சிலியில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து ஸ்ரீ தயா மாதாவின் சிறப்புச் செய்தி

மார்ச் 2010

அன்புக்குரியவர்களே,

சிலி மக்களிடமும், பேரழிவு தரும் பூகம்பம் மற்றும் அதன் பின்விளைவுகளால் அவதிப்படும் அனைவரிடமும் என் இதயம் அனுதாபம் கொள்கிறது. இந்தத் துயரமான நிகழ்வை அறிந்தவுடன், குருதேவரின் ஆசிரமங்களில் நாங்கள் அனைவரும் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்யத் தொடங்கினோம். உங்களில் பலர் அதையே செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன், அந்த முயற்சிகளைத் தொடர நான் உங்களை ஊக்குவிக்கிறேன். இத்தகைய பேரிடர்கள் திடீரென பலரின் வாழ்க்கையை சீர்குலைக்கும் போதும், இந்த உலகின் கணிக்க முடியாத தன்மையால் நமது பாதுகாப்பு உணர்வு அசைக்கப்படும் போதும் உண்டாகும் மன வேதனை மற்றும் அச்சத்தை எதிர்கொள்வதற்கான மிகவும் சக்திவாய்ந்த வழிகளில் பிரார்த்தனையும் ஒன்றாகும். இறைவனிடம் உள்நோக்கித் திரும்புவதன் மூலம், நமக்கு உதவும் அவருடைய அமைதி, அவருடைய தெய்வீக அன்பு மற்றும் அவரது எல்லையற்ற சக்தியுடன் நாம் இசைந்திருக்கிறோம். அவருடைய அருளாசிகளைப் பெறுவதற்கும் தனிவகைத் தேவையுள்ள ஆத்மாக்களுக்காக எப்போதும் ஆழ்ந்த கருணையை உணரவும், நம் இதயமும் மனமும் திறந்திருக்கிறது. குருதேவர் விளக்கியபடி, நாம் ஓர் உயர்ந்த யுகங்களுக்கு மாறக்கூடிய காலகட்டத்தில் இருக்கிறோம்; அந்த மாற்றத்தின் போது, நாம் சில சவாலான காலங்களை கடந்து செல்வோம் என்று அவர் முன்னறிவித்தார். ஆனால், இறைவனைப் பற்றி சிந்திக்க மற்றும், தங்களுடைய வாழ்வில் இறைவனின் சிறந்த அம்சங்களை வெளிப்படுத்த முயற்சி செய்யும் அனைவரது முயற்சிகளாலும் அந்தச் சிரமங்களைக் குறைக்க முடியும், இறுதியில் கடக்க முடியும் என்பதை அவர் வலியுறுத்தினார். இந்த மாய உலகின் ஒரு பகுதியாக எப்போதுமே இருந்து கொண்டிருக்கும் இருமைகளினால் நாம் அச்சுறுத்தப்பட வேண்டியதில்லை, மாறாக நாம் தேடும் இறுதிப் பாதுகாப்பும் நல்வாழ்வும், அகத்தே ஆழ்ந்து செல்வதால் மட்டுமே—நம்மை உருவாக்கியவரிடம் புகலடைந்து, நாம் எதிர்கொள்ளும் எந்த வெளிப்புற நிலைமைகளிலும் அவர் மீது முழு நம்பிக்கை வைப்பதால் மட்டுமே — கண்டறிய முடியும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். குருதேவர் எங்களிடம் கூறினார், “இறைவன் அன்புமயமானவன்; படைப்பிற்கான அவனுடைய திட்டம் அன்பில் மட்டுமே வேரூன்றி இருக்க முடியும்….மெய்ப்பொருளின் ஆழத்தை ஊடுருவியிருக்கும் முனிவர்கள் அனைவரும் கூறுவது: உலகம் முழுவதிற்கும் ஒரு தெய்வீகத் திட்டம் இருக்கிறது; அது மிக அழகானது, ஆனந்தமயமானது.” துணிவுடன் முன்னேறி, நமக்கும் மற்றவர்களுக்கும் உதவுவதற்கும், தேவை உள்ள அனைவருக்கும் பிரார்த்தனை செய்வதற்கும் நமது எண்ணங்கள் மற்றும் இச்சா சக்தியை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவதன் மூலம் அந்த தெய்வீகத் திட்டத்துடன் ஒத்துழைப்போம். அவ்வாறு செய்வதன் மூலம் நாம் நமது சொந்த ஆன்மாவின் பரிணாமத்தை துரிதப்படுத்துவது மட்டுமல்லாமல், இந்த உலகில் படிப்படியாக நிகழும் நேர்மறையான மாற்றத்திற்கும் பங்களிப்போம். நமக்கு வரும் ஒவ்வொரு அனுபவமும் நம் சாசுவத நண்பர் மற்றும் இரட்சிப்பாளாரிடம் நம்மை நெருங்கச் செய்வதில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது, மற்றும் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க நம் ஆன்மாவிற்குள் வரம்பற்ற வழிவகைகள் உள்ளன என்பதைக் கண்டறிய உதவுகிறது. நம் ஒவ்வொருவரையும் தன் பராமரிப்பில் வைத்திருக்கும் இறைவன், உங்கள் வாழ்க்கையை அவனுடன் இசைவித்துக் கொள்வதற்கான உங்கள் முயற்சிகளை ஆசீர்வதிக்கவும், இந்த உலகில் அவதிப்படும் அனைவரும் அவனுடைய குணப்படுத்தும் அமைதியை உணரவும் வேண்டிப் பிரார்த்தனை செய்கிறேன்.

இறைவன் உங்களை நேசிக்கிறார் மற்றும் ஆசீர்வதிக்கிறார்,

ஸ்ரீ தயா மாதா

இதைப் பகிர