மிகவும் மேன்மையான தொலைநோக்குத் திறனால் பார்க்கிறார், மற்றும் படைப்பின் மெய்ம்மறந்த உணர்வில் உள்ள முன்னால் புரிந்துகொள்ள முடியாத எல்லா இருமைகளும் பேரழகு மற்றும் பேரானந்தம் என்பதாகத் தீர்வு காண்கிறார்.

இந்த உண்மையை எத்துணை அழகான சொல்லாட்சியால் கீதை மெச்சுகிறது: “எண்ணற்ற தெய்வீக ஆடைகளாலும் மாலைகளாலும் ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு” – நட்சத்திரங்கள் அவனுடைய மகுட அணிகலன்கள்; பூமி அவனுடைய கால்மணை; மின்னல், இடி, புயல்கள், பிரளயம் ஆகியவை அவனுடைய போரணிகள் மற்றும் அவன் ஆனந்தத்தில் நடனமாடும் போது கேட்கும் அவனுடைய உடையின் சுடக்கொலியானது படைப்பு, பாதுகாப்பு, அழிவு ஆகியவற்றின் சுழலும் சந்தம். பொருள்சார் உலகில் உள்ள அனைத்தும் இறைவனின் பேரண்ட ஆடையை அழகுபடுத்தும் ஒரு கூடுதல் அலங்காரம்; இவையனைத்தின் பின்னால் மறைந்திருப்பதே தெய்வீக மகா மெய்ம்மை.

பொறுமையுடனும் விடாப்பிடியாகவும் தியானம் செய்யுங்கள். திரளும் அமைதியில், நீங்கள் ஆன்ம உள்ளுணர்வு உலகினுள் நுழைவீர்கள். யுக யுகங்களாக, இறை-ஞானத்தைப் பெற்றவர்கள் இந்த இறை-கூட்டுறவின் அக உலகிற்குச் செல்லும் உரிமை பெற்றோர் ஆவர். இயேசு கூறினார்: ” நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக் கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.”*

புலன்களின் கதவையும் அமைதியற்ற உலகத்துடனான அவற்றின் ஈடுபாட்டையும் மூடியவாறு, பெரும்-சுயத்தின் உள்ளே செல்லுங்கள், மற்றும் இறைவன் உங்களுக்கு அவனுடைய அனைத்து அற்புதங்களையும் வெளிப்படுத்துவார்.

*மத்தேயு 6: 6.

இதைப் பகிர