பரமஹம்ஸ யோகானந்தரின் வாழ்நாள் பணிகளில் ஒன்றானது, உலகின் அனைத்து உண்மையான மதங்களின் பின்னேயுள்ள ஒரே மெய்மையை நிலைநிறுத்தி, கீழை மற்றும் மேலை நாடுகளில் உள்ள உண்மையான சாதகர்களுக்கு, ஒவ்வொரு மனிதனிடத்தும் உள்ளார்ந்துள்ள இயல்பான தெய்வீகத்தைப் பற்றிய ஆழ்ந்த ஞானத்தை விழிப்புறச் செய்யும் வழி வகையான இறை – அனுபூதியின் உலகளாவிய விஞ்ஞானத்தை அளிப்பதாகும்.
பரமஹம்ஸரது சொற்பொழிவுகள் மற்றும் நூல்கள், உலக மதங்களின் ஒற்றுமையை நிலைநாட்ட அவர் பயன்படுத்திய வழிவகைகளில் ஒன்றாக இருந்தன. இப் படைப்புகளில் அவர் கீழை மற்றும் மேலை நாட்டு உயர் மறை நூல்களில் புதைந்துள்ள பரதத்துவ உண்மைகளை வெளிப்படுத்தி, எவ்வாறு இப்புனித நூல்கள் சாதகரை இறைவனுடனான ஐக்கியத்திற்கு ஒரே உலகளாவிய பாதையின் மூலம் வழி காட்டுகின்றன என்பதை காண்பித்துள்ளார்.
இந்தப் பக்கங்களில், யோகானந்தரது மிகவும் பாராட்டப்படும் புதிய ஏற்பாட்டின் நான்கு நற்செய்திகள், இந்தியாவின் பகவத் கீதை மற்றும் உமர் கய்யாமின் ரூபையாத் ஆகியவை மீதான விளக்க உரைகளிலிருந்து சில பகுதிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். (ரூபையாத், தனிப்பட்ட நிலையில் ஒரு மறைநூல் என்று கருதப்படாவிட்டாலும், இஸ்லாமியர் மரபையொட்டி சூஃபிகளால் போதிக்கப்பட்ட இரகசிய தெய்வீக உண்மைகளை உதாரணங்களுடன் விளக்கும் மறைபொருள் கவிதை சார்ந்த ஓர் நெஞ்சிற்கினிய படைப்பு).
நாங்கள் பரமஹம்ஸ யோகானந்தரது நூல்களிலிருந்து இன்னும் அதிக விஷயங்களை இப்பிரிவில் சேர்க்கப் போவதை தொடர்வதால் இப்பிரிவிற்கு மீண்டும் திரும்பி வருமாறு உங்களை வரவேற்கிறோம். இத்துடன் கூடுதலாக கீழை மற்றும் மேலை நாட்டு மறைநூல்களில் அடிப்படையாய் உள்ள ஒற்றுமை மீதான, யோகானந்தரின் குரு ஸ்ரீ யுத்தேஸ்வரரின் ஆழ்ந்த ஆய்வுக் கட்டுரையை நாங்கள் முன்னிலைப் படுத்துவோம்.
மேற்போக்காக எளிமையாகத் தோன்றும் போதனைகளில் இயேசு மிக ஆழ்ந்து – பெரும்பாலான மக்கள் புரிந்து கொள்வதை விட மிக அதிகம் ஆழ்ந்து சென்றார். . . . . அவற்றில், [அவரது போதனைகளில்] தியானத்தின் மூலம் தெய்வீக ஐக்கியத்தை அடையும் அறிவெல்லையைக் கடந்த வழியாகிய யோகத்தின் முழு விஞ்ஞானமும் உள்ளது.”
— பரமஹம்ஸ யோகானந்தர்
“பேரண்டத்தின் முழு ஞானமும் கீதையினுள் திணித்து வைக்கப்பட்டுள்ளது. ஒப்புயர்வற்ற முறையில் அறிவாழம் மிக்கதாக இருப்பினும், வெளிப்படுத்தக் கூடிய மொழியில் பொதிய வைக்கப்பட்டுள்ளன. . . . கீதை மனித ஈடுபாடு மற்றும் ஆன்மீகக் கடும் முயற்சிகளின் அனைத்து மட்டங்களிலும் புரிந்துகொள்ளப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. . . . எங்கேயேனும் ஒருவர் இறைவனிடம் திரும்பும் பாதையில் இருந்தால், கீதை தன் ஒளியை அந்தப் பயணப் பகுதியில் சிந்தும்.”
— பரமஹம்ஸ யோகானந்தர்

“அனைத்து தேசங்கள் மற்றும் காலங்களின் இறைத்தூதர்கள் தங்களது இறைத்தேடலில் வெற்றியடைந்துள்ளனர். உண்மையான ஞான ஒளி நிலை எனும் நிர்விகல்ப சமாதியில் இம் மகான்கள் நுழைந்து அனைத்து பெயர்கள் மற்றும் வடிவங்களுக்கு பின் உள்ள ஒப்புயர்வற்ற மெய்ப்பொருளை உணர்ந்தறிந்துள்ளார்கள். அவர்களது ஞானமும் ஆன்மீக அறிவுரையும் உலகத்தின் மறைநூல்களாக மாறியுள்ளன. இவை, பல்வகை வேறுபாடுடைய வார்த்தைகள் எனும் மேலாடைகளின் காரணமாக வெளிப்புறத்தில் வேறுபட்டாலும், இவையனைத்தும் பரம்பொருளின் ஒரே அடிப்படை உண்மைகளின் கருத்து வெளிப்பாடுகளே! சில வெளிப்படையாகவும் தெளிவாகவும், மற்றவை மறைபொருளாக அல்லது உருவக வடிவிலும் உள்ளன.
“என் குருதேவரும் ஞானவதாரமுமான செராம்பூரைச் சேர்ந்த சுவாமி ஸ்ரீ யுக்தேஸ்வரர் (1855 – 1936) சனாதன தர்மம் மற்றும் கிறிஸ்துவ மதம் சார்ந்த மறைநூல்களுக்கு இடையே அடிப்படையாக உள்ள ஒற்றுமையைப் பகுத்துணர்வதற்கு பெருமளவில் தகுதியானவர். புனித நூல்களை அப்பழுக்கற்ற தன் மனம் எனும் மேசையில் இருத்தி, அவரால் அவற்றை உள்ளுணர்வு சார்ந்த ஞானமெனும் கூரிய கத்தியால் கூறுபடுத்தி இறைதூதர்களால் ஆதியில் வழங்கப்பட்ட உண்மைகளிலிருந்து இடைச்செசொருகல்களையும் தவறான விளக்க உரைகளையும் பிரித்தெடுக்க முடிந்தது.”
— பரமஹம்ஸ யோகானந்தர்

“ ரூபையாத்தின் ஆன்மீக விளக்கவுரை பணியில் நான் ஈடுபட்டபோது, நான் பரவசத்துடன் வியப்புணர்வில் மூழ்கும் வரை, அப்பணி என்னை உண்மையின் ஓர் சிக்கலான முடிவற்றப் பாதையினுள் எடுத்துச் சென்றது. இந்தப் பாக்களில் பரதத்துவ மற்றும் நடைமுறை தத்துவங்கள் மீது இடப்படும் கய்யாமின் திரை எனக்கு தெய்வத்திரு புனித யோவானின் வெளிப்பாடுகளை நினைவூட்டுகின்றன.‘”
— பரமஹம்ஸ யோகானந்தர்