ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் சொற்பொழிவுகள் மற்றும் கட்டுரைகளில் இருந்து பயனுள்ள சிந்தனைகள்
இறைவனே ஆரோக்கியம், வளமை, விவேகம் மற்றும் நிரந்தர ஆனந்தத்தின் பேரூற்று. நாம் இறைத் தொடர்பினால் நமது வாழ்வை முழுமையடையச் செய்கிறோம். அவனின்றி வாழ்வு முழுமையற்றது. உங்களுக்கு வாழ்வு, வலிமை, விவேகம் ஆகியவற்றை அளிக்கும் எல்லாம் வல்ல மகாசக்தியின் மீது உங்களது கவனத்தைச் செலுத்துங்கள். இடைவிடாத உண்மை உங்கள் மனத்தினுள், இடைவிடாத வலிமை உங்கள் உடலினுள் மற்றும் இடைவிடாத ஆனந்தம் உங்கள் ஆன்மாவினுள் பாயவேண்டுமென்று பிரார்த்தனை செய்யுங்கள். மூடிய கண்களின் இருட்டிற்குச் சற்றே பின்னால் பிரபஞ்சத்தின் அற்புத ஆற்றல்களும் அனைத்துச் சிறந்த மகான்களும் எல்லையற்றவனின் முடிவற்ற தன்மையும் உள்ளன. நீங்கள் தியானம் செய்தால், எங்கும் நிறைந்திருக்கும் முழுமுதல் பேருண்மையை உணர்ந்தறிவீர்கள் மற்றும் உங்கள் வாழ்விலும் படைப்பின் அனைத்து மகிமைகளிலும் அதன் புதிரான செயற்பாடுகளைக் காண்பீர்கள்.

அறியாமை எனும் இருளிலிருந்து உங்களை விழித்தெழச் செய்யுங்கள். நீங்கள் மாயை எனும் உறக்கத்தில் உங்களது கண்களை மூடியிருக்கிறீர்கள். விழித்தெ ழுங்கள்! உங்களது கண்களைத் திறந்தால் இறைவனது மகிமையை—அனைத்து விஷயங்களின் மீதும் பரவியிருக்கின்ற இறையொளியின் பரந்தகன்ற அழகிய காட்சியை—நீங்கள் காண்பீர்கள். நீங்கள் தெய்வீக யதார்த்தவாதிகளாக இருக்க வேண்டுமென நான் கூறுகிறேன், பின்னர் இறைவனிடத்தில் அனைத்துக் கேள்விகளுக்குமான பதிலை நீங்கள் காண்பீர்கள்.

இலட்சக்கணக்கான மக்கள், அனைத்துச் செல்வங்களும் வங்கிகள், தொழிற்சாலைகள் மற்றும் வேலைகள், மற்றும் தனிப்பட்ட திறனால் வருவதாக நினைக்கிறார்கள். ஆயினும், அவ்வப்போது ஏற்படும் பெரும் மனச்சோர்வு, அறியப்பட்ட இயற்பியல் விதிகளைத் தவிர, வாழ்வின் உடல், மன, ஆன்மீக மற்றும் பொருள்சார்ந்த பகுதிகளை நிர்வகிக்கும் தெய்வீக விதிமுறைகள் உள்ளன என்பதை நிரூபிக்கிறது. மற்றவர்களின் ஆரோக்கியம், செல்வம் மற்றும் மகிழ்ச்சியைப் பறித்துக் கொள்வதன் மூலம் அல்லாது, மாறாக அவர்களின் மகிழ்ச்சியையும் நலத்தையும் உங்கள் சொந்த மகிழ்ச்சியிலும் நலத்திலும் சேர்ப்பதன் மூலம் ஒவ்வொரு நாளும் ஆரோக்கியமாகவும், பணக்காரராகவும், புத்திசாலியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க கடுமுயற்சி செய்யுங்கள். தனிநபர்களின், குடும்ப உறுப்பினர்களின் மற்றும் தேசங்களின் மகிழ்ச்சி முற்றிலும் பரஸ்பர ஒத்துழைப்பின் அல்லது சுயநலமின்மையின் விதிமுறைகளை மற்றும் பின்வரும் இந்தக் குறிக்கோளுக்கு ஏற்ப வாழ்வதைப் பொறுத்தது: "தெய்வத்தந்தையே, நாங்கள் எப்போதும் உன்னை நினைவுகூர வேண்டும் என்று எங்களை ஆசீர்வதிப்பாய். உன்னிடமிருந்தே எல்லா ஆசீர்வாதங்களும் பாய்கின்றன என்பதை நாங்கள் மறக்காமல் இருக்கும்படி அருள்வாய்."

உலகப் புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. இது நிதி அமைப்பை மாற்றும். அமெரிக்காவின் கர்ம உலகில் நான் ஒரு அழகான அடையாளத்தைக் காண்கிறேன்: உலகம் எந்த மாதிரியான அனுபவத்தைப் பெற்றாலும் சரி, அமெரிக்கா பெரும்பாலான மற்ற நாடுகளை விட நன்றாக இருக்கும். ஆனால் அதே சமயம் அமெரிக்கா பரவலான துயரத்தையும், துன்பத்தையும் மாற்றங்களையும் அனுபவிக்கும்.....
எனக்கு எதுவும் சொந்தமில்லை, ஆனால் நான் பசியாக இருந்தால் எனக்கு உணவளிப்பவர்கள் உலகில் ஆயிரக்கணக்கானோர் இருப்பார்கள் என்று எனக்குத் தெரியும், ஏனென்றால் நான் ஆயிரக்கணக்கானவர்களுக்கு கொடுத்திருக்கிறேன். அதே விதி பட்டினி கிடக்கப் போவது தான் என்று எண்ணாமல், ஆனால் தேவைப்படும் மற்ற நபரைப் பற்றி யாரெல்லாம் எண்ணுகிறார்களோ, அவர்களுக்காக வேலை செய்யும்….
உலகிற்குப் போர்வையளிக்கப் போதுமான பணம் உள்ளது, மற்றும் உலகத்திற்கு உணவளிக்கப் போதுமான உணவு உள்ளது. முறையான விநியோகம் அவசியம். மனிதர்கள் சுயநலவாதிகளாக இல்லாவிட்டால், யாரும் பசியுடனோ அல்லது தேவையுடனோ இருக்க மாட்டார்கள். மனிதன் சகோதரத்துவத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொருவரும் மற்றவர்களைத் தன் சொந்தமாக நேசித்தவாறு எல்லோருக்காகவும் வாழ வேண்டும். மவுண்ட் வாஷிங்டனில் யாராவது பசியுடன் இருந்தால், நாங்கள் அனைவரும் ஒன்று கூடி அவரை கவனித்துக்கொள்வோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அந்தச் சமூக உணர்வில் அனைத்து நாடுகளின் அனைத்து மக்களும் வாழ வேண்டும்.

தங்களுக்கு மட்டுமே வளத்தைத் தேடுபவர்கள் இறுதியில் ஏழைகளாவது, அல்லது மன ஒற்றுமையின்மையால் பாதிக்கப்படுவது நிச்சயம்; ஆனால் உலகம் முழுவதையும் தங்கள் வீடாகக் கருதுபவர்களும், குழு அல்லது உலக வளமைக்காக உண்மையாக அக்கறை செலுத்தி உழைப்பவர்களும், சூட்சும ஆற்றல்களைச் செயல்படுத்துகிறார்கள்; அவை இறுதியில் எங்கே அவர்களுக்கு முறைப்படி சொந்தமான தனிநபர் வளமையைக் காண முடியுமோ, அந்த இடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்கின்றன. இது ஒரு உறுதியான மற்றும் இரகசிய விதிமுறையாகும்.

வரவிருக்கும் உலக நெருக்கடியை நீங்கள் எவ்வாறு சந்திக்க முடியும்? எளிய வாழ்க்கை மற்றும் உயர்ந்த சிந்தனையை ஏற்றுக்கொள்வதே ஆகச் சிறந்த வழி
போதுமான வசதிகள் கொண்ட வசிப்பிடத்தை தேர்வு செய்யுங்கள், ஆனால் உங்களுக்கு உண்மையில் தேவைப்படுவதை விட பெரியதாக அல்ல, மற்றும் முடிந்தால் வரிகளும் பிற வாழ்க்கைச் செலவுகளும் நியாயமானதாக இருக்கும் பகுதியில். உங்கள் ஆடைகளை நீங்களே உருவாக்குங்கள்; உங்கள் உணவை நீங்களே தயாரித்துக் கொள்ளுங்கள். உங்கள் சொந்த காய்கறி தோட்டத்தை வளர்த்துக் கொள்ளுங்கள், மற்றும் சாத்தியமானால், முட்டைகளை உற்பத்தி செய்ய சில கோழிகளை வைத்துக் கொள்ளுங்கள். தோட்டத்தில் நீங்களே வேலை செய்யுங்கள், அல்லது தோட்டக்காரருக்கு கூலி கொடுப்பதில் நீங்கள் பணத்தை இழப்பீர்கள். பொய்யான மற்றும் விலையுயர்ந்த இன்பங்களைத் தேடாமல், வாழ்க்கையை எளிமையாக வைத்து, இறைவன் வழங்கியதை அனுபவியுங்கள். மனிதனின் மனதை கவர்ந்திழுக்க இறைவனின் மறைந்திருக்கும் இயல்பில் நிறைய இருக்கிறது. உங்கள் ஓய்வு நேரத்தை பயனுள்ள புத்தகங்களைப் படிக்கவும், தியானம் செய்யவும், சிக்கலற்ற ஒரு வாழ்க்கையை அனுபவிக்கவும் பயன்படுத்துங்கள். ஒரு பெரிய வீடு, இரண்டு கார்கள் மற்றும் உங்களால் கட்டமுடியாத தவணைப்பணமும் ஓர் அடமானமும், இவற்றை விட எளிமையான வாழ்க்கை, குறைவான கவலைகள் மற்றும் இறைவனை நாடும் நேரம் கொண்ட இது நல்லது, இல்லையா? மனிதன் நாட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும்; அது இறுதியில் நடக்கும். இது அவ்வாறு இல்லை என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறாக இருப்பதைக் காண்பீர்கள். ஆனால் உங்கள் வீடும் தொழிலும் எங்கே இருந்தாலும் சரி, ஆடம்பரங்களைக் குறையுங்கள், குறைந்த விலை ஆடைகளை வாங்குங்கள், உங்களுக்கு உண்மையில் தேவையான பொருட்களை மட்டும் நீங்கள் அளித்துக் கொள்ளுங்கள், உங்கள் உணவை நீங்களே தயாரித்துக் கொள்ளுங்கள், மற்றும் அதிக பாதுகாப்புக்காக பணத்தை தவறாமல் ஒதுக்கி வைக்கவும்.

இந்த உலகம் எப்பொழுதும் கொந்தளிப்பையும் இன்னலையும் கொண்டிருக்கும். நீங்கள் எதைப் பற்றிக் கவலைப்படுகிறீர்கள்? குருமார்கள் எங்கு சென்றார்களோ, அவர்கள் எங்கிருந்து உலகைக் கவனித்து உதவுகிறார்களோ, அந்த இறைவனின் தங்குமிடத்திற்குச் செல்லுங்கள். உங்களுக்காக மட்டுமல்ல, நம் இறைவன் மற்றும் தெய்வத் தந்தையால் உங்கள் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்ட அன்பர்கள் அனைவருக்காகவும் நீங்கள் என்றென்றும் பாதுகாப்பைப் பெற்றிருப்பீர்கள்.

இறைவனை உங்கள் ஆன்மாவின் மேய்ப்பராக ஆக்குங்கள். வாழ்க்கையில் இருண்ட ஒரு வழித்தடத்தில் நீங்கள் செல்லும் போது, அவனை உங்களுடைய தேடும் சுற்றொளியாக ஆக்குங்கள். அறியாமை எனும் இரவில் அவன் உங்களுடைய நிலவு. விழித்திருக்கும் நேரங்களில் அவன் உங்களுடைய சூரியன். மேலும் இந்த அழியும் வாழ்க்கை எனும் இருண்ட கடலில் அவன் உங்களுடைய துருவ நட்சத்திரம். அவனது வழிகாட்டுதலை நாடுங்கள். இவ்வுலகு அதன் ஏற்ற இறக்கங்களில் இது போன்றுதான் சென்றுகொண்டிருக்கும். எந்தத் திசையில் செல்வது என்று நாம் எங்கே தேடுவது? நமக்குள்ளே நமது பழக்கங்களாலும், நமது குடும்பங்கள், நமது நாடு அல்லது உலகம் ஆகியவற்றின் சுற்றுச்சூழல் பாதிப்புகளாலும் எழுப்பப்படும் பாரபட்சமான எண்ணங்களில் அல்ல: மாறாக அகத்தே உள்ள வழிகாட்டும் சத்தியத்தின் குரலிடம்.

நினைவில் கொள்ளுங்கள், மனத்தின் இலட்சக்கணக்கான தர்க்க நியாயங்களை விட ஓரிடத்தில் அமர்ந்து அகத்தே அமைதியை நீங்கள் உணரும் வரை இறைவன் மீது தியானம் செய்வது மிகப் பெரியதாகும். பிறகு இறைவனிடம் கூறுங்கள், “நான் கணக்கிலடங்கா வெவ்வேறு சிந்தனைகளைச் சிந்தித்தாலும், என்னால் இந்தப் பிரச்சனையை தனியாகத் தீர்க்கமுடியாது; ஆனால் அதை, நான் உன் திருக்கரங்களில் வைத்து, முதலில் உன் வழிகாட்டுதலை வேண்டி பின் அதன் தொடர்ச்சியாக ஒரு சாத்தியமான தீர்விற்கு பல கோணங்களில் சிந்திப்பதன் மூலம் என்னால் தீர்க்க முடியும்.” இறைவன் தனக்குத் தானே உதவி செய்து கொள்பவர்களுக்கு நிச்சயம் உதவிசெய்கிறான். தியானத்தில் இறைவனிடம் பிரார்த்தனை செய்த பிறகு உங்கள் மனம் அமைதியாகவும் நம்பிக்கையினால் நிரப்பப்பட்டும் இருக்கும் போது, உங்களது பிரச்சனைக்கு பலவிதமான தீர்வுகளை உங்களால் காணமுடிகிறது; மற்றும் உங்கள் மனம் அமைதியாக உள்ளதால், நீங்கள் மிகச்சிறந்த தீர்வைத் தேர்ந்தெடுக்கும் வல்லமை பெறுகிறீர்கள். அந்தத் தீர்வைப் பின்பற்றுங்கள், நீங்கள் வெற்றியை சந்திப்பீர்கள். இது, உங்கள் தினசரி வாழ்வில் சமய விஞ்ஞானத்தை பயன்படுத்துவதாகும்.

அச்சம் இதயத்திலிருந்து வருகிறது. எப்போதாவது ஏதேனும் நோய் அல்லது விபத்தின் அச்சத்தால் நீங்கள் ஆட்கொள்ளப்படுவதாக உணர்ந்தால், நீங்கள் ஆழமாகவும், மெதுவாகவும், தாளலயத்துடனும் பல முறை மூச்சை உள்ளிழுத்து, ஒவ்வொரு வெளிமூச்சிலும் தளர்வுற்றவாறு, மூச்சை வெளிவிட வேண்டும். இது சுழற்சி இயல்பாவதற்கு உதவுகிறது. உங்கள் இதயம் உண்மையாக அமைதியாக இருந்தால் நீங்கள் அச்சத்தை உணரவே முடியாது.

இறைவன் நமக்கு ஒரு பேராற்றல்மிக்க பாதுகாப்புக் கருவியை— இயந்திரத் துப்பாக்கிகள், மின்சாரம், விஷவாயு, அல்லது எந்த மருந்தையும் விடச் சக்திவாய்ந்தது—தந்துள்ளான், அதுவே மனம். வலுவடையச் செய்யவேண்டியது மனத்தைத்தான்….வாழ்க்கைச் சாகசத்தின் ஒரு முக்கியமான பாகம், மனத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அந்தக் கட்டுப்பட்ட மனத்தை இடையறாது இறைவனுடன் இசைவாக வைத்திருப்பதாகும். சந்தோஷமான, வெற்றியுடன்கூடிய வாழ்க்கையின் இரகசியம் இதுவே….அது மன ஆற்றலைப் பயிற்சி செய்வதாலும், தியானத்தின் மூலம் மனத்தை இறைவனுடன் இசைவுறச் செய்வதாலும் ஏற்படுகின்றது….நோய், ஏமாற்றங்கள், அழிவுகள் ஆகியவற்றை, வெல்வதற்கான மிகச் சுலபமான வழி, இறைவனுடன் இடையறாது இசைந்திருப்பதே.

உண்மையான இன்பம், நீடித்த இன்பம் இறைவனிடம் மட்டுமே இருக்கின்றது— “அவனைப் பெற்றிருந்தால் வேறு எந்தப் பேறும் பெரிய பேறு இல்லை.” அவனிடம்தான் ஒரே ஒரு பாதுகாப்பு, ஒரே ஒரு புகலிடம் மற்றும் நமது அனைத்து அச்சங்களிலிருந்தும் ஒரே ஒரு விடுதலை. உங்களுக்கு இவ்வுலகில் வேறு எந்தப் பாதுகாப்பும் இல்லை, வேறு எந்த சுதந்திரமும் இல்லை. ஒரே உண்மையான சுதந்திரம் இறைவனிடம் உள்ளது. எனவே, காலை மற்றும் இரவு தியானத்திலும், அத்துடன் நாள் முழுவதும் நீங்கள் ஆற்றும் எல்லாப் பணி மற்றும் கடமைகளிலும் அவனுடன் தொடர்புகொள்ள ஆழமாக முயற்சி செய்யுங்கள். இறைவன் இருக்குமிடத்தில் பயமில்லை, துயரமில்லை என்று யோகம் போதிக்கின்றது. வெற்றிகண்ட யோகியால் தகர்ந்து கொண்டிருக்கும் உலகங்களின் பேரொலியின் நடுவில் நிலைகுலையாமல் நிற்கமுடியும்; “இறைவா நான் எங்கு இருக்கின்றேனோ, அங்கே நீ வரவேண்டும்.”

ஆன்மாக்களின் ஒரு கூட்டமைப்புக்காகவும் ஓர் ஐக்கிய உலகிற்காகவும் நம் இதயங்களில் நாம் பிரார்த்தனை செய்வோம். இனம், மதம், நிறம், வர்க்கம் மற்றும் அரசியல் தப்பெண்ணங்களால் நாம் பிரிந்ததாகத் தோன்றினாலும், ஒரே இறைவனின் குழந்தைகளாகிய நம்மால் சகோதரத்துவத்தையும் உலக ஒற்றுமையையும் உணர முடிகிறது. மனிதனின் ஞானவொளி பெற்ற மனசாட்சியின் வாயிலாக இறைவனால் வழிகாட்டப்படும் ஒவ்வொரு தேசமும் ஒரு பயனுள்ள பகுதியாக இருக்கும் ஓர் ஐக்கிய உலகத்தை உருவாக்குவதற்கு நாம் உழைப்போமாக. நாம் அனைவரும் நம் இதயங்களில் வெறுப்பு மற்றும் சுயநலத்திலிருந்து விடுபட கற்றுக்கொள்ளலாம். தேசங்கள் ஒரு புதிய நாகரிகத்தின் வாயில் வழியாக கைகோர்த்துச் செல்லும்படியாக, அவற்றுக்கிடையே நல்லிணக்கத்திற்காக நாம் பிரார்த்தனை செய்வோம்.

எல்லாவற்றிற்கும் மேலாக, தியானத்தின் மூலம் இறைவனைத் தேடுவதில் நீங்கள் மும்முரமாக இருக்க வேண்டும் என்பதை நான் வலியுறுத்துகிறேன்.... இந்த வாழ்க்கையின் நிழல்களுக்குச் சற்றே கீழே அவருடைய அற்புதமான ஒளி உள்ளது. பிரபஞ்சம் அவரது இருப்பின் ஒரு பரந்த கோவில் ஆகும். நீங்கள் தியானம் செய்யும் போது, எல்லா இடங்களிலும் அவனை நோக்கிக் கதவுகள் திறக்கப்படுவதைக் காணலாம். நீங்கள் அவனுடன் தொடர்பு கொள்ளும்போது, உலகின் அனைத்து அழிவுகளாலுமே கூட அந்தப் பேரானந்தத்தையும் பெரும் அமைதியையும் பறிக்க முடியாது.