ஸ்ரீ தயா மாதாவின் இறுதி கிறிஸ்துமஸ் செய்தி

கிறிஸ்துமஸ்_செய்தி

"உங்கள் சொந்த ஆன்மீக விழிப்பு எனும் தொட்டிலில் புதிதாகப் பிறந்த இயேசுவில் வெளிப்பட்ட தெய்வீகக் கிறிஸ்து உணர்வுநிலையைக் கண்டு பூமியில் கிறிஸ்துவின் வருகையைக் கொண்டாடுங்கள் ..."

—Paramahansa Yogananda

ஆசீர்வதிக்கப்பட்ட தேவன் இயேசுவின் வடிவத்தில் கிறிஸ்து உணர்வுநிலையின் பிறப்பை நாம் மதிக்கும்போது, இந்தப் புனிதமான பருவத்தில் வலுவாக உணரப்பட்ட மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையால் உங்கள் இதயம் புதிதாக மேம்படுத்தப்படட்டும். இறைவனின் ஒளியை தூய்மையாகப் பிரதிபலிக்கும் அத்தகைய மகத்தானவர்களின் வருகை, நாமும் உலக-தளையுண்ட வாழ்க்கையிலிருந்து நம் ஆன்மாவின் வரம்பற்ற தன்மைக்கு ஒரு மறுபிறப்பை அனுபவிக்க முடியும் என்ற நமது நம்பிக்கையை பலப்படுத்துகிறது. நம் உணர்வுநிலையை விரிவுபடுத்தி, நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் மற்றவர்களுடனான நமது உறவுகளிலும் இறைவனின் நன்மை மற்றும் அன்பை வெளிப்படுத்துவதற்கான நமது எல்லையற்ற உள்ளார்ந்த ஆற்றலை அவர்களில் நாம் காண்கிறோம்.

இயேசு பிறந்ததிலிருந்து பல நூற்றாண்டுகள் வந்து, சென்றுவிட்டிருந்தாலும், அவருடைய உதாரணத்தின் சக்தியும் அவரது எங்கும் நிறைந்த அன்பும், ஏற்கும்திறனுள்ள ஆன்மாக்களை மாற்றுவதைத் தொடர்கிறது. அவரும்கூட அதிகமான சச்சரவு மற்றும் கொந்தளிப்பான காலத்தில் வாழ்ந்தார், ஆனால் தெய்வீகமாக எவ்வாறு எதிர்ச்செயலாற்ற வேண்டும் — இறைவனுடன் நம்மை அதிக அளவு இசைவித்துக்கொண்டு,அவன் உணர்வது போல் நாம் அனைவருக்காக உணர முடியும், அகத்தே அமைதியைக் கண்டு மற்றவர்களுக்கு அன்பையும் அமைதியையும் அளிப்பவராக இருப்பதற்காக நாம் இந்த உலகத்தின் இருமைகளுக்கு அப்பாற்பட்டு உயர முடியும் — என்பதை அவர் நமக்குக் காட்டினார்.

கிறிஸ்துவின் வாழ்க்கையைப் பற்றி ஆழ்ந்துநினைப்பதன் மூலமும், அவர் வெளிப்படுத்திய குணங்களைப் பின்பற்ற முயல்வதன் மூலமும், அவரிடத்திலும், இறைவனுடன் -இணைந்த அனைத்து ஆன்மாக்களிலும் வெளிப்படும் மெய்க்கருத்தை இன்னும் ஆழமாக கிரகித்துக்கொள்ள உங்கள் இதயத்தைத் திறப்பீர்கள். பிரபஞ்சத்தை தாங்கியுள்ள வலிமை அவரது இருப்பை நிரப்பியது; இருப்பினும் இறைவனின் சித்தத்தையும் அவனுடைய அன்பையும் முழுமையாக வெளிப்படுத்த அனுமதித்த அவரது பணிவு அதைவிட இன்னும் அதிகமாக இருந்தது. நமது அகந்தையின் தேவைகள் மற்றும் கருத்துகளின் எல்லைக்குள் நாம் வாழும் வரை, இறைவனிடமிருந்தும் மற்றவரிடமிருந்தும் நம்மைப் பிரிக்கும் தடைகளை எளிதில் உருவாக்குகிறோம். ஆனால் நாம் நம்மைப் பற்றி குறைவாக சிந்திக்கும்போது, நமக்கு வரும் எல்லா வழிகளிலும் அவருடைய ஞானத்தை அதிகமாக ஏற்றுக்கொள்ளும் திறனுடையவர்களாகிறோம், இதனால் நம் புரிதலையும் கருணையையும் விரிவுபடுத்துகிறோம். தெய்வத் தந்தையின் அன்பில் பாதுகாப்பாக, கிறிஸ்து பதவி அல்லது வெளிப்புற அங்கீகாரம் எதுவும் தேவை இல்லாமல் இருந்தார். அவர் சேவை செய்வதை மட்டுமே நாடினார். நாமும் அதையே செய்வதன் மூலம், கொடுப்பதன் மகிழ்ச்சியை அவர் அறிந்திருந்ததைப் போலவே, நம்மாலும் அறிய முடியும். கிறிஸ்து அனைவரிடமும் இறைவனைக் கண்டார் — தவறு செய்தவர்களிடமிருந்தும் கூட, ஏனெனில் அவர், அவர்களுடைய நிஜமான ஆன்மாவைக் காண்பதற்காக அவர்களது மனிதக் குறைபாடுகளுக்கு அப்பால் பார்த்தார். “என் இறைவன் அந்த ஆன்மாவில் இருக்கிறான்” என்பதை உணர்வதால் ஏற்படும் அன்பான, சீர்தூக்கிப் பார்க்காத மனப்பான்மையை நாமும் பயிற்சி செய்ய முடியும்.

ஒவ்வொரு வெளிச்செல்லும் செயலும் நம் உணர்வுகளை விரிவுபடுத்துகிறது, ஆனால் அமைதியற்ற எண்ணங்களும் உணர்ச்சிகளும் அடங்குகின்ற அமைதியின் ஆலயத்திற்குள் செல்வதன் மூலம் “எல்லாப் புரிதலையும் கடந்த அமைதியை,” கிறிஸ்து உணர்ந்த எல்லையற்ற அன்பை —இறைவன் எதனால் அனைத்து ஆன்மாக்களையும் தன்னிடம் திரும்ப ஈர்க்கின்றானோ அந்த அன்பை — நாம் முழுமையாக அனுபவிக்க முடியும். அகத் தொடர்பின் அத்தகைய ஆழம், படிப்படியாக வருகிறது, ஆனால் ஒவ்வொரு முயற்சியும் நம் வாழ்வில் அதிக அமைதியையும், அனுதாபத்தையும், இறைவனிடம் நெருக்கத்தையும் கொணர முடியும். நாம் விடாமுயற்சியுடன் இருந்தால், “எல்லையற்ற அருள், விவரிக்கவொண்ணா மகிமை, நிரந்தரப் பாதுகாப்பு ஆகியவற்றுடன் சொல்லமுடியாத இனிமையான ஒரு தொடர்பை” அடைய முடியும் என்று குருதேவர் நமக்குக் கூறினார். இந்தக் கிறிஸ்துமஸ் பருவத்தில் இறைவன் உங்களுக்கு அளிக்கும் விலைமதிப்பற்ற பரிசு அதுதான். இது ஒரு மகிழ்ச்சியான ஆன்ம-விழிப்புணர்வின் தொடக்கமாகவும், மற்றவர்களுடன் அவனது அனைத்தையும் அரவணைக்கும் அன்பையும் புரிதலையும் பகிர்ந்துகொள்ளும் சமயமாகவும் இருக்கட்டும்.

உங்களுக்கும் உங்களது அன்புக்குரியவர்களுக்கும் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட கிறிஸ்துமஸ்.

ஸ்ரீ தயா மாதா

பதிப்புரிமை © 2010 ஸெல்ஃப்-ரியலைசேஷன் பெலோஷிப். அனைத்து உரிமைகளும் பிரத்யேகமானவை.

இதைப் பகிர

Collections

More

Author

More

Language

More