ஜென்மாஷ்டமி 2015 க்கான ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதாவின் செய்தி

அன்புடையீர்,

பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் பிறந்த நாளான ஜன்மாஷ்டமியின் உலகளாவிய கொண்டாட்டங்களில் நாம் இணையும்போது, தெய்வீக அன்பின் அந்த மகத்தான அவதாரத்தின் ஆன்மாவை விழித்தெழச் செய்யும் பாடலை நீங்கள் உங்கள் இதயத்தில் கேட்பீர்களாக. கிருஷ்ணனுடைய புல்லாங்குழலின் மயக்கும் மெல்லிசை, நாம் இழந்த நமது சாசுவத வாழ்க்கை மற்றும் ஆனந்தம் எனும் ராஜ்யத்திற்கான ஆழ்ந்த ஏக்கத்தை எழுப்பியவாறு நம் ஆன்மாவின் பரிணாம வளர்ச்சியில் நம்மை முன்னோக்கி இழுக்கும், இறைவனின் அக அழைப்பைக் குறிக்கிறது. அதே சமயம், கிருஷ்ணனின் வாழ்க்கையும், அர்ஜுனனுக்கு அவன் வழங்கிய ஞான-வழிகாட்டுதலும், அந்த ராஜ்யத்தை மீண்டும் பெறுவதற்கு, அந்த இலக்கிலிருந்து நம்மைத் திசை திருப்ப முயற்சி செய்யும் அக மற்றும் புற சூழ்நிலைகளால் அச்சுறுத்தப்பட முடியாத ஓர் உண்மையான ஆன்மீக வீரனின் வீரம், ஒழுக்கம் மற்றும் திடமான உறுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை நமக்கு நினைவுபடுத்துகின்றன.

இன்றைய உலகில் உள்ள அனைத்தும் – தினசரி அழுத்தங்கள், பொறுப்புகள் மற்றும் அதிவேகமான மாற்றங்கள் – நம் கவனத்தை வெளிப்புறமாக இழுக்க சதி செய்வதாகத் தோன்றலாம். நம் கவனத்தைக் கோரும் விஷயங்கள் குறித்து அடிக்கடி மனச்சோர்வடைவது அல்லது அவற்றை எதிர்ப்பது மற்றும் வாழ்க்கை மட்டும் எளிமையாக இருந்திருந்தால் நாம் வெகு விரைவாக முன்னேறியிருக்க முடியும் என்று நினைப்பது மனித இயல்பின் தன்மையாகும். ஆனால் குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தர் நமக்கு கூறியபடி, “பகவத் கீதையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணனின் போதனையே நவீன காலத்திற்கும் மற்றும் எந்தக் காலத்திற்கும் ஏற்ற சரியான விடை: கடமையுணர்வுடன் செயல்படுதல், பற்றற்ற தன்மை, இறை-அனுபூதிக்கான தியானம் ஆகியவற்றிற்கான யோகமுறை.” இறைவனும் நம் கர்ம வினைகளும் நம்மை எங்கு வைத்திருக்கிறார்களோ அந்தப் போர்க்களம்தான், மாயாவை வெற்றி கொள்ளும் சமநிலையான வாழ்க்கைக் கலையை நாம் கற்றுக்கொள்ள வேண்டிய இடமாகும். இறைவன் நமக்கு உத்தமமான வெளிப்புறச் சூழ்நிலைகளுக்கு உத்தரவாதம் அளிப்பதில்லை. அதற்குப் பதிலாக அவன் நமக்கு அதைவிட சிறந்த ஒன்றைத் தருகிறான் – நாம் வலிமை மற்றும் ஆன்ம சுதந்திரத்தைப் பெறத் தேவையான வாய்ப்புகளை. வாழ்க்கையில் பல்வேறு சூழ்நிலைகள் தியானம் செய்வதற்கான உங்களுடைய திறனைப் பாதிக்கும் போது அல்லது உங்கள் பாதையில் தடைகளை ஏற்படுத்துவது போல் தோன்றும் போது, இறைவனின் மீது அதிக ஏக்கத்தை ஏற்படுத்த அந்தச் சூழ்நிலைகளைப் பயன்படுத்துங்கள். அகமுகமாக அவனுடன் இருப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பதற்கான உங்கள் உறுதிப்பாட்டை எழுப்புங்கள் – செயல்பாட்டின் போது அவனது இருப்பைப் பயிற்சி செய்யவும், அகக் கூட்டுறவின் குறுகிய காலத்தில் கூட உங்களால் அவனிடம் உங்களை முழுமையாகக் அர்ப்பணிக்க முடியும் என்று உங்கள் மனதைப் பயிற்றுவிக்கவும். வெளிப்புறச் சூழ்நிலைகளால் நம்மைப் பிணைக்க முடியாது. அவற்றின் மீதான நம்முடைய அகங்காரத்தின் எதிர்ப்பும் உணர்ச்சிப்பூர்வமான ஈடுபாடும்தான் மாய உலகில் நம்மைச் சிக்க வைக்கின்றன. பெரும்பாலும் விருப்பு-வெறுப்புகள், நமது செயல்களின் பலன்களின் மீது உள்ள பற்றினால் ஏற்படும் கவலைகள் ஆகியவையே மிகப்பெரிய கவனச்சிதறல்களாகும். நாம் அந்தப் பற்றுகளை விட்டுவிட்டு, இறைவனின் பாதத்தில் நம் அன்பின் எளிய பிரசாதமாக நமது சிறந்த முயற்சிகளை அர்ப்பணிக்கும்போது, நம் சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும் நாம் சுதந்திரம் மற்றும் மன அமைதியை, மற்றும் ஓர் அக சமநிலை உணர்வை பெறுகிறோம்.

இறைவனை நெருங்குவதற்கான ஒரு வழிமுறையாக ஒவ்வொரு சூழ்நிலையையும் காண்பதன் மூலம், நிலையான இறைச் சிந்தனையை நம் வாழ்வின் கட்டமைப்புடன் பின்னிப் பிணைந்திடுவோம், இறுதியில் நாம் அவனை விட்டு ஒரு கணம் கூட பிரிந்து இருக்க முடியாது என்பதை உணர்ந்தறிவோம். இறைவன் அர்ஜுனனிடம் கூறியது போல்: “எவன் என்னை எங்கும் காண்கிறானோ மற்றும் என்னில் அனைத்தையும் காண்கிறானோ, அவனுடைய பார்வையில் இருந்து நான் ஒருபோதும் விலகிச் செல்வதில்லை, என் பார்வையிலிருந்தும் அவன் ஒரு போதும் விலகிச் செல்வதில்லை.”

அந்தத் தெய்வீக வாக்குறுதி வாழ்க்கையின் அனைத்து அனுபவங்களிலும் உங்களை நிலைநிறுத்துவதையும் பலப்படுத்துவதையும் நீங்கள் உணர்வீர்களாக.

இறைவனின் மற்றும் குருதேவரின் தெய்வீக அன்பிலும் இடைவிடாத ஆசீர்வாதங்களிலும்,

ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதா

பதிப்புரிமை © 2015 ஸெல்ஃப்-ரியலைஸேஷன் ஃபெலோஷிப். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

இதைப் பகிர